வியாழன், 3 ஏப்ரல், 2014

Charu Nivedita: அப்பாவிகளை மடக்கி கொள்ளை அடிக்கும் வங்கிகள்


உப்புப் பெறாத சமாச்சாரம் என்பார்கள் அல்லவா?  அப்படிக் கூட இல்லை…  நம் உடம்பிலிருந்து உதிரும் முடி இருக்கிறதல்லவா, அதற்குக் கூட லாயக்கில்லாத சமாச்சாரம் என் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
யாரோ ஒரு பெண் அதிரம்மியமான குரலில் உங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்ட் வேணுமா என்றார்.  சரி என்றேன்.  கிடைத்தது.  அதை நான் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன்.  ஒருநாள் ஏதோ ஒரு விமான டிக்கட் எடுக்க பயன்படுத்தித் தொலைத்து விட்டேன்.  டெபிட் கார்டில்தான் எல்லா வேலையையும் செய்வேன்.  அன்றைக்கு என் போதாத காலம் க்ரெடிட் கார்டில் செய்து விட்டேன்.  15,000 ரூ.  மாதா மாதம் பில் வந்தது.  மாதா மாதம் கட்டினேன்.  ஆனால் சில மாதங்களில் மறந்து போவேன்.  அப்படி மறந்து போவதெல்லாம் வட்டி போட்டு, வட்டிக்கு வட்டி வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டி என்று இப்போது மாதம் கட்ட வேண்டிய தொகை பெரும் தொகையாகி விட்டது.  சரி, மொத்தமாகக் கட்டித் தொலைத்து இந்தக் கொடுமையிலிருந்து மீள்வது என்று முடிவு செய்து போன் செய்து கேட்டால் அது என்னை மனநோய் மருத்துவமனைக்கே அனுப்பி விடும் போல் தெரிகிறது.
ஒன்றரை மணி நேரம் ஆங்கிலத்தில் என்னென்னவோ நம்பரில் விதவிதமான வட இந்தியர்களிடம் பேச வேண்டி ஆயிற்று.  ஒரு ஆளுடன் பேசிய போது மெஷினுடன் பேசுகிறேனா அல்லது மனிதரிடம் பேசுகிறேனா என்றே சந்தேகம் ஆகி விட்டது.  கடைசியில் ஒன்றரை மணி நேரம் ஆங்கிலத்தில் அல்லாடிய பிறகு உங்கள் டெலிபேங்கிங் நம்பரைக் கொடு என்று கேட்கிறார்கள்.   டெலிபேங்கிங் நம்பர் இல்லை என்றால் அதை உருவாக்கச் சொல்கிறார்கள்.  அதை உருவாக்குவதற்குள் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று நினைக்கிறேன்.  கார்டை சரண்டரும் பண்ண முடியாமல் மாதாமாதம் வட்டியும் கட்டிக் கொண்டு இது என்னடா எழவு என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.  அவந்திகா வேறு வந்து என்னை இது குறித்து விமர்சித்ததால் அவளை வேறு மனநோயாளியைப் போல் திட்டினேன்.  இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியவில்லை.  யாரேனும் உதவி செய்ய முடியுமா?  பண உதவி என்று நினைக்க வேண்டாம்.  பணம் எப்படிக் கட்டுவது என்று தெரியவில்லை.  இந்த மாதாந்திரத் தொல்லையிலிருந்து எப்படி மீள்வது?
இதற்கிடையில் இன்னொரு பெரிய காமெடி என்னவென்றால், ஆக்ஸிஸ் வங்கியிலிருந்து ஒரு மெஸேஜ் வந்துள்ளது.  அந்த மெஸேஜ் : Thank you calling Axis Bank.  Please share your valuable feedback on the call on a scale of 5 to 1 (5 being excellent) by sending PBC 5/4/3/2/1 to 5676782.  ஒருவனை மன உளைச்சலில் தள்ளி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறீர்கள் என்று மெஸேஜ் அனுப்ப எந்த எண் என்று ஆக்ஸிஸ் வங்கியின் மெஸேஜில் விபரம் இல்லை.charuonline.com

கருத்துகள் இல்லை: