வியாழன், 22 ஆகஸ்ட், 2013

அனில் அம்பானி இன்று ஆஜாராகியே தீரவேண்டும் ! சிபிஐ நீதிமன்றம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அனில் அம்பானி, அவரது மனைவியும், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும இயக்குநர்களில் ஒருவருமான டினா அம்பானி உள்பட 13 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அம்பானி தம்பதிக்கு சொந்தமான நிறுவனமும், 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனமுமான ரிலையன்ஸ் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. "அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரில் ஆஜராவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது' என்று சிபிஐ நீதிமன்றத்தில் அம்பானி தம்பதி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதையடுத்து, அனில் அம்பானி ஆகஸ்ட் 22-ஆம் தேதியும், டினா அம்பானி ஆகஸ்ட் 23-ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று புதிய சம்மன் அனுப்ப சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்றத்தில் அம்பானி தம்பதி தாக்கல் செய்த புதிய மனுக்களில், "சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் எங்களுக்கு மும்பையில் முக்கிய அலுவல் உள்ளது. அதனால் தில்லி வர இயலாது. வேறு தேதியில் ஆஜராக விரும்புகிறோம்' என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி புதன்கிழமை பரிசீலித்தார். அப்போது அவர், "அனில் அம்பானி வேறு தேதியில் ஆஜராவதற்கு பரிசீலிக்க முடியாது. அவர் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும். டினா அம்பானி மனு மீது வியாழக்கிழமை முடிவு செய்யப்படும்' என்று கூறினார்.
உடனே உத்தரவு கிடையாது: உச்ச நீதிமன்றம்
சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து அனில் அம்பானி தம்பதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இது தொடர்பாக கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய சிறப்பு அமர்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், "சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு, சம்மனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற சிறப்பு அமர்வின் உத்தரவால் மனுதாரர்களின் வழக்காடும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என அம்பானி தம்பதி உள்ளிட்ட சிலர் வாதிட்டுள்ளனர்.
அவர்களின் வாதம் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம். சிபிஐ நீதிமன்ற சம்மன் தொடர்புடைய அம்பானி தம்பதியின் கோரிக்கை மீது உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது' என்று கூறினர்.

கருத்துகள் இல்லை: