திங்கள், 15 அக்டோபர், 2012

சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்

http://gnani.net/
இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும் ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமீர் கான், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்த படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமீர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.

தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இங்கே மல்ட்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரைக் கொட்டகைகள் இன்னும் பரவவில்லை. எனவே அவற்றை மட்டும் நம்பிப் படம் எடுப்பது இயலாது. வெகுஜன அளவில் வித்யாசமான முயற்சிகளை செய்ய முற்படும்போது, வணிகம் சார்ந்த ரசனைக்கும், படத்தின் கருத்து சார்ந்த அழகியலுக்கும் சமரசம் செய்யவேண்டிய சிக்கல் ஏற்படுகிறது. இந்த சமரசத்தைத் தயாரிப்பாளருக்குப் புரியவைத்து படம் எடுக்கச் செய்ய இயக்குநர் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். அப்படி எடுத்த படத்தை பார்வையாளர்களில் எல்லா பிரிவினரும் ஆதரித்தால்தான் வசூலில் தப்பிக்கும் என்ற சிக்கலை சந்தித்தாகவேண்டும். மிக முக்கியமாக இங்கே ஆமீர்கான், ஷாருக் கான்களுக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ நடிகர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அண்மையில் வந்த சாட்டை பட முயற்சியை நான் முக்கியமான முயற்சியாகப் பார்க்கிறேன். சமூகத்தின் எரியும் பிரச்சினைகளை படத்தின் கருவாக எடுத்துக் கொள்ள எப்போதுமே தமிழ் சினிமா மிக மிகத் தயங்கும். தண்ணீர் தண்ணீர் மூலம் மறைந்த கோமல் சுவாமிநாதன் நாடகத்தில் கொஞ்சம் முயற்சி செய்ததை பாலசந்தர் படமாக்கினார். அதன்பின்னர் அப்படிப்பட்ட படங்கள் கூட அபூர்வமாகிவிட்டன. அண்மையில் அப்படிப்பட்ட முயற்சிகளாக வந்த படங்களில் அங்காடித்தெரு, வாகை சூடவா வரிசையில் சாட்டையை வைக்கலாம்.
சாட்டை இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் விலகி நிற்பது அது எடுத்துக் கொண்ட பொருளில்தான். பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் என்பான் பாரதி. அவனுடைய மேற்கோளோடே தன் படத்தைத் தொடங்கும் இயக்குநர் அன்பழகன் முதல் படத்திலேயே முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் பிரபு சாலமன் தன் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கையும் கொடுத்த ஆதரவுமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பைச் செய்யாமல், அந்த மானவர்களின் எதிர்காலத்தையே வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறப்பதில்லை. அந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடமாற்றல் கோரிக்கைகளுக்கும் குரல் எழுப்பும் சங்கங்கள் , அவர்கள் தன் அடிப்படைக் கடமைகளையே செய்யாமல் திரிவதை சரி செய்ய முயற்சிப்பதே இல்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முன்வருவதே இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் ஓட்டு பற்றிய பயம்தான். எதிர்காலமே பாழாக்கப்படும் ஏழை மாணவர்களின் குடும்ப ஓட்டுகளை, இலவசங்கள் மூலம் கைப்பற்றிக் கொள்ளலாம்.ஆனால் ஆசிரியர்கள் மீது கை வைத்தால் சிக்கல். ஓட்டுக்கும் ஆபத்து.தேர்தல் வாக்குச் சாவடிகளை நிர்வகிப்பதிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கிருக்கிறது என்ற பயம் அரசியல்வாதிகளை ஆட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அன்பழகனின் சாட்டை வீசப்பட்டிருக்கிறது. குட்டிச் சுவராக இருக்கிற ஓர் அரசுப் பள்ளியை , மனசாட்சியும் கடமை உணர்ச்சியும், சிறுவர்கள் மீது அன்பும் உடைய ஒரு நல்லாசிரியர் எப்படி மாற்றி அமைக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முற்பட்டிருக்கிறார். அவருக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது அந்த பாத்திரத்தை நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி. கூடவே வெவ்வேறு ஆசிரியர் பாத்திரங்களை ஏற்ற ஒவ்வொரு நடிகரும், மாணவர்களாக நடித்த ஒவ்வொரு இளம் நடிகரும் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும், கலை இயக்குநரும் கச்சிதமாகத் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். ( இது பட விமர்சனம் அல்ல என்பதால் நான் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் இங்கே எழுதவில்லை.)
படத்தில் சின்னச் சின்னதாகப் பல குறைகள் இருக்கின்றன – பள்ளியின் மொத்த ஆசிரியர்களும் பொறுப்பற்றவர்கள் என்ற மிகை உட்பட. ஆசிரியர்களின் தவறுகளை சொல்லும் படம் அடுத்த நிலையில் அதற்குப் பொறுப்பான கல்வித்துறை, அரசு பற்றி சொல்லவில்லை என்பது ஒரு குறை. வெகுஜன பார்வையாளருக்காக வைத்திருக்கும் பாடல்கள், ஆட்டங்கள் எல்லாம் இந்தக் கதைக்கு ஒட்டாமல் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளை நம்பி இன்னமும் வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலை அசலாக இருப்பதை விட சற்றே மேலாக இந்தப் படத்தில் சித்திரிக்கப்பட்டிருப்பது ஒரு குறை. இந்தக் குறைகளை மீறிப் படம் எடுத்துக் கொண்ட செய்தியை உரக்க அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கிறது என்பதுதான் முக்கியம்.
இன்று ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வளர் இளம் பருவத்தினரிடையே சினிமாக்களின் தாக்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொய்யான காதல் உணர்ச்சி. இயக்குநர் அன்பழகன் அதை இந்தப் படத்தில் சுட்டிக் காட்டி விவாதித்திருக்கிறார். மோதல், சண்டை, ஒருதலைக் காதல், வீட்டார் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு இளம் டீன் ஏஜ் ஜோடியை சேர்த்து வைக்கும் வழக்கமான தமிழ் சினிமா களவாணித்தனத்தை செய்யாமல், படிக்கும் வயதில் படிப்புதான் முக்கியம் என்பதை மாணவர்கள் உணரும் விதத்தில் அன்பழகன் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தை தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் பார்க்க வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் பார்க்க வேண்டும். இதில் காட்டியிருப்பதில் அது தவறு, இது இப்படியில்லை, இது கற்பனை என்றெல்லாம் சொல்லித் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, இந்தப் படம் சுட்டிக் காட்டும் பிரச்சினைகளை, அவற்றுக்கு முன்வைக்கும் தீர்வுகளை திறந்த மனதுடன் விவாதிக்க முன்வரவேண்டும். ஏனென்றால் இந்தப் படம் முன்வைக்கும் பிரச்சினை, கற்பனை அல்ல. அசலானது. லட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது.
சாட்டை படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிடப்படும் பிரச்சினையே ஹிந்தியில் ஒரு முழுப்படமாக வந்திருக்கிறது. அதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ். இது சாட்டை முயற்சியிலிருந்து வேறுபட்டது. மல்ட்டிப்ளெக்ஸ் பார்வையாளர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பதே இந்தப் படத்துக்கான பெரிய பப்ளிசிட்டி.
இந்தப் படமும் இயக்குநருக்கு முதல் படம்தான். இயக்குநர் கௌரி விளம்பரப் படங்கள் எடுத்துவந்தவர். அவர் கணவரான தமிழர் பால்கியும் விளம்பரப் பட இயக்குநர். இதற்கு முன் பால்கி எடுத்த இரு படங்களிலும் கௌரியும் பணியாற்றினார். அந்தப் படங்களும் வித்யாசமான கருப் பொருள் உடையவை. சீனி கம், முதிர் வயதில் காதல்வசப்படுவது பற்றியது. அடுத்த படம் ‘பா’ சிறு வயதிலேயே வயது ஏறாமலே உடல் மட்டும் முதுமையாகிவிடும் அபூர்வமான நோயால் தாக்கப்பட்ட சிறுவனைப் பற்றியது. இரண்டிலும் அமிதாப் பச்சன்தான் ஹீரோ. பாதிக்கப்பட்ட சிறுவனாக அமிதாப் அற்புதமாக நடித்திருந்தபோதும் அவருக்கு அதற்காக சிறந்த நடிகர் விருது தரப்பட்டது வட இந்திய அரசியல் என்றும் மம்மூட்டிக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும் என்றும் கேரளத்தில் குரல்கள் எழுந்தன.
கௌரி எடுத்திருக்கும் படத்திலும் அமிதாப் நட்புக்காக இரண்டு சீனில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் அந்த ரோலில் அஜீத். ( நியாயமாக ரஜினி நடிக்க முன்வந்திருக்க வேண்டும்.)
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மேல்தட்டு குடும்பத்தில் ஆங்கிலம் தெரியாத குடும்பத் தலைவி சசியைப் பற்றியது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அவள் மகளே அவமானமாகக் கருதுகிறாள். அம்மா சுவையான லட்டுகளை வீட்டிலேயே தயாரித்து விற்று கணிசமாக பணம் சம்பாதிக்கும் பெருமையை விட அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதுதான் மேட்டுக் குடி குடும்பத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
ஒரு முக்கியமான உறவினர் திருமணத்தில் உதவுவதற்காக முன்கூட்டியே சசி தனியாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே சசி நான்கு வாரங்களில் ஆங்கிலம் பேசக் கற்றுத் தரும் வகுப்பில் ரகசியமாகச் சேர்ந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு திருமண விழாவில் ஆங்கிலத்தில் பேசி தன் கணவன், உறவினர்கள் எல்லாரையும் அதிரவைப்பதுதான் முடிவு.
ஸ்ரீதேவியின் திறமையை ஹிந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் பெருமளவில் வீணடித்திருக்கின்றன என்பதை இந்தப் படம் அதைப் பயன்படுத்தியதன் மூலம் இன்னொரு முறை பளிச்சென்று சொல்ல்யிருக்கிறது. எவ்வளவு நல்ல பாத்திரங்களையெல்லாம் ஸ்ரீதேவிக்கு அவர் இளமையாக இருந்தபோதே கொடுத்திருக்கலாம் என்ற ஏக்கம்தான் வருகிறது. பால்கி தயாரிப்புகள் அனைத்திலும் இருக்கும் செய் நேர்த்தி இந்தப் படத்திற்கும் ஒரு பலம்.
இயக்குநர் கௌரி இந்தப் படத்தில் இரண்டு நுட்பமான விஷயங்களை அலசியிருக்கிறார். மேல்தட்டுக் குடும்பங்களில் ஆங்கில மோகம் எந்த அளவு ஊறியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் அறியாத ஒரு பெண்ணின் இதர திறமைகள் என்னவாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவை மதிக்கப்படாததைப் பேசுகிறார். ஒரு பெண்ணுக்கு அன்பு மட்டுமல்ல, மரியாதையும் தரப்படவேண்டும் என்பதே செய்தி.
நம் சமூகத்தில் ஆங்கிலம் தெரியாதவர்களின் நிலை என்ன என்பதை நாம் விவாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைக் கருதவேண்டும். படத்தை எடுத்தவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த மேட்டுக்குடி பார்வையாளர்களுக்காக இதை எடுத்திருப்பது ஒரு கிண்டல்தான். வெகுஜன அளவிலும் இதே போல இன்னொரு படம் எடுப்பதற்கான அவசியமும் சாத்தியமும் இருக்கிறது. மேட்டுக்குடியல்லாத சாமான்யக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞனோ யுவதியோ ஆங்கிலம் தெரியாததால் படும் அல்லல்கள் இன்று நம் சமூகத்தில் நம் கவனத்துக்குரியவை. அந்தப் பற்றாக்குறை அவர்களின் இதர திறமைகள் எல்லாவற்றையும் மறைத்தும் வீணடித்தும் விடுகின்றது. இந்த நிலை எங்கிருந்து தொடங்கி எப்படி மாற்றப்படவேண்டும் என்பதும் நம் கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்களாகும்.
இரண்டு படங்கள் நம் கல்வியாளர்களுக்கான இரண்டு பாடங்களாக வந்திருக்கின்றன. இந்தப் பாடங்களைப் படிக்காமல் விட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான்.

கருத்துகள் இல்லை: