சனி, 20 அக்டோபர், 2012

100 கோடி கொடுப்பதாக... பின்னர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை

டிஸ்மிஸ்’சை தொடர்ந்து பரபரப்பு திருப்பம் 
ஆதீனத்துக்கு ரூ.100 கோடி கொடுத்தாரா நித்தி?
மதுரை: ஆதீன மடத்துக்கு ஆரம்பத்தில் ரூ.100 கோடி கொடுப்பதாக சொல்லி முதலில் ரூ.5 கோடி கொடுப்பதாக சொன்னதெல்லாம் முழுப்பொய். ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆவேசமாக கூறினார்.

மதுரை ஆதீன மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் மடத்தை விட்டு நேற்று இரவு வெளியேறியதை தொடர்ந்து, தனது விசுவாசிகளை அருணகிரிநாதர் பணியில் அமர்த்தினார். இன்று நித்யானந்தா மதுரைக்கு வருவதாக இருந்தது. அவரை டிஸ்மிஸ் செய்து போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து நித்யானந்தா வரவில்லை. இன்று ஆதீனம் சிவ பூஜை நடத்தினார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஞானபால் வழங்கினார்.

பின்னர் அருணகிரிநாதர் அளித்த பேட்டி:
ஆதீனத்தை சிவபெருமான் காப்பாற்றி விட்டார். என் மனக் கவலை தீர்ந்தது. நிம்மதியாக பூஜை செய்தேன். அடுத்து நடப்பதை சிவபெருமான் பார்த்துக் கொள்வார்.


திருவண்ணாமலையில் நித்யானந்தா அளித்துள்ள பேட்டியில் “நீக்கியதற்காக அதிர்ச்சி அடையவில்லை, நல்ல நாள் பார்த்து நானே ராஜினாமா செய்வதாக இருந்தேன், அதற்குள் ஏன் நீக்கினார் என தெரியவில்லை?’’ என்று கூறி உள்ளாரே?

ராஜினாமா செய்ய உத்தரவிட்டபோது ஒப்புக் கொண்டார். பிறகு மறுத்து விட்டார். நல்ல காரியங்களுக்கு தான் நல்ல நாள், நல்ல நேரம், நட்சத்திரம் பார்க்க வேண்டும். ராஜினாமாவுக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதற்கு?
தேவையில்லையே. ராஜினாமா செய்து இருந்தால் நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

நீக்கும் அளவுக்கு என்ன நெருக்கடி என நீங்கள் கூற வேண்டும் என்கிறாரே?

1,500 ஆண்டு கால பாரம்பரிய ஆதீனமடத்திற்கு சோதனையே நித்யானந்தா தானே. அதனால் தான் நீக்கினேன். முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திப்பேன் என்று நித்யானந்தா கூறி உள்ளாரே?

நீக்கிய பிறகு அவருக்கும் ஆதீனத்திற்கும் எந்த தொடர்பு கிடையாது. எனவே சந்திக்க என்ன இருக்கிறது. இங்கு வரமாட்டார். அதற்கு தேவையும் இல்லை.

வாரிசாக நியமிக்கப்பட்டபோது ஆதீனத்திற்கு ரூ.5 கோடி கொடுப்பதாக நித்யானந்தா சொன்னாரே?

ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுக்க போவதாகவும், முதலில் ரூ.5 கோடி கொடுப்பதாகவும் சொன்னார். ஒரு பைசா கூட என்னிடம் கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப் பொய்.
இவ்வாறு ஆதீனம் கூறினார்.

கருத்துகள் இல்லை: