புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஏலம் நாளை துவங்குகிறது. இந்த ஏலத்தில் அரசிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்
வருவாயாக கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்குவதில், பெரும் ஊழல் நடந்ததாக
புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த
விசாரணையின்போது, விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி, தொலை தொடர்பு
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
யூனிநார்(22), வீடியோகான்(21), லூப்(21), ஐடியா(13) சிஸ்டெமா ஷியாம்(21),
எடிசாட் (15), எஸ் டெல்(6) மற்றும் டாடா டெலிசர்வீஸ்(3 சி.டி.எம்.ஏ.,)
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள்,இதில் ரத்தாயின.
ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கு, இந்த மாதம், 12 முதல், ஏல நடவடிக்கைகள் துவங்குகின்றன.இதில், பங்கேற்பதற்காக, பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், டெலிநார், டாடா டெலிசர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், மத்திய தொலை தொடர்பு துறையிடம் விண்ணப்பித்துள்ளதாக, தகவல் வெளியானது.
இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை துவங்குகிறது. இதில் அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலம் நாளை காலை 9 மணியளவில் துவங்குகிறது.
இந்த ஏலம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், தொலைத்தொடர்புத்துறையில் அரசு விரைவான முடிவு எடுத்துள்ளது. இதனால் நாளை ஏலம் நடைபெறுகிறது என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக