செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

நமக்கு தலைவாவும் வேண்டாம், தலைவியும் வேண்டாம் ! சகல படங்களுக்கும் ஜெயாவின் கிளியரன்சும் தேவைப்படும்

ஜெயா-விஜய் சந்திப்புதலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
ம்ஜானுக்கு வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம் ஒரு வழியாக இன்று ஆகஸ்டு 20 ஆவணி அவிட்டமன்று வெளியாகி விட்டது. அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று இனி யாரும் கேட்க முடியாது. ஆயினும் ஊடகங்களில் இந்த வெற்றி குறித்த பரபரப்பு செய்திகள் அதிகமில்லை. ஏற்கனவே இந்த பரபரப்பில் சண்டை, சச்சரவு என்ற விறுவிறுப்பு இல்லாமல் சரணடைவு, கண்ணீர் எனும் சோகங்கள் மட்டுமே திகட்டுமளவு இருந்ததால் ஊடகங்களின் கவனம் அதிகமில்லையோ என்னமோ.
தலைவாபடம் வெளியாவது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அரசை சர்வாதிகார அரசு, இங்கு கருத்து சுதந்திரமில்லை, ஒரு நடிகருக்கே இங்கே வாழ்வுரிமை இல்லை என்று ஏகப்பட்ட கோணங்களில் ஜனநாயகம் பேசியவர்களின் கருத்தையெல்லாம் கட்டுக்கதை என்று ஒரே போடாக வெட்டி விட்டார் விஜய். பாவம், சிறைக்குச் செல்லும் வெள்ளைக் காலர் கிரிமினல்கள் தங்களது முகத்தை மறைப்பது போல நமது கருத்துரிமை கந்தசாமிகளின் நிலை ஆகிவிட்டது. இனியாவது ஜனநாயகம் எனும் உரிமையை காஸ்ட்லியான நட்சத்திரங்களின் தயவில் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிஞர் பெருமக்கள் திருந்தட்டும்.

உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி மறுத்த பிறகு தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்தவமனை சேர்ந்தார் என்ற செய்தியின் மூலம் கண்ணீர் விடு தூது விட்டார்கள். இந்த கண்ணீர் உண்மையாகவும் இருக்கலாம். இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியின் படி “நான் இந்தப் படத்தின் ஊழியன் மட்டுமே, அதில் நடித்துக் கொடுப்பதோடு எனது பணி முடிவடைந்து விட்டது. இனி தயாரிப்பாளர் பாடு, எனினும் அவர் எடுக்கும் எந்த முயற்சிக்கும் துணை நிற்பேன்” என்று விஜய் தெரிவித்தாராம்.
ஆனால் படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்கையெல்லாம் தயாரிப்பாளரா வைத்தார்? அதற்கு மட்டும் நட்சத்திரங்களின் இமேஜ் என்று ஏதாவது சாக்கு சொல்லி அரசியல் கனவுகளுக்கு இடம் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் வைக்குமாறு ஆணையிடுவார்கள். எது எப்படியோ விஜய் இப்படிச் சொன்ன பிறகு தயாரிப்பாளருக்கு கண்ணீர் என்ன ரத்தமே கூட வந்திருக்கும்.
ஜெயலலிதா, விஜய், எஸ் ஏ சந்திரசேகர். சென்ற தேர்தலின் போது நடந்த சந்திப்பு
ஜெயலலிதாவுக்கும், விஜய்க்கும் ஆதரவாக இருக்கும் குமுதம் போன்ற பத்திரிகை முதலாளிகள் கூட தூது போய் விசயத்தை பேசி முடித்திருக்கலாம். இதையும் கூட ஒரு கிசுகிசுவாக குமுதம் ரிப்போர்ட்டரே வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் தரப்பு துக்ளக் சோவைப் பார்த்தாகவும், இந்த மாதிரி சினிமாவில் அரசியல் பேசுவது தனக்கு உடன்பாடில்லை, தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தன. ரஜினிக்கு இத்தகைய இடம் இருப்பதாக கொளுத்திப் போட்டதில் சோவுக்கு முக்கிய பங்குண்டு. அதில் பட்ட காயமோ இல்லை நண்டு, குஞ்சு, குளுவானெல்லாம் ஒவ்வொன்றாக இப்படி வருகிறதே என்ற கவலையோ, இல்லை தனது இந்துமதவெறி அரசியலுக்கு தோதான ஆள் பார்த்து சோ செய்கிறாரோ தெரியவில்லை.
எது எப்படியோ இளைய தளபதி தரப்பும், புரட்சித் தலைவி தரப்பும் ஏதோ டீல் பேசி முடித்திருக்கிறார்கள். அது என்ன என்பது உடனடியாக தெரியாது என்றாலும் பின்னால் தெரிய வரலாம். நன்கொடையா, தேர்தல் பிரச்சாரமா, அரசியல் ஆசை துறந்ததா, இல்லை காலில் விழும் மன்னிப்பா என்று அதை யூகிப்பது ஒன்றும் கடினமில்லை.
இதற்கு ஆதரமாக படத்தின் சுவரோட்டியில் இருந்த டைம் டூ லீட் எனும் வாசகத்தை தூக்கியிருக்கிருக்கிறார்கள். அதே போல படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்குகளையும் மியூட் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே மொக்கை படமென்று விமரிசன உலகில் வாங்கிக் கட்டியிருக்கும் தலைவா படத்திற்கு இத்தகைய எடிட்டிங்குகள் எந்த காயத்தையும் ஏற்படுத்திவிடாது. ஆனாலும் திருட்டு விசிடி மூலம் அதிகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதால் திரையரங்கு வந்து எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியெல்லாம் கிடையாது.
ஜெயலலிதாவுக்கு இருக்கும் பல்வேறு வேலை நெருக்கடிகளுக்கு இடையில் தலைவா பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பதாக விஜய் கூறுகிறார். ஜெயலலிதாவுக்கு இருக்கும் வேலை ‘நெருக்கடியை’ நாம் அறிவோம். ஆனால் அவர் தீர்த்து வைத்த பிரச்சினை என்ன என்பதுதான் தெரியவில்லை. ஏற்கனவே அரசும் சரி, போலிசும் சரி தலைவா படத்திற்கு தங்கள் தரப்பில் இருந்து எந்த தடையோ இல்லை உத்திரவோ எதுவும் கிடையாது என்றும் இது முழுக்க முழுக்க சினிமா உலகப் பிரச்சினை என்றே தீர்க்கமாக தெரிவித்திருந்தனர்.
சரணாகதி
சரணாகதி
குண்டு வைப்பதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய அந்த மாணவர் அமைப்பினருக்கு பயந்துதான் திரையரங்க முதலாளிகள் வெளியிட மறுத்தனர் என்பதை இன்று பிறந்த குழந்தை கூட நம்பாது. ஆனாலும் தலைவா படத்தை முடக்கிய வகையில் அந்த மாணவர் ‘அமைப்பினர்’ வரலாற்றில் இடம் பெற்றுவிட்டனர். அரசு, போலீசு ஆதரவு இருந்தால் எந்த ‘அமைப்பும்’ இப்படி வரலாற்றில் வந்து போகலாம்.
விஜய் தரப்பின் அரசியல் ஆசையும் அதன் பொருட்டு அவர்களுக்கும் அதிமுக தரப்பிற்கும் எழுந்த ஈகோ பிரச்சினையைத் தாண்டி வேறு பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நிறைய பார்த்திருக்கிறோம். இதைத் தீர்க்க விஜய் எழுத்தாலும், பேச்சாலும், மனதாலும் தாழ்படிந்து மன்னிப்பு மன்னிப்பு என்று பலமுறை தெரிவித்து விட்டாலும் அம்மா அத்தனை சீக்கிரம் கருணை காட்டவில்லை. 11 நாட்களுக்குப் பிறகுதான் படம் வெளியாகியிருக்கிறது.
ஆனால் முப்பதாம் தேதி வெளியாக வேண்டிய பிரியாணி படத்தின் பாடல்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி விட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீடியா வெளிச்சம் புடை சூழ கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு இருக்கும் பல்வேறு வேலை நெருக்கடிகள் என்பது சினிமாக்காரர்களது பிரச்சினையை பார்ப்பது பேசுவது தீர்ப்பதாகத்தான் இருக்கும் போலும்.
ஜெயலலிதா
தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
நம்மைப் போன்ற பாமரர்கள் சென்றால் கமிஷனர் அலுவலகத்து நாய் கூட சீண்டாது. சினிமா நட்சத்திரங்களுக்கோ உடனுக்குடன் நடவடிக்கை. இருப்பினும் நடிகர் கார்த்தி அந்த புகார் அளித்து விட்டு போனசாக அறம் பாடியிருக்கிறார். அதாவது பலபேர் உழைத்து உருவாக்கும் பாடல்களை, படத்தை இப்படி மனசாட்சியே இல்லாமல் இணையத்தில் வெளியிடுகிறார்களே, அதையும் ரசிகர்கள் தரவிறக்கி பார்க்கிறார்களே, மாரல் எத்திக்ஸ் எல்லாம் எங்கே போயிற்று என்று கேட்கிறார்.
5 அல்லது 10 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டிய ஒரு படத்தை சில பல நூறுகள் கொடுக்க வைத்து அல்லது பிடுங்கி வயிறு வளர்க்கும் தமிழ் சினிமா முதலாளிகளின் எத்திக்சோடு ஒப்பிட்டால் திருட்டு விசிடி எத்திக்செல்லாம் எம்மாத்திரம்? கார்த்தியை வெள்ளையும் சொள்ளையுமாக காட்டுவதற்கு சூடான் மின்விளக்கை ஏந்தி நிற்கும் லைட் மேனுக்கு ஒருநாள் சம்பளம் 400 என்றால் கார்த்தியின் ஒரு நாள் சம்பளம் சில பல இலட்சங்கள். இது இரண்டுமே உழைப்பு என்றால் சம்பளம் மட்டும் அப்படி வேறுபடுவது ஏன்?
நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க முதலாளிகள் என்று தமிழ் சினிமாவின் வலைப்பின்னல் முதலாளிகளால் ஆனது. இவர்கள்தான் சினிமாவால் கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த கோடிகளை தரும் தமிழக மக்கள்தான் சினிமா மாயையால் சினிமா மாந்தர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கிறார்கள். எனவே மற்ற தொழிலைப் போல சினிமாவையும் ஒரு தொழில் என்றோ இல்லை கலை என்றோ வரையறுக்க முடியாது. அது சட்டபூர்வமான சூதாட்டம். ஆனால் உணர்ச்சிகரமான ஆட்டமாகவும் இருப்பதால் அது எப்போதும மிகை உணர்ச்சியோடு மக்களிடம் பேசுகிறது. அதை நம்ப வைக்கவும் செய்கிறது.
போகட்டும், தலைவா படப் பிரச்சனை தீர்ந்த பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?
  1. இனி படங்களுக்கு முத்திரை மொழி வைக்கும் சினிமா படைப்பாளிகள் Time to lead-kill-act என்றெல்லாம் வைக்காமல் Time to fun-bun-sin இது மாதிரி வைப்பார்கள்.
  2. அரசியல் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமல்ல, பஞ்ச் டயலாக்குகளே இனி இருக்காது என்பது நிச்சயம். இந்த குத்து வசனங்கள் போய் கெட்டதைப் பார்க்காதே, கேட்காதே மாதிரியான காந்தியின் அகிம்சை பாணியிலான வசனங்கள் வரும்.
  3. அயர்னிங் மிஷன், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றின் விற்பனை குறையும்.
  4. இனி நட்சத்திரங்களின் பிறந்த நாள் அமெரிக்காவிலோ இல்லை ஆஸ்திரேலியாவிலோ அடக்கமாக, கமுக்கமாக கொண்டாடப்படும். இல்லையென்றால் பிறந்த நாள் கொண்டாட்டமே இருக்காது.
  5. ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர்களுக்கும் வருங்கால வட்டம், அமைச்சர், வாரியம் போன்ற கனவுகள் இருக்காது. இதனால் ரசிகர் மன்றங்கள் கைக்காசை போட்டு செலவழிக்கும் முதலீட்டை நிறுத்துவார்கள். ரிடர்ன்ஸ் இல்லையென்றால் யார் முதல் போடுவார்கள்?
  6. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அரசியல் கலந்த தமிழ்ப்படங்களை பார்க்கவே முடியாது. ஏற்கனவே அப்படி ஒன்று இல்லை என்பது வேறு விசயம்.
  7. இனி வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள் வியாழக்கிழமையே போயஸ் தோட்டத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கும்.
  8. அதே போன்று பேட்டி கொடுக்கும் நட்சத்திரங்களும் அரசியல், கோபம், கனவு, சமூக அக்கறை, உபதேசம் போன்ற அட்வைசு மொக்கைகளை புறந்தள்ளி விட்டு அஜால், குஜால், சில்பான்சு, ஙா…போன்ற உலக தத்துவங்களை மட்டும் பேசுவார்கள்.
  9. ஜெயலலிதாவை விமரிசக்கும் பத்திரிகைகளை பாதுகாப்பு காரணம் கருதி கடையில் விற்க கடைக்காரர்கள் மறுப்பு எனும் செய்தியும் வந்தாலும் வரும்.
  10. நட்சத்திரங்கள் ரசிகர்கள் உறவு மாறுவதால் பிளக்ஸ், சுவரொட்டி நிறுவனங்களுக்கு வருவாய் குறையும்.
  11. அமெரிக்க புஷ்ஷைக் கூட ஆதரிப்பேனே அன்றி தமிழ் சினிமா நட்சத்திரங்களை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன் என்று பின் நவீனத்துவ அறிஞர் பெருமக்கள் முடிவெடுப்பார்கள்.
  12. ஏற்கனவே ஆளும் வர்க்க அடிமையாக இருக்கும் தமிழ் சினிமா இனி அம்மாவின் அடிமை எனும் கூடுதல் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்.
  13. நட்சத்திரங்களின் இமேஜுக்கு கதை எழுதும் படைப்பாளிகள் இனி அது அம்மாவின் கோபத்திற்கு ஆளாகாமல் எழுதுவது எப்படி என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்வார்கள்.
  14. இறுதியாக அடுத்த தேர்தலில் முழு சினிமா நட்சத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் அதிமுகவிற்கு ஆதரவோ இல்லை அறிக்கையோ இல்லை பிரச்சாரமோ செய்ய வேண்டும். மறுத்தால் பிழைப்பு நடக்காது.
தலைவாவின் யோக்கியதை தலைவியால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைவியின் பாசிசம் தலைவாவின் அடிமைத்தனத்தால் அதிகரித்திருக்கிறது.
நமக்கு தலைவாவும் வேண்டாம், தலைவியும் வேண்டாம் vinavu.com

கருத்துகள் இல்லை: