வியாழன், 18 அக்டோபர், 2012

நக்கீரன் வழக்கு : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் கட்டிட (எல்.எல்.ஏ. பில்டிங்) அரங்கத்தில் கூட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் நக்கீரன் கோபால். சின்னக்குத்தூசியின் 78-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை எல்.எல்.ஏ. கட்டிடத்தின் ஜுன் 15-ந் தேதியன்று நடத்த ரூ.8 ஆயிரம் கொடுத்து கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை பெற்றிருந்தார். இந்த நிலையில் கூட்டம் நடத்துவதற்குத் தரப்பட்ட அனுமதியை நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறி, அந்த அரங்கத்தில் விழாவை நடத்த அரங்கத்தின் செயலாளர் அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக அவசரமாக ஐகோர்ட்டில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்து, அந்த அரங்கத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதிக்கும்படி செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
கோர்ட்டின் உத்தரவை பெற்று, நிகழ்ச்சிக்கு சென்றபோது அரங்கம் பூட்டப்பட்டு இருந்தது. கார்கள் நிறுத்தும் இடத்தில் கார்களின் முகப்பு விளக்கு ஒளியில் கூட்டத்தை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதுகுறித்து செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்துள்ள உத்தரவில், ’’கூட்டம் நடத்த ஒருமுறை அனுமதி அளித்த பிறகு, இயற்கைச் சீற்றம் போன்ற கட்டுப்படுத்த முடியாத காரணங்கள் இல்லாமல், அனுமதியை திரும்பப் பெறக்கூடாது.
அங்கு கூட்டம் நடத்துவதற்கு போலீசாரின் அனுமதியைப் பெற வேண்டிய தேவை இல்லை. வேண்டுமானால், என்ன கூட்டம் நடக்கிறது என்பதை ஆயிரம் விளக்கு போலீசிடம் அரங்கத்தின் செயலாளர் தகவலாகக் கூறலாம்.

போலீசின் அனுமதியை பெற்று வரும்படி நிகழ்ச்சி நடத்துகிறவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
அரங்கத்தின் செயலாளர் இஷ்டம்போல் செயல்படக் கூடாது. அவரது அனுபவத்தைக் கருதி தண்டிக்காமல் விட்டுவிடுகிறேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: