திங்கள், 19 ஆகஸ்ட், 2013

அதிகாரிகளிடம் பெற்றோரை காட்டி கொடுக்கம் இந்திய பெண்கள் ! இங்கிலாந்தில் இந்தியர்களின் கட்டாய திருமண விவகாரம்

லண்டன்:இங்கிலாந்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை
சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்று, அங்கேயே தங்கி குடியுரிமை பெற்று விடுகின்றனர். அங்கேயே அவர்களது குழந்தைகளும் வளர்கின்றன. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு சொந்த நாட்டில், சொந்தபந்தங்களில் இருந்தே மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். இதனால், ஆகஸ்ட்&செப்டம்பரில் வரும் கல்லூரி விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லலாம் என மகள்களை அழைத்துக் கொண்டு இந்தியா வரும் பெற்றோர், தங்களது மகள்களுக்கு சொந்த ஊரில் கட்டாய திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இது தவறானது என இந்தியா உள்ளிட்ட தெற்காசிய மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரசா பே உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்டாயத் திருமணம் செய்வது இங்கிலாந்து சட்டப்படி குற்றமாகும். கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மட்டும் 400 கட்டாய திருமண புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், பெற்றோர்களிடம் இருந்து தப்புவதற்காக இளம்பெண்கள் நூதன ட்ரிக் ஒன்றை பின்பற்றுகின்றனர். பெற்றோருடன் இந்தியா கிளம்புவதற்கு முன்பாக தங்களது உள்ளாடையில் சிறிய ஸ்பூனை மறைத்து வைத்து கொண்டு செல்கின்றனர். விமான நிலைய ஸ்கேன் சோதனையின் போது ஆடையில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பதாக கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனையடுத்து அந்த பெண்களை சோதனையிடுவதற்காக விமான நிலைய அதிகாரிகள் தனியே அழைத்து செல்வர். அப்போது இளம்பெண்கள் தங்களுக்கு பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைக்க தங்களது சொந்த நாடுகளுக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் சொல்லி விடுகிறார்கள். உடனே, அந்த பெற்றோரை அரசு அதிகாரிகள் எச்சரிக்கை செய்து இளம்பெண்களை கட்டாய திருமணம் செய்ய விடாமல் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். தற்போது இங்கிலாந்தில் இந்த சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: