செவ்வாய், 16 அக்டோபர், 2012

சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதா 'சமாதி'

சென்னை: தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு 'சமாதி' கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைந்து நின்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். தேர்தல் அறிக்கையில் 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும், 'மணல் மேடுகள்' என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று 'ராமர் பாலம்' என்றும், அதனை பாரம்பரியம் மிக்க புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறுவது எப்படி? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை அதிமுக இரட்டை வேடம் போட்டு கடைசியாக அந்தத் திட்டமே தேவையில்லை என்று தற்போது உச்ச நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
ஒரு மாநில அரசிலே இருப்போர், அந்த மாநிலத்திலே புதிய புதிய திட்டங்கள் வர வேண்டும், மாநில மக்கள் அதன் மூலம் நலம் பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள், அதற்காகத் தான் பாடுபடுவார்கள். சேது சமுத்திரத் திட்டம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தத் திட்டம் வந்து, அதனால் மற்றக் கட்சிகளுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்று அதிமுக எண்ணுகிறது.
2001ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84ல் என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா?.

"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்" -என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும், 'மணல் மேடுகள்' என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று 'ராமர் பாலம்' என்றும், அதனை பாரம்பரியம் மிக்க புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறுவது எப்படி?.
இராமன், இராமாயணம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இதுவரை தாக்கல் செய்த பதில் மனுக்களில் உண்மைக்கு மாறான எத்தகவலும் யாரையும் புண்புடுத்தும் வகையில் சொல்லப்படவில்லை.
மேலும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், "சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்.
ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அளவில் விரிவடையும்.
சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத் திட்டத்தின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்''
-என அதிமுக 2001 தேர்தல் அறிக்கையில் கூறியது.
சேது சமுத்திரத் திட்டம் தேவையென்று அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையிலே விரிவாகச் சொல்லி விட்டு- எவ்வாறு கூடங்குளம் அனல் மின் நிலையத் திட்டம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிறகு- திடீரென்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் ஜெயலலிதா அனுப்பிவைத்தாரோ- அதைப் போலவே சேது சமுத்திரத் திட்டத்திற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்ட பிறகு- தற்போது திடீரென்று சேது சமுத்திரத் திட்டமே தேவையில்லை என்று அந்தப் பகுதி மக்களையெல்லாம் பாதிக்கக் கூடிய அளவிற்கு முடிவெடுத்து, அந்த முடிவினை உச்ச நீதிமன்றத்திலே நேற்றையதினம் திடீரென்று அதிமுக அரசு தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே மாத்திரமல்ல; 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 10.5.2004 அன்று வெளியிடப்பட்ட அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில்,
"தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும்முக்கிய பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத் திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அதிமுக வலியுறுத்தும்.'' -என்று கூறியிருந்தது.
அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு. கழகமும், மற்றக் கட்சிகளும் மத்திய அரசை பெரிதும் வலியுறுத்தியதன் விளைவாக சேது சமுத்திரத் திட்டம் 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுவதற்கு மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறக் கூடிய நாளாக 2.7.2005 அமைந்து, அன்றையதினம் மதுரையில் நடைபெற்ற- நானும் கலந்து கொண்ட மாபெரும் விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு சேது சமுத்திரக் கால்வாய்வெட்டும் பணியும் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது
சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவையே தடுக்க வேண்டும் என்பதற்காக மதவாதிகள் சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச், "தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடைசெய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திர திட்டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வர வேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாது". -என்று கூறி தீர்ப்பளித்தது.
சேது சமுத்திர திட்ட சுற்றுச் சூழல் காணிப்புக் குழு தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன், 25-4-2007 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில், கடலில் உள்ள படிமங்கள் தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை எவரும் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும்
இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம்'' என்று தெரிவித்திருந்தார்.
அறிவியல் ரீதியாகவோ- ஆழ் கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ- மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது என்பது தான் உண்மை.
இந்திய தீபகற்பம் முழுவதிலும், 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற்குரிய வசதி அமையப் பெறவில்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென்கிழக்குக் கடல் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. அது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் கடலின் ஆழம் ஏறத்தாழ 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. கப்பலின் பயண தூரத்தைக் குறைப்பதற்காக இந்திய கடற்பகுதிக்குள் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படும் வகையில், `சேது சமுத்திரக் கால்வாய்' வெட்டுவதற்கு 1860ஆம் ஆண்டு முதல் 1860ல் கமாண்டர் ஏ.டி. டெய்லர் திட்டம்; 1861ல் டவுன்ஸ்சென்ட் திட்டம்; 1862ல் பிரிட்டிஷ் பாராளுமன்றக்குழு திட்டம்; 1863ல் சென்னை மாகாண ஆளுநர் மேதகு சர் வில்லியம் டென்னிசன் திட்டம்; 1871ல் ஸ்டோட்டர்ட் திட்டம்; 1872ல் துறைமுக பொறியாளர் ராபர்ட்சன் திட்டம்; 1884ல் சர் ஜான் கோட் திட்டம்; 1903ல் தென்னிந்திய ரயில்வே பொறியாளர் திட்டம்; 1922ல் இந்திய அரசின் துறைமுக பொறியாளர் சர் இராபர்ட் பிரிஸ்டோ திட்டம் - எனப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு,
எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப் படாத நிலையில் தான்; அறிவியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் ஆதாம் பாலத்தின் வழியாகத் திட்டத்தினை நிறைவேற்றுவதே உகந்தது என்ற நிபுணர்களின் கருத்தினை ஏற்று சேது சமுத்திரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்து. இவ்வாறு கடந்த 150 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு பல அறிஞர்களும், சான்றோர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்து, மத்திய அரசும் விரிவான பரிசீலனை செய்து, பல கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கி செலவிட்ட பிறகு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரே நாள் ஆராய்ச்சியில், உச்ச நீதிமன்றத்தில் அந்தத் திட்டமே தேவையில்லை என்று முடிவுக்கு வந்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இப்போது புரிகிறதா?
கட்சிகள் எதுவாயினும் அவற்றில் அங்கம் வகிக்கும் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான திட்டத்திற்கு "சமாதி" கட்ட தமிழகத்தின் முதல் அமைச்சரே முனைந்து நின்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் அல்லவா?
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: