வியாழன், 22 ஆகஸ்ட், 2013

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை ராகுல் புதிப்பிக்க ஆலோசிக்கிராருங்கோ ! கவிழ்பானேன் கவுழுவானேன் ?

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுகவுடன் மீண்டும்
கூட்டணியை காங்கிரஸ் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு குறித்து ராகுல் காந்தி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த மாதம் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய செயலர் சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகளின் போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், ஒரு பிரிவினர் திமுகவுடன் மீண்டும் கூட்டணியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தினர். ஆனால், மூன்றாவது பிரிவினர் திமுக, தேமுதிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஓரணியில் சேர்த்துத் தேர்தலை சந்திக்கலாம் என யோசனை தெரிவித்தனர். இந்த அணி நிச்சயம் மதச்சார்பற்ற அணி என்ற அடையாளத்துடன் தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று மூன்றாவது பிரிவினர் கூறியதை ராகுல் காந்தி ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து செயல்பட்டு மிகப்பெரிய சக்தியாக மாறும் என்ற ராகுலின் கனவு நீர்த்துப் போய் வருவதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் அணியினர் மூலம் ராகுல் காந்தி நடத்திய ரகசிய ஆய்வில் "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது குறித்து சிந்தித்தே பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது. அதற்கு தமிழக காங்கிரஸ் தலைமையின் தெளிவற்ற செயல்பாடே காரணம். ஆளும் அதிமுகவுக்கு சாதகமான பார்வையை ஞானதேசிகன் கொண்டிருப்பதாகவும், திமுகவுடன் அவர் எதிர்ப்பாக உள்ளதால் இணக்கமான சூழ்நிலை நிலவவில்லை. அதிமுகவில் சேர காங்கிரஸ் விரும்பினாலும் அதை ஏற்க ஜெயலலிதா தயாராக இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாகத்தான், தமிழ்நாட்டில் சரிந்து வரும் காங்கிரஸின் செல்வாக்கை நிலைநிறுத்த மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. தென் மாநிலங்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றின் மாநில கமிட்டிகளில் முக்கிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் பட்டியலை ஞானதேசிகன் கொடுத்த பிறகும் அதில் உள்ளவர்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காமல் ராகுல் காந்தி இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில்தான் அண்மைக் காலமாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களைத் தனித்தனியாக அழைத்து ராகுல் காந்தி பேசி வருகிறார். அந்த வரிசையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினரான எஸ். கார்வேந்தனை ராகுல் கடந்த மாதம் சந்தித்தார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சி சாராதவர் எனக் கூறிக் கொண்டாலும் அடிப்படையில் அவர் மூப்பனார், அவரைத் தொடர்ந்து ஜி.கே. வாசனின் ஆதரவாளர் என்பது காங்கிரஸார் அறிந்த ஒன்று.
அவரிடம் உள்கட்சி நிலைமை தொடர்பாக சில தகவல்களை ராகுல் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், சிதம்பரத்தின் ஆதரவாளராகவும் கருதப்படும் கே.எஸ். அழகிரியையும், திமுக ஆதரவாளர் என்று கருதப்படும் பீட்டர் அல்போன்சையும் ராகுல் காந்தி அண்மையில் சந்தித்துப் பேசினார்.
அவர் மூலம் டெல்டா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது, மாநில நிர்வாகிகள் பட்டியலில் யார், யார் இடம்பெற்றால் சரியாக இருக்கும் என்பது குறித்து ராகுல் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இவர்களைத் தொடர்ந்து, வரும் நாள்களில் மேலும் சில காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாற்றம் செய்ய ராகுல் காந்தி நடவடிக்கை மேற்கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை இணைத்துக் காங்கிரஸ் மூன்றாவது அணி அமைப்பது என்பது நிறைவேறாத கனவாகத்தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைமையகத்தின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தினமணி.com

கருத்துகள் இல்லை: