மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போய்விட்டது என இராவைய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விட்டர் ஐவன் இங்கு குறிப்பிட்டிருந்தார்.இதில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எல்லா இனங்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். எல்லா இனங்களும் சமத்துவமாக வரவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு இன்று (16) மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், பசு உன்னைக் கொல்ல வரும்போது அதனை நீ கொல்லலாம் என்றும் மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். அதை ஒத்ததுதான் புலிகள் இயக்க அழிப்பும். மனித வம்சத்துக்கே சாபக்கேடாக இருந்த இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது. அதனை அழிப்பது நியாயமாகவும் கடமையாகவும் இருந்தது.
இரண்டு மணி நேரத்துக்குள் எமது மக்கள் யாழ்.குடாநாட்டில் இருந்து விரட்டப்பட்டமை மிகவும் கொடிய நிகழ்வாகும். அச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு விரட்டப்பட்ட மக்களை அரவணைத்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அவசிய உதவிகளையும் செய்திருந்தேன்.
தீவகப்பகுதிகளுக்கு சென்று நான் மக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சகோதர முஸ்லிம் மக்களை மீளக்குடியேற வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அக்கால கட்டத்தில் அவ்வாறு வருவதற்கு அம்மக்கள் தயக்கம் காட்டினர். பின்னர் பயங்கரவாதிகளிடமிருந்து குடாநாடு விடுவிக்கப்பட்டிருந்தபோது ஏ – 9 பாதை மூடப்பட்டிருந்ததால் அம்மக்களால் வர இயலவில்லை. இப்போது அப்படியல்ல. தாராளமாக வரலாம்.
மக்களை மீளக்குடியமர்த்துவதில் அரசு இயலுமானவரை அக்கறையுடன் செயற்படுகிறது. என்றாலும் பல தேவைகள் இருக்கின்றன. பல நாடுகளின் தூதுவர்கள் இங்கே வருகை தந்துள்ளனர். அரசாங்கம் மேற்கொள்கின்ற இம் முயற்சிகளுக்கு இவர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்று எமது மக்கள் விரட்டப்பட்டமைக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாக இருந்தேனோ என என்னுகின்றேன்.
இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நானும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷவும், ரிசாட் பதூர்தீனும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் விசேட திட்டங்களை அமைத்துள்ளோம்.
எனவே எந்தளவிற்கு கூடிய விரைவில் இம் மக்களை மீளக்குடியமர்த்த இயலுமோ அந்தளவுக்கு விரைவாக குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்களான எ.எச்.எம். பௌசி, சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதூர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிகருணாநாயக்க, எ.எச்.எம். கிஸ்புல்லா, வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, மேல்மாகாண ஆளுநர் அளவு மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, வெளிநாட்டு தூதுவர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக