திங்கள், 15 அக்டோபர், 2012

அழகிரியை சிக்க வைக்க மதிவாணன் ஆபரேஷன்! இடையில் நடந்தது, எதிர்பாராத திருப்பம்!!

viruvirupu.com
கிரானைட் விவகாரத்தில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மதிவாணனுக்கு பதவி கொடுத்ததும், அதை மாற்றம் செய்ததும், மற்றொரு நபரை சிக்க வைக்கும் விளையாட்டு என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. கிரானைட் விவகாரத்தில் நேரடியாக சம்மந்தப்படாத அந்த ‘மற்றொரு நபர்’, மு.க.அழகிரி என்று என்று கூறி அதிர வைக்கிறார்கள்.
மதிவாணனை, தொழில் துறையின் இணைச் செயலாளராக நியமிப்பதாக செப்டம்பர் 27-ல் அறிவித்தது, அரசு. இந்த அறிவிப்பு பலருக்கு ஷாக்  கொடுத்தது. காரணம், முறைகேட்டில் சிக்கிய அவர் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட தொழில் துறைதான், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கவனிக்கும் துறை.
இந்த விவகாரம் கோர்ட்வரை செல்லவே, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “மறுநாளே அவரை அங்கிருந்து மாத்திட்டோமே” என்று சர்வ சாதாரணமாக கூறினார்! அவரை மாற்றியதாக அறிவிப்பு ஏதும் முறைப்படி வெளியாகியிருக்கவில்லை.
மதிவாணனை ஒரு முக்கிய ஆபரேஷனுக்காகவே அந்த பதவியில் கொண்டுபோய் வைத்தார்கள் என்கிறார்கள். மதிவாணன் மதுரையில் இருந்த காலத்தில், யாருடைய வற்புறுத்தல் காரணமாக ‘சில நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை அவரது வாயாலேயே சொல்ல வைப்பதுதான், அந்த ஆபரேஷனாம்.
அதாவது, ஒரு அரசு அதிகாரியாக, அரசு உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவுகளை மதிவாணன் நிறைவேற்றினார். உத்தரவிட்டவர்களுக்கு இதில் ஆதாயம் உள்ளது என்று கேஸ் ஒரு யு-டர்ன் அடித்து, அழகிரி பக்கமாக திரும்பும் என்று கூறப்படுகிறது.

உண்மையில் மதிவாணன் மதுரையில் பதவியில் இருந்ததே, சுமார் ஏழரை மாதங்கள்தான். அதில் அவர் எடுத்த விடுமுறையை கழித்தால், 6 மாதங்களைவிட சற்று அதிகமாக வருமாம். இந்த கிரானைட் விவகாரமோ, பல ஆண்டுகளாக நடைபெற்ற விவகாரம். அதில் மதிவாணன் முழுமையாக சம்மந்தப்பட்டிருக்க முடியாது.
மதிவாணன் மதுரையில் கலெக்டராக இருந்தபோது, அழகிரியின் நேரடி உத்தரவின்படியோ, அல்லது அழகிரி சொன்னதால், அப்போதைய தமிழக அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டதாலோ, கிரானைட் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டியிருந்ததாக மதிவாணனால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என்கிறார்கள்.
மதிவாணனும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், ஆனால், தம்மீது விழுந்த அவப்பெயரை போக்குவதற்காக அதே துறையில் தமக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும்,ஒரு பேச்சு உள்ளது. அதையடுத்தே அவர், தொழில் துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டாராம்.
ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போனது, இவர்கள் யாரும் எதிர்பாராத திருப்பம்.
அதையடுத்து, தொழில் துறையின் இணைச் செயலாளர் பதவியில் இருந்து அவரை தூக்கி, வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக உட்கார வைத்திருக்கிறார்கள். இப்போது, அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்! மதிவாணனுக்கு ஓகே என்ற வகையில் டீல் இருந்தால், அழகிரிக்கு சிக்கல் உண்டாகும் என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் துரை தயாநிதியை உள்ளே கொண்டுவந்தாலும், அது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், அழகிரி கொண்டுவரப்பட்டால், தி.மு.க.-வுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்!

கருத்துகள் இல்லை: