புதன், 17 அக்டோபர், 2012

ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.

காங்கிரசுக் கட்சியின் மருமகன் ராபர்ட் வதேரா பல நூறு கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபர் ஆவதற்கு டிஎல்எப் நிதி உதவி செய்தது குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கிடையேயான பணப் பரிமாற்றங்கள் எப்படி நடந்தன என்பதற்கான சில விபரங்களை பார்க்கலாம்.viviruvi
அக்டோபர் 12, எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியிருக்கும் தகவலின் படி 2008-09ல் டிஎல்எப் ராபர்ட் வதேராவின் நிறுவனமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டியிடமிருந்து சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து நிலம் வாங்கியிருக்கிறது
‘குர்கான் மாவட்டத்தில் உள்ள சிகோபூர் கிராமத்தில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர அடிக்கு ரூ 2,800 என்ற எப்எஸ்ஐ (தரை விற்பனை குறியீட்டு எண்) செலவில் வாங்கியதாக’ டிஎல்எப் தெரிவித்திருந்தது.

ஆனால், ‘அந்தப் பகுதியில் 2008-09 கால கட்டத்தில் நிலத்தின் விலை சதுர அடிக்கு ரூ 1,500க்கு குறைவாகவே இருந்தது’ என்கிறார்கள் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள். ‘அங்கு தற்போதைய வணிக எப்எஸ்ஐ ரூ 2,500 ஆகவும், நெடுஞ்சாலையை ஒட்டிய நிலங்களுக்கு ரூ 3,000 ஆகவும் இருப்பதாகவும்’ அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘இப்போதைய சந்தை விலையே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையை விடக் குறைவாக இருந்தாலும், நிலத்தில் கட்டிடம் கட்டி விற்றால் கட்டுமானச் செலவுகளைத் தாண்டி 50 சதவீதத்துக்கும மேல் லாபம் சம்பாதிக்கலாம்’ என்று டிஎல்எப் கணக்கு சொல்கிறது. ‘முறைகேடாக நிலக்கரி வயல் ஒதுக்கப்பட்ட நிறுவனங்கள் நிலக்கரியைத் தோண்டி எடுக்கவில்லை என்பதால் எதுவும் இழப்பில்லை’ என்ற ப சிதம்பரத்தின் தத்துவப்படி டிஎல்எப் இனிமேல் கட்டிடம் கட்டி லாபம் சம்பாதிக்கும் சாத்தியம் இருப்பதால், வதேராவுடன் அவர்கள் செய்து கொண்ட பணப் பரிமாற்றமும் புனிதப்பட்டு விடுகிறது.
டிஎல்எப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ’3.5 ஏக்கர் நிலத்தை வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ 58 கோடிக்கு வாங்குவதற்கு முன் கூட்டியே ரூ 50 கோடி முன்பணமாக கொடுத்ததாக’ சொல்லியிருக்கிறது. ‘ஸ்கைலைட் அதே நிலத்தை ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ 15.38 கோடிக்கு வாங்கியதையும் டிஎல்எப் கொடுத்த விலைப்படி அதன் மதிப்பு ஒரு ஆண்டில் நான்கு மடங்காக அதிகரித்ததையும்’ கேஜ்ரிவால் சென்ற வாரம் சுட்டிக் காட்டியிருந்தார்.
வதேரா அந்த நிலத்தை வாங்குவதற்கான முதல் தவணை 2007-ம் ஆண்டு கார்ப்பரேஷன் வங்கி கொடுத்த ரூ 7.94 கோடி ரூபாய் கடன் மூலம் செலுத்தப்பட்டது. மார்ச் 2008-ல் ஹரியானா அரசாங்கம் நிலத்தை வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதி வழங்கியது. டிஎல்எப் கொடுத்த முன்பணத்தை வைத்து நிலத்துக்கான இரண்டாவது தவணையை 2008-09ல் வதேரா செலுத்தினார். டிஎல்எப்பின் இன்னொரு முன்பணத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேஷன் வங்கியிடம் வாங்கிய லோனையும் அடைத்தார் வதேரா.
2008-09-ல் டிஎல்எப்புக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலம், அதற்காக கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்ட முன்பணம் இரண்டுமே ஸ்கைலைட்டின் கணக்கிலேயே 2011-12 வரை இருந்திருக்கின்றன.
‘இது போன்ற நிலப் பரிமாற்றங்களுக்கு 20-25 சதவீதம் முன்பணம் கொடுப்பதுதான் வழக்கம்’ என்கின்றனர் ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள். ’85 சதவீத முன்பணம் அசாதரணமானது’ என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் ’85 சதவீதம் முன்பணம் கொடுத்ததும், நிலத்தை ஸ்கைலைட் பெயரிலேயே விட்டு வைத்திருந்ததும் அதன் வழக்கமான வணிக நடைமுறை’ என்று டிஎல்எப் சாதிக்கிறது.
1940-50களில் டில்லியில் நிலம் வாங்கி மேட்டுக் குடியினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்த டிஎல்எப் 1957க்குப் பிறகு ஹரியானாவில் நிலம் வாங்க ஆரம்பித்தது. இப்போது டிஎல்எப்பின் குஷல் பால் சிங் $6.4 பில்லியன் (சுமார் ரூ 35,000 கோடி) சொத்துடன் போர்ப்ஸ் பத்திரிகையின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். 2011-12-ம் ஆண்டு டிஎல்ப் ரூ 4,582 கோடி மொத்த வருமானத்தில் ரூ 2109 கோடி லாபம் (சுமார் 46%) ஈட்டியிருக்கிறது.
வதேரா போன்ற அதிகார புரோக்கர்களுடன் டிஎல்எப் 70 ஆண்டுகளாக வைத்திருக்கும் கள்ள உறவுகள்தான் இவற்றை சாத்தியமாக்கியிருக்கின்றன. மறுபக்கம் கார்ப்பரேஷன் வங்கி, ஹரியானா அரசாங்கம், டிஎல்ப் மூன்றையும் பயன்படுத்திக் கொண்டு வதேரா அறுவடை செய்திருக்கிறார்.
ராஜீவ் -சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவனும் மொத்தத்தில் நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார். அவரது குடும்ப பின்னணி காரணமாகவே டிஎல்ப் உள்ளிட்டு பலரும் பணத்தை கொட்டி கொடுத்திருக்கின்றனர். ஆக இந்தியாவில் தொழில் முனைவோராக சாதிக்க வேண்டுமானால் நீங்கள் எந்த அரசியல் குடும்பத்தின் பின்னணி உள்ளவர் என்பதே தீர்மானிக்கிறது. www.vinavu.com
படிக்க:

கருத்துகள் இல்லை: