வியாழன், 18 அக்டோபர், 2012

வாடகைக்கு வீடு ஒன்லி பிராமின்ஸ் மட்டும் வருக

பார்ப்பனர்களுக்கு மட்டும் - விளம்பரம்வினவு.com 
 இந்து நாளிதழில் இந்தியாவின் பெருநகரங்களின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருந்தது. முஸ்லீம் தம்பதியினர் போல வீடு வாடகைக்கு விடப்படுவதாக சொன்ன விளம்பரதாரர்களை தொடர்பு கொண்ட இந்து நாளிதழ் நிருபர்களின் அனுபவங்களும் வீட்டுத் தரகர்கள் மற்றும் வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு வீடு தேடும் பிற முஸ்லீம்களின் அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதற்கான எதிர்வினைகள் மூன்று வகையில் அமைந்திருந்தன.
1. ‘நான் முஸ்லீம், தலித் என்று பார்ப்பதில்லை. என் வீட்டில் அசைவ உணவு சமைக்கப்படுவதன் மூலம் வீடு அசுத்தப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நோக்கம்’
2. ‘முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், இந்துக்கள் விரும்பாத பழக்கங்களை விடாப்படியாக பின்ப்பற்றுகிறார்கள், அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று வாடகைக்கு விட மறுக்கிறோம்’
3. ‘முஸ்லீம்கள் இயல்பாகவே சக முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளில் வாழ விரும்புவதில்லை’
வெஜிடேரியன் மட்டும் என்பது ஒரு மேல் பூச்சு மட்டும்தான்,
முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவதற்கு உண்மையான காரணம் சாதி, மத அடையாளங்கள்தான்’ என்பதற்கு இந்து நாளிதழின் சர்வேயில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
  • பெங்களூரைச் சேர்ந்த தலித் பெண்ணியவாதியான ருத் மனோரமா ஜெயநகரில் இருந்த தனது அலுவலகத்தை அருகில் இருக்கும் இன்னொரு பெரிய கட்டிடத்துக்கு மாற்ற முயற்சித்த போது அந்த வீட்டின் உரிமையாளர்களான பார்க்க நாகரீகமான, ஆங்கிலம் பேசும், முதிய பார்ப்பன தம்பதியினர் அவருக்கு வாடகைக்கு விட மறுத்து விட்டார்கள். அலுவலகத்தில் உணவு சமைக்கப் போவதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும் அவருக்கு வீடு மறுக்கப்பட்டதற்கு காரணம் அவர் ஒரு தலித் கிருத்துவர் என்று தெரிந்திருந்துதான் காரணம்.
  • தலித் கவிஞரும் கன்னடா புத்தக ஆணையத்தின் தலைவருமான சித்தலிங்கையாவுக்கும் ஆதிக்க சாதியினர் பிடியில் இருக்கும் தெற்கு பெங்களூரில் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டது.  “என் பெயரை வைத்து நான் ஒரு (ஆதிக்க சாதி) லிங்காயத் என்று வீட்டு உரிமையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் எனது சாதி என்ன என்று கேட்பதற்கு அவர்களும் கூச்சப்படவில்லை, நானும் தலித் என்று சொல்வதில் தயக்கம் காட்டவில்லை”. அவர் தலித் என்று தெரிந்த உடன் வீட்டு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தையை உடனடியாக முடித்துக் கொண்டார்கள்.
  • தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பேராசிரியர் ரிஸ்வான் கைசர் சாக்கேத்திலும் முனிர்கா டிடிஏ குடியிருப்பிலும் வீடு தேடும் போது “எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கும், எனது பெயரை வெளியில் சொல்லும் வரை” என்கிறார்.
இந்து நாளிதழின் ஆய்வறிக்கையில் வீடு மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் தாமாக விரும்பி வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்டவர்கள்தான். அவர்களாக சொந்த ‘விருப்பத்தினால்’ முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ போய் விடவில்லை. தாம் விரும்பும் பகுதிகளில் பார்ப்பனீய ஆதிக்க சாதியினரால் குடியிருக்கும் உரிமை மறுக்கப்பட்ட பிறகுதான் வேறு வழியில்லாமல் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் இடம் தேடிக் கொள்கிறார்கள்.
  • தங்கள் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதையும் விலைக்கு விற்பதையும் வீட்டு உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் கும்பலாக எதிர்க்கிறார்கள் ஆதிக்க சாதி இந்துக்கள். ‘தனது வீட்டை தாழ்த்தப்பட்ட சாதி அல்லது சிறுபான்மை மதத்தை சேர்ந்த யாருக்காவது வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள்’ என்கிறது இந்து நாளிதழின் ஆய்வறிக்கை.
  • வீடு வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்ட ‘முஸ்லீம்’ தம்பதியினரை முஸ்லீம்களுக்கு என்று ‘ஒதுக்கப்பட்ட’ இடங்களில் வீடு பார்க்குமாறு கை காட்டுகிறார்கள் வீட்டுத் தரகர்கள்.
◦   தில்லியில் ரோகிணி பகுதியின் தரகர் ரித்தாலா என்ற இடத்தையும்,
◦   ஜனக் புரா பகுதி தரகர் போகல் என்ற காஷ்மீரி மற்றும் ஆப்கன் அகதிகள் வாழும் பகுதியையும்,
◦   நியூ பிரெண்ட்ஸ் குடியிருப்பு பகுதிக்கான தரகர் ஜாமியா நகருக்கு அருகில் இருக்கும் சுக்தேவ் விஹார், ஜசோலா போன்ற பகுதிகளையும் பரிந்துரைத்தார்கள்.
  • முஸ்லீம்களில் மேட்டுக் குடியினர் கூட இந்த ஒதுக்கீட்டிலிருந்து தப்ப முடியவில்லை. கிழக்கு தில்லியின் வசுந்தரா என்க்ளேவில் இருக்கும் அபுல் ்பசல் அபார்ட்மெண்ட் மற்றும் மயூர் விஹாரில் இருக்கும் பஞ்சாபி சவுதாகர் போன்ற குடியிருப்புகள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற பகுதிகளில் பணக்கார மேட்டுக் குடி குடியிருப்புகளில் படித்த பணக்கார முஸ்லீம்களுக்குக் கூட வீடு விற்பதும் வாடகைக்கு விடுவதும் மறுக்கப்படுகின்றன.
  • மும்பையின் “வாக்கேஸ்வரில் சில கட்டிடங்களை தவிர பிற பகுதிகளில் முஸ்லீம்கள் உள்ளே நுழைந்து விட முடியாது. முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு விடவோ விற்கவோ மறுப்பது நகரம் முழுவதும் நடக்கிறது. ஜூஹூ, பாந்த்ரா, பெட்டார் ரோடு, கோலாபா பகுதிகளில் 95% உரிமையாளர்கள் முஸ்லீம்களுக்கு உறுதியாக மறுத்து விடுகிறார்கள். வீடு காலியாக இல்லை அல்லது உறவினர்கள் வருகிறார்கள் என்று ஏதாவது சாக்கு கண்டுபிடிக்கிறார்கள்.” என்கிறார் ஒரு வீட்டுத் தரகர்.
‘சாதி மத ரீதியான பிரிவினைக்கு அரசு அமைப்புகளும் பொறுப்பு’ என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாரி என்ற வீட்டுத் தரகர். பெங்களூர் டெவலப்மென்ட் அதாரிட்டி உருவாக்கிய குடியிருப்பு பகுதிகளை சாதிவாரியாக கணக்கெடுத்தால் உயர் தர மனைகள் ஆதிக்க சாதி விண்ணப்பதாரர்களுக்கும், தலித்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான குடியிருப்புகளில் மட்டுமே ஒதுக்கீடு கிடைக்கிறது.
ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, முஸ்லீம்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அப்பட்டமான பொய். சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம்களும் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று.
சென்னையைச் சேர்ந்த சுபைர் அகமது என்ற ஆட்டோ ஓட்டுனர்  “கடந்த 30 ஆண்டுகளில் நான் இந்துக்களுக்கு சொந்தமான பல வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். ஆனால் அது நீண்ட தேடலுக்கு பிறகுதான் சாத்தியமாகிறது. சில வீட்டுக்காரர்கள் ‘நான் அசைவ உணவு சாப்பிடுபவன், வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்’ என்று சொல்லி வாடகைக்கு தர மறுக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு உரிமையாளர் முன்பு ஒரு முறை அந்த பகுதியில் முஸ்லீம் பயங்கரவாதிகள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி எனக்கு வீடு தர மறுத்தது என்னை மிகவும் அவமானப்படுத்தியது.” என்று தனது அனுபவத்தை சொல்கிறார்.
முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.
பார்ப்பனர்களுக்கு மட்டும் – விளம்பரம்
ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.
சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. நகரங்களில் சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.
கிராமங்களில் சாதி அடிப்படையில் தமக்கென்று வசதியான வசிப்பிடங்களை ஒதுக்கீடு செய்து கொண்ட பார்ப்பன நரித் தந்திரம், நகரங்களில் ‘வெஜிடேரியன்கள் மட்டும்’ என்ற நிபந்தனையை பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதவரையும் சிறுபான்மை மதத்தினரையும் தாம் வாழும் பகுதிகளிலிருந்து ஒதுக்கி வைக்கிறது.
ஒருவர் உணவு விடுதி நடத்தும் போது ‘அந்த விடுதியில் என்ன உணவுகள் கிடைக்கும், அவற்றை என்ன விலையில் விற்கலாம்’ என்று முடிவு செய்வது மட்டும்தான் அவருக்கிருக்கும் உரிமை. அவர் போட்டுள்ள விலைப்பட்டியலின் படி விலை கொடுக்க தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சாப்பிட வரலாம். சாதி, மதம், பாலினம் போன்ற காரணங்களை காட்டி ஒரு தரப்பினருக்கு உணவு வழங்க மறுப்பது இன பாகுபாடாக கருதப்படும், அது சட்டப்படி குற்றமாகும்.
நகர்ப் புறங்களில் நிலம் வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கும் அதே உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. ‘வீட்டின் எந்த பகுதியை வாடகைக்கு விடுவது என்ன வாடகைக்கு விடுவது’ என்று முடிவு செய்வது முதலாளித்துவ சொத்துரிமை அடிப்படையிலான உரிமை. அப்படி முடிவு செய்து வாடகைக்கு விடுவதற்காக வீட்டை  சந்தையில் வைத்த பிறகு அந்த வாடகையை கொடுக்கத் தயாராக இருக்கும் யாருக்கும் வீட்டை வாடகைக்கு விட வேண்டும். அவரது சாதி, மதம் அல்லது உணவுப் பழக்கம் அடிப்படையில் வீடு மறுப்பது குற்றமாக கருதப்பட வேண்டும்.
பாகுபாடு காட்டும் இந்த ஒதுக்கீட்டை நடைமுறையில் நிரூபிப்பது சிரமமாக இருப்பதால் பெரு நகரங்களிலும் நவீன ‘அக்கிரஹாரங்களும்’, ‘மேலத் தெருக்களும்’ வேலி போட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளின் வடிவில் தொடர்கின்றன.
கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறையை எதிர்க்கும் சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ‘பூப்போட்ட டம்ளர் தலித்துகளுக்கு, பிளைன் டம்ளர் ஆதிக்க சாதியினருக்கு’ என்று கள்ளத் தனமாக செயல்படும் பார்ப்பனீயம் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் பெப்பே காட்டி விட்டு தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
வீடுகள் தனிநபர் உடமைகளாக இருக்கும் நிலை ஒழிக்கப்பட்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சம உரிமையை அனைவருக்கும் உறுதி செய்யும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிச அரசினால்தான் இத்தகைய பாகுபாடுகளை ஒழிக்க முடியும்.

கருத்துகள் இல்லை: