சனி, 17 நவம்பர், 2012

பாரதிராஜா மீண்டும் மனுதர்மத்துக்கு ஆசைப்பட வேண்டாம்

பாரதிராஜாவா இப்படி?


புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர் களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்
(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)
பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.
இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினை வூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு. http://www.viduthalai.in/

வேதம் புதிது என்ற மிகச் சிறப்பான படம் ஒன்றைத் தயாரித்தார் பாரதிராஜா.
ஆனால் அந்தப் படத்தை வெளியிடு வதில் தடங்கல்; படம் ஒன்றை எடுத்து உரிய காலத்தில் அதனைத் திரையிட வில்லையென்றால் தயாரிப்பாளன் நெற்றியில் நாமம்தானே.
படத்தில் பார்ப்பான் ஒருவன் பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி, ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தோப்பனார் இறந்த பிறகு தேவர் குடும்பத்தில் வளரும் சூழல்.
தேவர் வேடத்தில் நடித்த சத்யராஜ் சக்கைப் போடு போட்டார். நக்கல் ஏகடி யம் எல்லாம் உண்டு.
பார்ப்பனர்கள் வட்டாரத்திலே சல சலப்பு! அப்பொழுது குடியரசு தலைவரோ பட்டுக்கோட்டை ஆர். வெங்கட்ராமய்யர்; முதல் அமைச்சரோ எம்.ஜி.ஆர். அவர்கள்.
முதல் அமைச்சரின் கதவைத் தட்டினார்கள். முதல் அமைச்சர் எந்தத் துருப்பைப் பயன்படுத்தினார், குடியரசு தலைவரிடம் தெரியுமா?
இந்தப் படத்தை உடனடியாகத் திரையிட அனுமதிக்காவிட்டால், பிரச் சினையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கையிலே எடுத்துக் கொள் வதாக இருக்கிறார் என்று போட்டாரே ஒரு போடு! அப்புறம் என்ன? வேதம் புதிது திரையரங்குகளில் ஓட ஆரம்பித்து விட்டது.
இவை எல்லாம் மாஜி ராஜாக்களுக்கு வசதியாக மறந்து போய் விட்டதா? இப்பொழுது அவாளின் நேசமும், பாசமும் இரட்டைக் குதிரைகளாக வாசலில் வந்து நிற்கிறதா?
டி.வி. நேஷனல் புரோகிராமில் முதல் மரியாதை இடம் பெறுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு, பிறகு அது இடம் பெறாமல் போய் விட்டது. இதுகுறித்துப் பலர் பலவிதமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏன் இடம் பெறவில்லை என்பது எனக்கும் புரியாத மர்மம். டி.வி.யில் முதல் மரியாதையைப் போடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்னுடைய இண்டர்வூவியூ வேண்டும் என்று சொல்லி ஸ்ரீ வித்யாவைக் கொண்டு என்னை ஒரு இண்டர் வியூவும் எடுத்தார்கள். குறிப்பிடப்பிட்டி ருந்த தேதியில் முதல் மரியாதை ஒளிபரப்பாகவில்லை. விசாரித்தேன். படத்தை இரண்டு மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டியிருப்பதாகச் சொன் னார்கள். படத்தில் நீங்கள் கை வைத்து விட வேண்டாம். நானே குறைத்துத் தருகிறேன் என்று படத்தைத் தருவித்து, நானே இரண்டு மணி நேரத்துக்கு எடிட் பண்ணிக் குறைத்துக் கொடுத்தேன். மறுபடியும் குறிப்பிட்ட தேதியில் படம் ஒளிபரப்பாகவில்லை.
என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்ததில், நீங்க மேலே போய் ட்ரை பண்ணுங்க சார் என்று சொன்னார்கள். இங்கே இருக்கிறவர்கள்தான் அப்படிச் சொன் னார்கள். ட்ரை பண்ணுங்கள் என்றால் எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ லாபியாம். அப்படியெல்லாம் போக நான் விரும்பவில்லை; அது எனக்கு அவசியமும் இல்லை.
(தமிழ்நாடு திரைப்படப் பத்திரிக் கையாளர் சங்கத்தில் நடைபெற்ற கலந் துரையாடலில் பாரதிராஜா உதிர்த்த சில கருத்துக்கள்)
வெள்ளிமணி (தினமணி இணைப்பு) 9.1.1987 பக்கம் 2
இன்னொரு சேதியும் உண்டு.  அது என்னவாம்? பாரதிராஜா பூடக மாகச் சொன்னாரே - அந்த லாபி என்பது என்ன? சங்கராச்சாரியார் வரை வால் நீண்டு கொண்டு போகுமே - அந்த அக்ரகார லாபிபற்றி எப்படி எல்லாம் அவருக்கே உரித்தான முறையில் பற்களை நறநற என்று கடித்து இருப்பார்? - இவையெல்லாம் மறந்து போயிற்றா?
இன்றைக்குத் தமிழர்களுக்கு வந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறந்து விடலாமா?
பார்ப்பன எதிர்ப்பு என்னும் பாம்பின் நச்சுக்கடிக்கு ஆளாவது பெரியாரும் - திரா விடர் இயக்கமும்; அவற்றின் பலனைக் கூசாமல் நெளியாமல் அனுபவிப்ப வர்களோ பாரதிராஜா உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் என்பதை மறந்து விட்டால் அதன் பொருள் பார்ப்பனப் போதை அவர்களின் தலையில் ஏறி விட்டதுதான் பழசை மறந்து விட்டதுதான்!
பாரதிராஜா என்ன சொல்லுகிறார்?
திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்தினது போதும்; பிரா மணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தா தீங்க - என்று வரலாற்று அறிஞர் பாரதி ராஜாவே கூறி விட்டார். நம்ப வேண்டியது தான்.
இவர் கூற்றுப்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற நம்மினத் தலைவர்கள் ஏமாத்துக்காரர்கள் என்று சொல்லும் பொழுது பார்ப்பனர்களுக்குப் பால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக் கும். இப்படி சொன்னதற்காக பாரதி ராஜாக் களுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
மலம் எடுப்பவர்களுக்கு அதன் வாடை மரத்து விட்டது போல. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர இழிவில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு அந்த இழிவு என்பது ருசியாகக்கூட இருக்கும்.
ஈரோட்டிலே இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் யோக்கியதையை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் (11.11.1939 அன்று)
இன்று பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும் நம் மக்கள் அதற்குப் பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல; நாம்தான்; நம் முடைய அறிவீனம் என்ற அசுத்தத் தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும்.
தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ ஆரியனை (பார்ப் பானை) தமிழன் என்று தன்னுடைய நாட்டான் என்று கருதினானோ, அன்றே தமிழனுக்கு உள மாற்றமும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் ஆண் பெண் அடங்கலும் உண்மை வைப் பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின என்று ஈரோட்டிலே இனவுணர்வுடன் சுட்டிக் காட்டினார். ஈரோட்டு ஏந்தல் (11.11.1939).
எப்பொழுது பாரதிராஜா வாயால் பிராமணன் என்று வந்ததோ, அந்தக் கணமே தன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று பொருள்.
தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதே! என்று தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்தது என்ன விளை யாட்டா?
பார்ப்பான் தமிழ் பேசுகிறானாம் - அதனால் அவன் தமிழனாம்.
அறிஞர் அண்ணா தான் மிக அழகாகச் சொன்னார். ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆங்கிலேயர்களைவிட அழகாக ஆங்கிலம் பேசுவார் -அவரை சில்வர் டங்க் சீனிவாசய்யர் என்று கூடச் சொல்லுவதுண்டு - அதற்காக அவர் என்ன ஆங்கிலேயர் ஆகி விட்டாரா? என்று கேட்டதைத்தான் மெத்த படித்த பாரதிராஜா அவர்களுக்கு நினைவூட்டு கிறோம்.
பாரதிராஜாக்களை கேட்கிறோம். நெடுஞ்செழியன் என்றும், கரிகாலன் என்றும், அறிவுடை நம்பி என்றும், அன்பழகன் என்றும், அறிவழகன் என்றும், எழிலரசன் என்றும், குலோத் துங்கன், தமிழரசன் என்றும், தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேண்மா என்றும், தமிழ்ச்செல்வி என்றும், கலைச் செல்வி என்றும், செந்தாமரை என்றும், அன்பரசி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியுமா?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டபோது தினமலர் என்ன எழுதியது தெரியுமா -_ பாரதிராஜா அவர்களே?
காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் வாரமலர் 13.6.2004) என்று பார்ப்பன ஏடு எழுதியதை அறிவாரா பாரதிராஜா?
பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு ஏற்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளாரே? என்பது கேள்வி.
அதற்குத் துக்ளக் பார்ப்பனனின் பதில் என்ன தெரியுமா?
நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவ மதிக்காமல் இருந்தால் போதுமே (துக்ளக் 18.8.2009) என்று எழுதினாரே - தெரியுமா பாரதிராஜாக்களுக்கு?
அந்தச் சிலை அவமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையைத் தானே வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார் சோ!
சென்னை மாநகர மேயர் வணக்கத்துக்குரிய மா. சுப்பிரமணியம் அவர்கள் சென்னை - கடை வீதிகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து, அவரே வீதியில் இறங்கிப் பணியாற்றிய போது அதனை மொழி நக்சலிசம் என்று சொன்ன துக்ளக் சோ ராமசாமிகள் தமிழரே என்று நம்பச் சொல்லுகிறாரா அன்புக்கும், பாராட்டுக்கும் உரிய பாரதிராஜா?
இயக்குநர் பாரதிராஜா அவர்களே! காமராசரை - ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று சொன்னது எந்த அர்த் தத்தில்? அதே காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் சொன் னது எந்தப் பொருளில்? இரண்டுக்கும் இடையே இழைந்தோடும் அந்த மெல்லிய இழையைக் காண ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.
இன்றும்கூட கோயில்களில் வழி பாட்டு உரிமை தமிழில் என்றால் எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந் தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் - _ இப்பொழுது சென்று சட்டத்தை முடக்கியவர்கள் முப்புரிப் பார்ப்பனர்கள் என்பது பச்சைத் தமி ழரான பாரதிராஜாக்கள் தெரிந்து கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தும் ராஜாக்களே! பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டவர் நடக்கும் உரிமைக்கு வழி செய்தது யார்?
அரசு பதிவேடுகளில் சூத்திரர்கள் (பார்ப்பனர்கள் வேசி மகன் மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று இருந்ததை நீக்கியது யார்?
சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தது தெரியுமா? அதனை மாற்றியது யார்?
மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று வைத்திருந்த நிபந்தனையை தூக்கி எறிந்தது எந்தக் கட்சி ஆட்சி யில்?
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கா விட்டால் மானியம் கிடையாது; பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் உரிமம் ரத்து என்ற ஆணை பிறப்பித்தது திராவிடர் இயக்க ஆட்சி என்ற அரிச்சுவடியாவது தெரியுமா?
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கல்வி கற்க இட ஒதுக்கீடு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எந்த அமைச்சரவை?
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடம் வந்தது யாராலே?
இதெல்லாம் தான் திராவிடர் இயக்கம் -_ அதன் தலைவர்கள் _ ஆட்சி _ மக்களை ஏமாற்றிய காரியங்களா?
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் ஏமாற்றுக் காரரா?
அடக்கம் வேண்டாமா? நாக்கு இருக் கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?
தந்தை பெரியார் மறைந்தபோது தலையங்கம் தீட்டாத ஒரே பார்ப்பன ஏடு இந்து என்பதை அறிவீர்களா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்னை மணியம்மையார் மறைவுகளை மரணக் குறிப்பு வெளியிடும் (Obituary) பகுதியில் வெளியிட்டு அவமானப்படுத் திய இந்து வகையறாக்கள் தமிழர்கள் ஆகி விட்டார்களா?
பத்திரிகை உலகில் ஜாம்பவனாகிய சி.பா. ஆதித்தனார் இறந்ததை உள்ளே மறைவு செய்தியாக வெளியிட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்தது தெரியுமா?
திராவிடர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் எந்த வகையிலும் பொருள் வேறுபாடு கிடையாது. திராவிடர்கள் என்பது ஆரியர்கள் இயக்கத்திற்குள் உள்ளே நுழையக் கூடாது என்கிற தற் காப்பு ஏற்பாடு - எத்தனை விளக்கங் களைக் கூறி விளக்கி இருப்பவர் வெண் தாடி வேந்தரான தந்தை பெரியார்.
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டால் அவர்களின் குடும்பப் பெயரோ, பெற் றோர்களின் பெயர்களும் மாறி விடுமா?
ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர் களையோ இழிவுபடுத்த வேண்டாம்!
பாரதிராஜாக்களிடம் இதனை எதிர் பார்க்கவில்லை. வருத்தம்தான்! என்ன செய்வது? தந்தை பெரியாரையும் அவர்தம் திராவிட இயக்கத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொன்ன பிறகு சொரணையற்றவர்களாக நாம் இருக்க முடியாதே!
பாரதிராஜாக்கள் மீண்டும் மனுதர்மத் துக்கு முத்தமிட ஆசைப்பட வேண்டாம். இனம் எது? பகை எது என்று தெரிந்து கொள்வதில்கூட தடுமாற்றமா? தமிழர் உணர்வு இதுதானா?
- மின்சாரம்

கருத்துகள் இல்லை: