தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
காதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க
ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன்
ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.
காரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில்
ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.
ஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம்
முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக
முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.
மாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண்
தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு
முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.
இதுகாறும் ஜாதி மறுப்பு திருமணம்
என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாமே,
பெண் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவராக இருப்பதாலேயே நடந்திருக்கிறது.
இந்த ஜாதி இந்து உளவியலின்
அடிப்படையில்தான் சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு
முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த
படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை
தாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.http://mathimaran.wordpress.com/
மதம், ஜாதி எதுவானாலும் அது சார்ந்த
பண்பாடு, ஒழுக்கம், மானம், அவமானம் எல்லாம் பெண்களை மய்யமிட்டே
இயங்குகிறது. அதனால்தான் ஒரு ஆணோடு சண்டை ஏற்படும்போது, முதல் வார்த்தையே.
அவன் குடும்பத்து பெண்களை இழிவாக ஆரம்பிப்பதிலிருந்து தொடங்குகிறது.
ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால்,
அவனை பற்றி எதுவும் திட்ட வேண்டியதில்லை, அவன் வீட்டு பெண்களை கேவலமாக
ஆபாசமாக திட்டினால் போதும் எவனும் அருவாள் தூக்குவான்.
அதன் பொருட்டே எல்லா சண்டைகளிலும் ‘ஓத்தா…’ என்று ஆரம்பித்து தொடர்ந்து பெண்களை இழிவாக திட்டுகிற வார்த்தைகளாக வந்துவிழும்.
தனது ஜாதியின் பெருமை, ஜாதிக்கான கவுரவம்
எல்லாவற்றையும் தன் ஜாதி பெண்களின் நடவடிக்கைகளிலேயே வைத்திருக்கிறார்கள்
ஆதிக்க ஜாதிக்கார்கள்.
இந்த ஜாதிரீதியான கவுரவங்களில், தன்
ஜாதியைவிட ‘உயர்ந்த’ ஜாதிக்காரரோடு காதல் திருணமத்தை தன் பெண் செய்து
கொண்டால், அதை பெரிய அவமானமாக கருதுவதில்லை.
வன்னியர் ஜாதி பெண்ணையோ, கள்ளர் சமூகத்து
பெண்ணையோ, நாடார் பெண்ணையோ; ஒரு பார்ப்பனரோ, பிள்ளையோ, முதலியோ திருமணம்
செய்துகொண்டால்; பார்ப்பனர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள்
குடியிருப்புகளில் புகுந்து அவர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது
கிடையாது.
இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் அடிமை மனோபாவம்.
மாறாக தன் பெண் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால்தான், இந்த கொலை வெறி தாக்குதல்கள்.
பார்ப்பனர்கள், முதலியார்கள்,
பிள்ளைமார்கள் வீட்டுப் பெண்ணைகளை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்து
கொண்டால், மிகப் பெரும்பாலும் இவர்கள் வன்முறையில் இறங்குவதைவிடவும்,
காரியம் சாதிப்பதிலையே குறியாக இருக்கிறார்கள்.
நேரடியான வன்முறையில் இறங்குவது, இவர்களின்
ஜாதி அந்தஸ்துக்கு கவுரவக் குறைச்சல். அல்லது எண்ணிக்கையில்
தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவானவர்கள் என்பதால், ‘அடி நமக்கு விழுமோ என்கிற
பயம்?’ இதானாலேயே இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நேரடியான வன்முறையில்
இறங்குவதில்லை.
மிகப் பெரும்பாலும் தலித் மக்கள், ஜாதி
இந்துக்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற பகுதிகளில் பாதுகாப்பாகவே
இருக்கிறார்கள். சென்னை, அரக்கோணம். வேலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி
இவைகளை சுற்றி இருக்கிற கிராமங்கள் மற்றும் இதுபோன்று இந்தியா முழுக்க
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது,
காதலின் பெயரால்கூட ஜாதிய தாக்குதல்களை
நடத்திவிட்டு, யாரும் தப்பி விட முடியாது. தலித் இயக்கங்கள் கூட இந்தப்
பகுதிகளில் மட்டும்தான் அமைப்புக் கட்டுகிறார்கள்.
மாறாக, தலித் மக்கள் குறைவான எண்ணிக்கையில்
இருக்கிற பகுதிகளில், அடிப்படையான மனித உரிமை கூட இல்லாமல்; மரண பயத்தில்,
தினம் தினம் பயந்து நடுங்கி கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது. அந்தப்
பகுதிகளில்தான் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை ஜாதி இந்துக்கள்
நடத்துகிறார்கள்.
தலித் இயக்கங்கள் அங்கு நுழையக்கூட
முடியாது. அதற்கான முயற்சிகளைக் கூட தலித் இயக்கங்கள் செய்வதும் இல்லை.
‘திண்டாமை ஒழிப்பு முன்னணி’ என்று செயல்படுகிற சிபிஎம் கட்சிக்காரர்கள்கூட
முயற்சிப்பதில்லை.
இணையத்தில் தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக
தீவிரமாக எழுதுகிற தலித் இளைஞன், தன் கிராமத்தில் தன் உறவினரிடம் துயரமாகக்
கூட அதை பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொண்டால் அவர் மீண்டும்
நகரத்திற்கு திரும்ப முடியாது.
ஜாதி ஒழிப்பு பணியில் ஈடுபடுகிற
முற்போக்காளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டிய இடம் இதுதான். இங்கு
பணியாற்றினால் செல்வாக்கும் கிடைக்காது, தேர்தலில் வாக்கும் கிடைக்காது.
உயிரை குறிவைக்கும் எதிர்ப்பே அதிகம் கிடைக்கும். வழக்கிறிஞர்
ரத்தினத்திற்கு கிடைப்தைப் போல்.
சரி, மீண்டும் பார்ப்பனர்கள்,
முதலியார்கள், பிள்ளைமார்கள் வீட்டு பெண்ணை தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம்
செய்து கொண்டால்… அந்த பிரச்சினைக்கே வருவோம்.
தலித் மாப்பிளை வசதியானவராக நிறைய
சம்பாதிப்பவராக இருந்தால், அவர் சார்ந்த ஜாதியில் இருந்து மட்டுமல்ல, அவர்
குடும்பத்திடமிருந்தே அவரை பிரிந்து உயர் நடுத்தர வர்க்க அடையாளத்தை
முன்னிலைப்படுத்தி அவரின் குடும்ப அடையாளத்தை முற்றிலுமாக
மாற்றிவிடுவார்கள். (மாப்பிள்ளையின் மனப்பூர்மான சம்மதத்துடன்)
மாறாக, தலித் மாப்பிள்ளை கூலியாகவோ,
குறைந்த வருமானம் உள்ள தொழிலாளியாகவோ இருந்தால், திருமணத்திற்கு முன்: ‘அவன
நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க எல்லோரும் குடும்பத்தோடு தற்கொலை செய்து
கொள்வோம்’ என்று மிரட்டுவார்கள். ஆனால், செய்து கொள்ள மாட்டார்கள்.
அதையும் மீறி திருமணம் நடந்தால், ‘எனக்கு ஒரு பொண்ணு இருந்தா.. அவ செத்துப் போயிட்டா’ என்று ‘தலை முழுகி’ விடுவார்கள்.
ஆனால், இடைநிலை ஜாதிகளில் எண்ணிக்கையில்
அதிகம் உள்ள ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நேர் மேல் இருக்கிற
கள்ளர், வன்னியர் போன்ற ஜாதிகளே தன் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் செய்து
கொண்டால், தனக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாக கருதி தற்கொலை செய்து
கொள்கின்றனர். கவுரக் கொலைகள் செய்கின்றனர். சேரியையே கொளுத்தி ஒட்டுமொத்த
தாழ்த்தப்பட்ட மக்களையும் நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
இதுதான் ஜாதி இந்து சமூக அமைப்பின் மனநிலை.
வட, தென் தமிழகத்தின் நிலை இது. தருமபுரியின் நிலையும் இதுவேதான்.
மேற்கு மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கோவை
பகுதிகளில் தலித் மக்களான சக்கிலியர்கள் மீது இந்த கொடூர தாக்குதல்களை
நடத்துபவர்கள், ஜாதியில் ‘உயர்’ அந்தஸ்து கொண்ட கொங்கு வேளாள கவுண்டர்கள்.
காரணம் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதால்; பிள்ளை, முதலி
போன்றவர்கள் மனதால் நினைப்பதை இவர்களால் செயலால் செய்ய முடிகிறது.
அதனால்தான், அங்கு குறைவான எண்ணிக்கையில் இருக்கிற வன்னியர், கள்ளர் போன்றவர்கள் சாந்த சொரூபிகளாக அமைதியாக இருக்கிறார்கள்.
வடக்கு, தெற்கு, மேற்கு எந்தப் பகுதியாக
இருந்தாலும். இதுபோன்ற கொடூர தாக்குதல்களில் மிகப் பெரும்பாலும்,
தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குவது, ஒரு நீண்ட நாள்
திட்டமாகவே தெரிகிறது. ‘கீழ் ஜாதிக்காரன் தன்னைவிட வசதியாக இருக்கிறான்’
என்கிற காழ்ப்புணர்ச்சி இதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்,
நவீன செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, வெள்ளாள கவுண்டர் ஜாதி
வெறியர்கள் அவர் காதை அறுத்தெரிந்த ஊர்தான், தமிழை மிகவும் ‘மரியாதையாக’
பேசுகிற கோவை மாவட்டம்.
வர்க்க நிலையில் அநேகமாக பள்ளர், பறையர்,
கள்ளர், வன்னியர் இவர்களே அதிகமான பாட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனாலும்
ஜாதி நிலையில் இருக்கிற தீண்டாமை மனோபாவமே இந்த வன்முறையை தீர்மானிக்கிறது.
இதே காரணத்திற்காகத்தான், இன்று
தர்மபுரியில் வன்னிய ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை
சூறையாடி நிற்கதியாக்கி இருக்கிறார்கள்.
இதுபோன்ற ஜாதிவெறி செயல்களில்
ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்சமான தண்டணை தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்
சொத்துக்களை கைப்பற்றி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.
நிவாரணங்களோடு, வீட்டுக்கொருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் உடனடியாக வழங்கவேண்டும்.
அதுதான் அவர்கள் வாயை கட்டி, வயித்தைக்
கட்டி இத்தனை ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்த செல்வத்தின் இழப்பை சிறிதேனும்
ஈடுகட்ட முடியும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்கும் பயன்படுத்த
முடியும்.
*
ஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள
வேண்டும் என்றால், சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க
வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.
அப்போதுதான் ஜாதி எவ்வளவு கொடுமையானது, கேவலமானது, சுயஜாதி உணர்வோடு இருப்பது எவ்வளவு மோசடியானது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக