ஞாயிறு, 11 நவம்பர், 2012

ஒரு திருமண நிச்சயதார்த்தம்

ஞாயிற்றுக்கிழமை. தேதியும் 6ந்தேதி.மாதமும் 6வது மாதம்.தேதி மாதம் வருடம் கூட்டிப்பார்த்தாலும்   கூட்டு எண் 6 தான்.06-06-2010.காலையில் வீட்டிற்கு மீன் வாங்கிக்கொடுத்து விட்டு இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மொபைல் சிணுங்கியது.இங்கே  விஐபி க்ரூப்ஸ் மாக்ஸ்வெல் மேனேஜராயிருக்கும் என் கசின் போன் செய்தார். ’வசுந்தராவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.உடனே குடும்பத்தோடு கிளம்பி வாருங்கள். உங்க அண்ணனும் வந்திருக்கிறார்.’ உடனே என் பெரியம்மா மகன் முன்னாள் திமுக ராஜ்யசபா உறுப்பினரான வக்கீல்.R.சண்முக சுந்தரமும் பேசினார்.’துரை! உடனே கிளம்பி வா!’ திடீர் என்று போக வேண்டி நேர்ந்ததால்  நான் மட்டும் கிளம்பினேன்.ஸ்கூட்டரில் வேண்டாம். பஸ்.
அவினாசி ரோடு அணைப்புதூரை ஒட்டி பழங்கரை அருகில் கசின் செல்வராஜ் வீடு.அதற்கு எதிரே உள்ள மண்டபம்( கார்மெண்ட்ஸ் ஃபேர் நடக்கும் இடம்).அதில் தான் அன்று மாலை நேர நிச்சயதார்த்தம். இப்போது வீட்டில் உறவினர்களுக்கு விருந்து. http://rprajanayahem.blogspot.com/


அணைப்புதூரில் இறங்கி நடந்து  உறவினர் வீட்டுக்குச் சென்றேன். செல்வராஜ் தம்பதிகள் வரவேற்றார்கள்.என் அண்ணன் சண்முகசுந்தரமும் அண்ணியும் முகம் மலர’துரை வா!வா!’
சண்முகசுந்தரமும் செல்வராஜும் சகலைபாடிகள்.அண்ணியின் உடன் பிறந்த தங்கை தான் செல்வராஜின் மனைவியார். செல்வராஜ் தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும். மகளுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம்.
கணபதியும் நானும் கல்லூரிகாலத்தில் பார்த்துக்கொண்டது.அதன் பின் இன்று தான் சந்திக்கிறோம்.கணபதியும் என் அண்ணனின் மற்றொரு சகலைபாடி தான்.  ‘அந்தக்காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் கேபி என்று ’அண்ணாந்து தான்’ துரையைப் பார்ப்போம்!’ என்று என்னைப்பற்றி வியந்து சொல்கிறார்.இன்று இந்த கணபதி உயிருடன் இல்லை.
உறவினர்கள் என் மனைவியை,மகன்களை ஏன் அழைத்து வரவில்லை என கேட்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள்.சைதை துரை சாமி தான் மாப்பிள்ளையின் தகப்பனார். அப்போது அவர் சென்னை மேயர் கிடையாது.மாப்பிள்ளை வீட்டாருடன் அதிமுக எம்.பி.செம்மலையின் மனைவியாரும் இருந்தார்.சிறிது நேரத்தில் மாப்பிள்ளை தன் நண்பர்களோடு வந்தார். மாப்பிள்ளையின் ஒரு நண்பர் மிர்ச்சி சிவா. ’தமிழ்படம்’ ஹீரோ.
சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் பற்றி சின்னபையன் போல பரவசமாக பேசினார்.சைதை துரைசாமியிடம் நான் ‘பால் சாப்பிடக்கூடாது என்று நீங்கள் வலியுறுத்துவீர்களே!’ என்றேன். அவர் முகம் பிரகாசமாகியது. உடனே சண்முக சுந்தரம் ‘எங்க துரை கிட்ட இதான் ஸ்பெஷாலிட்டி! யாரு கிட்ட என்ன பேசனும்னு இவனுக்குத்தான் தெரியும்!’என்று சைதை துரை சாமியிடம் சொன்னார்.
(சென்ற சட்டசபை தேர்தலில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இருவரும் தொகுதிகளில் நாமினேஷன் ஃபைல் செய்த போது, கூட இருந்தவர் சண்முகசுந்தரம் தான்!ஸ்டாலினை எதிர்த்து நின்றவர் சைதை துரைசாமி!)
சைதை பால்,தயிர்,வெண்ணை இவற்றால் வரும் நோய்க்கூறுகள் பற்றி உற்சாகமாகச் சொன்னார்.சைதை துரை சாமி நல்ல Conversationalist.சைதை துரைசாமி இருக்கும் இடத்தில் சைதை துரைசாமி தான் பேசவேண்டும் என்ற சீரிய நோக்கு கொண்டவர்.
நடிகர் சிவாவிடம் என் மகன் கீர்த்தி ’தமிழ் படம்’ காட்சிகளின் ரசிகன்.அந்தப் படக்காட்சிகள் டி.வி.யில் வரும்போது ‘இந்த சீனைப் பாருப்பா’ என்று என்னை வற்புறுத்துவான் என்பதை ச்சொன்னேன். ’கீர்த்தி இப்போ இங்கே வருவாரா?’ என்று சிவா கேட்டார். சிறிது நேரத்தில் ” கீர்த்தி சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வருவாரா?”என்று மீண்டும் சிவா கேட்டார்.
நான்  கீர்த்திக்கு போன் செய்து “ இங்கே ’தமிழ் படம்’ ஹீரோ சிவா  வந்திருக்கிறார். உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறார்.பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி வாயேன்’ என்றேன்.அவன் கொஞ்சமும் யோசிக்காமல், ஆச்சரியப்படாமல்,அமைதியாக ’ போப்பா!நான் வரல.’ என்று சொல்லி விட்டான்.இப்படித்தான் கீர்த்தி.ஸ்திதப்ரக்ஞை மிக்கவன்!
சிவாவிடம் பேசியதில் பெரிய பின்புலம் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் சினிமாவில் கதாநாயகன் ஆகியவர் என்று தெரிந்தது.அவர் குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் ஸ்னானப்ராப்தி கிடையாது. நான் சொன்னேன்.”சினிமாவில் இப்படி self standing ஆக சாதித்தவர்கள் ரஜினியும்,அஜீத்தும்”

மதிய விருந்து முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள்.

மாலை நிச்சயதார்த்த நிகழ்வு- எதிரே தான் மண்டபம் என்பதால் எல்லோரும் நடந்தே கிளம்பினோம்.

மிக வேகமாக ஒரு கார் வந்தது. நின்றது.காரை ஓட்டியவர் கீழே இறங்கினார். அவர் அஜீத். சிரித்த முகத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்தவர்
என்னை தாண்டிப் போனவுடன் நின்று திரும்பி என்னன இரு கரம் கூப்பி வணங்கினார். முதல் வரிசையில் போய் அமர்ந்தார். சைதை துரைசாமியின் மகனுக்கு உற்ற நண்பனாம் அஜீத்.

சைதை துரைசாமியின் ஐ ஏ எஸ் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வென்ற மாணவர்கள்,மாணவிகள் ஒரே போல உடையணிந்து வந்திருந்தார்கள்.கண்கொள்ளாகாட்சி! பள்ளிக்குழந்தைகளை ப் பார்த்த பரவசம் ஏற்பட்டது. சைதை பெருமிதத்துடன் அந்த மாசு மருவற்ற மாணவ மாணவியரை ஒவ்வொருவராக அழைத்து “ இவர் ஐ.ஏ.எஸ் பரிட்சையில் 5 வது ராங்க். இந்த பெண் 7 வது ராங்க். இந்த தம்பி 13 வது ராங்க்” என்று அறிமுகம் செய்து வைத்தார்!

மாப்பிள்ளை மேடையேறினார். அங்கே எங்கள் உறவினர்கள் ஆண்களும் பெண்களும் அந்தச்சூழல் குறித்து விஷேச மாற்றம் எதுவுமேயின்றி இயல்பாக இருந்தனர். நான் அஜித்தை நெருங்கி பேசத்தொடங்கினேன். அந்த நேரம் முதல்வரைப் பார்த்து அஜீத் ‘ஐயா! மிரட்டுறாங்கய்யா!’ என்று சொல்ல ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிய விஷயம் பற்றி “ You broke the ice. You have done a wise thing,because there is no wisdom like frankness!" என்றேன்.அஜீத் எழுந்து நின்று ”நீங்க உட்காருங்க சார்!” என்று என் கையைப் பிடித்து அவரருகில் உட்காரவைத்தார். அஜித்துக்கு மறுபக்கம் தமிழ்படம் சிவா. வீடியோ கேமராக்கள் எங்களை நோக்கி சுழல ஆரம்பித்தன. போட்டோ ஃப்ளாஷ் வேறு. அஜீத்திடம் நான் சொன்னேன்.”மதியம் கூட  சிவாவிடம் உங்களைப்பற்றி குறிப்பிட்டேன்.அப்போது மாலை உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.” அஜீத் திரும்பி சிவாவிடம் “ நான் வருவது பற்றி சாரிடம் சொல்லவே இல்லையா?” என்றார். சிவா சிரித்தவாறு
‘ இல்ல. அவருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமே என்று தான் சொல்லவில்லை’ என்றார். நான் பெண்ணுக்கு சித்தப்பா என்று அஜீத் கேட்டுத்தெரிந்து கொண்டார். ‘எனக்கு மிகவும் பிடித்த அஜீத் படங்கள் ‘ஆசை’, ’காதல் கோட்டை’ என்பதைச் சொன்ன போது அவர் நடித்த நல்ல படங்கள் என்று வரிசைப்படுத்தி ’வரலாறு’ படத்தைக்கூட சொல்ல ஆரம்பித்தார்.
அடர்த்தியான தலைமுடி முழுக்க நரை.ஐந்து நாள் ஷேவ் செய்யாத வெள்ளி தாடியுடன் அஜீத்!
எனக்கென்னவோ அஜீத்துக்கு achievement depression தான் இனிமேல் என்று தோன்றுவதைச் சொன்னேன். அஜீத் சற்றே கண் விரித்து ”achievement depression வந்தாச்சு சார் ” என்றார். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதை சிவா அப்போது அஜீத்திடம் சொன்னார்.  ஒரு அரை மணி நேரம் இப்படிப் பேசிக்கொண்டிருந்திருப்போம். நிச்சயதார்த்த விழா ஆரம்பிக்கவே அஜீத் எழுந்து மேடைக்கு சென்று மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நின்றார். நான் பெண் வீட்டாருடன் மேடையில் நின்றேன்.

கணபதி உடனே” துரையும் அஜீத் தும் சேர்ந்து உள்ள புகைப்படம் நாங்க போட்டோகிராபர்களிடம் கேட்டிருக்கோம்!” என்று சிரித்தவாறு என்னைப் பார்த்து உரக்கச்சொன்னார்.

இரவு டின்னர் முடிந்ததும் என் அண்ணன் சண்முகசுந்தரம்,செல்வராஜ்,கணபதி மற்றும் உறவினர் அனைவரிடமும் விடைபெற்றபோது சைதை துரைசாமியிடம்,அஜீத்திடமும்,சிவாவிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அணைப்புதூர் வரை நடந்து வந்து இரண்டு பஸ் மாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

கருத்துகள் இல்லை: