பேஸ்புக் இன்றைய ‘நவீன இளைஞர்’களின் முகவரி. பல் துலக்காமல் கூட இருக்க முடியும், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடாமல் இருக்க முடியுமா என்ற பழமொழி இணையத்தில் பிரபலம். ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்வதும், தனது படம், பெருமைகளை அப்டேட் செய்வதும் இவற்றுக்கெல்லாம் லைக் போடுவதும் பேஸ்புக்கில் அனிச்சை செயலாக மாறியிருக்கிறது.
ஒண்ணாம் கிளாஸ் முதல கல்லூரி வரை கூடப் படித்தவர்கள், பழைய தெருக்காரர் முதல் புதிய தெருக்காரர் வரை, நேரில் சிரித்துக் கொள்கிறார்களோ இல்லையோ பேஸ்புக்கில் முகம் கொடுக்காமல் இருக்க முடியாது. நட்பின் இலக்கணத்திற்குள் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது ஒரு நிபந்தனையாக மாறி வருகிறது.

எனினும் பேஸ்புக்கில் அனைத்து உணர்ச்சிகளும் ஒரு வணிக நோக்கத்திற்காகவே திரட்டப்படுகின்றன. ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ இல்லை ஒரு கார்ட்டூனையோ பேஸ்புக்கில் போட்டோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம் பேர். இந்த மாய உலகம் உருவாக்கியிருக்கும் உணர்ச்சி உண்மை உலகத்தோடு உள்ள உறவை மறைத்து வருகிறது. இப்படித்தால் புரட்சியையும், காதலையும்  நடப்பையும் கூட உரமாக போட்டு சமூக வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறது பேஸ்புக் நிறவனம்.
இணையம் என்ற நிகர் நிலை உலகில் பேஸ்புக் ஒரு திருவிழாக் கூட்டம் என்றால் மிகை அல்ல. பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் தமது சரக்குகளை கடை பரப்புவதற்கு வியாபாரிகள் போட்டி போடுவார்கள் என்பது இப்போதைய உலக நடைமுறை. பேஸ்புக் தான் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி காசு சம்பாதிக்க விளம்பரங்களை காட்டுவது, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவது என்று பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது.
சமீபத்திய பங்குகள் வெளியீட்டிற்கு பிறகு பேஸ்புக்கின் பங்குகளின் விலை ஆரம்ப விலையிலிருந்து ($38) பாதியாக குறைந்து விட்டிருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பங்குச் சந்தை எதிர்பார்க்கும் லாப சதவீதத்தை காட்ட வேண்டும் என்று அழுத்தம் பேஸ்புக் நிறுவனத்தின் மீது அதிகமாகிக் கொண்டே போகிறது.
பயனர்களின் சமூக உறவுகளை காசாக்குவதற்கான புதிய புதிய வழிகளை தேடினால்தான் பேஸ்புக்கின் வருமானத்தை அதிகரிக்க முடியும். வருமானத்தை அதிகரித்தால்தான் பங்கு விலையை சந்தையில் தூக்கி நிறுத்த முடியும்.
பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை தெரிவிக்கும் பட்டன் அடிப்படையான ஒரு வசதி. அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து அல்லது ஸ்டேட்டஸை ஆதரிப்பதாக ஒருவர் தெரிவிக்கலாம். இன்னார் இன்ன கருத்தை ஆதரிக்கிறார் என்ற விபரம் அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வரும். அவர்களும் அதைப் போய் படிப்பார்கள். இப்படி ஒரு சமூக கருத்துப் பரிமாற்றத் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது.
இந்த சமூக உறவு பரிமாற்றத்தை வணிக ரீதியில் அறுவடை செய்யும் முயற்சியில் இப்போது வான்ட் அதாவது தேவை என்ற பட்டனையும் கலெக்ட் அதாவது சேகரி என்ற பட்டனையும் பேஸ்புக் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனங்கள் தமது விற்பனை பொருட்களை தொகுப்புகள் (கலெக்சன்ஸ்) என்ற பெயரில் வெளியிடுவார்கள். அந்தப் பொருட்களுக்கு அருகில் வான்ட் அல்லது கலெக்ட் என்ற பட்டன் காண்பிக்கப்படும். அதை அழுத்தினால் அந்தப் பொருளை தனக்கு தேவை என்று பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும் அந்தப் பொருளை பேஸ்புக்கின் வழிகாட்டலுடன் விற்பனையாளரின் தளத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளவும் முடியும்.
‘இன்னார் இன்ன பொருள் தேவை என்று பதிவு செய்திருக்கிறார் அல்லது இன்ன பொருளை வாங்கியிருக்கிறார்’ என்று அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வர இன்னும் அதிகமான பேர் அதை வாங்குவதற்கான சாத்தியம் ஏற்படும்.
பேப் டாட் காம், மைக்கேல் கோர்ஸ், மேட்டுக் குடியினருக்கான டிபார்ட்மென்ட் ஸ்டோர் நெய்மன் மார்கஸ், பாட்டரி பார்ன், ஸ்மித் ஆப்டிக்ஸ், உள்ளாடைகள் நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரட், வேய் பேர் என்ற ஏழு வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தற்சமயம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் மட்டும் நடத்தப்படுகிறது.
தீனி போட்டு கொழுக்க வைத்த ஆட்டுக் கிடாய்களை ஒவ்வொரு திருவிழாவக்கு ஒன்றாக வெட்டி பொங்கல் வைப்பது போல சமூக வலைப்பின்னலுக்குள் பிடித்து வைத்துள்ள பயனர்களை வணிக நிறுவனங்களுக்கு பொங்கல் வைக்கத் தயாராகிறது பேஸ்புக். கூடிய சீக்கிரத்தில் வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக இணையப் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி!
பேஸ்புக் உங்களையும் உங்களது விருப்பங்களையும் விற்பனை செய்கிறது. அந்த விற்பனை உண்மையில் வணிக நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இறுதியில் பேஸ்புக்கின் உண்மையான உணர்ச்சி இந்த சரக்கு உணர்ச்சிதான் என்றால் முகநூல் புரட்சியாளர்கள் ஒத்துக்கொள்வார்கள?
படிக்க