புதன், 17 அக்டோபர், 2012

ஊத்தங்கரையில் ஆயுத பயிற்சி பெற்ற நக்சலைட் அதிரடி கைது

சேலம்: ஊத்தங்கரை மாந்தோப்பில் ஆயுத பயிற்சி பெற்ற நக்சலைட் ஒருவரை போலீசார் அதிரடியாக நேற்றிரவு கைது செய்தனர். அரசை கண்டித்து சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது, போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். இவரிடம் க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கண சாலை பகுதியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், Ôஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்Õ சார்பில் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட பொறுப்பாளர் முத்து (எ) பச்சமுத்து தலைமையில் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார், ஆர்ப்பாட்டம் செய்த முத்து உள்ளிடோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 2002ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாந்தோப்பில் நடந்த நக்சலைட் ஆயுத பயிற்சியில் முத்து பயிற்சி பெற்றவர் என்பதும், அப்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இவருக்கு நக்சலைட்டுகளுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தது, அரசுக்கு எதிராக செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபற்றிய தகவலை க்யூ பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட முத்துவை காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இடங்கண சாலையில் முத்துவுடன் தொடர்புடைய நபர்கள் யார் யார், அவர் நடத்தி வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக உள்ளனர் போன்ற விவரங்களை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், முத்துவின் அமைப்பில் தொடர்பில் இருக்கும் நபர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

அவர்களுக்கும் கடந்த 2002ம் ஆண்டு ஊத்தங்கரையில் முகாமிட்டு இருந்த நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, சமீபத்தில் சென்னை அருகே 3 நக்சலைட்டுகளுடன் 12 பேர் கைது செய்யப்பட்டவர்களுடன் முத்து அமைப்பினருக்கு தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கைது செய்யப்பட்ட முத்து, நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர். இவர் ஊத்தங்கரையில் 2002ம் ஆண்டு ஆயுத பயிற்சி பெற்ற போது கைது செய்யப்பட்டவர். ஜாமீனில் வெளியே வந்த பின், அவரை கண்காணித்து வந்தோம். இன்று வரை அரசுக்கு எதிராக நேரடியாக போராட்டங்களில் ஈடுபடாமல் இருந்த அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபட தொடங்கினார்.

அன்று முதல் அவரை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தோம். இந்நிலையில் நேற்று அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இனி அவரிடம் நாங்களும் விசாரணை நடத்த உள்ளோம். காவலில் எடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு க்யூ பிரிவு போலீசார் கூறினர். கூடங்குள அணு உலை பிரச்னையை பயன்படுத்தி கொண்டு தமிழகத்தி ஊடுருவ நக்சல்கள் சதி திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்து முறியடித்தனர். கூடங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த போது அந்த கும்பலில் இருந்த நக்சல்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு நக்சல் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: