சனி, 20 அக்டோபர், 2012

சிறீரங்கத்தில் திடீர் "பிராமணாள் ஓட்டல்!" காவி அமைப்புகள் ஜாதி பேதம்



சிறீரங்கத்தில் உணவு விடுதி ஒன்றில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத் திருப்பது குறித்து முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத தாகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும்.
எத்தனையோ போராட்டங்கள்!
அதற்காக எத்தனை எத்தனையோ போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்கூட கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, 10 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபட்டனர். மூவாயிரம் கருஞ்சட்டையினர் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்; சிறைச்சாலையில் பலரும் மாண்டதுண்டு.
ஒரு காலகட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதியில் விளம்பரம் செய்யப்பட்ட துண்டு (குடிஅரசு 3.5.1936).
தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் அது ஒழிக்கப்பட்டது.
ரயில்வே உணவு விடுதியில் பிராமணாள் - சூத்திராள் பேதம்
ரயில் நிலைய உணவு விடுதிகளில் பச்சையாக பிராமணாள்  - இதராள் என்று போர்டு போட்டிருந்த நிலையும் உண்டு. மேட்டுப்பாளையம் ரயில்வே உணவு விடுதியில் ஒருபடி மேலே சென்று, சூத்திரர்களுக்கு என்று வெளிப்படையாக எழுதப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதலையில் (27.1.1941) இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் தலையங்கம் தீட்டினார்.
வெள்ளைக்கார அரசு தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அந்தப் பேதத்தை ஒழித்து உத்தரவிட்டது (8.2.1941).
ரயில்வே நிலையங்களில் இருந்த எல்லா உணவு விடுதிகளிலும் 20.3.1941 முதல் பிராமணாள் - சூத்திராள் பேதம் ஒழிக்கப்பட்டது. அதற்காக ரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாக ஒரு நாளே கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அத்தகைய விழாவில் சேலத்தில் கலந்து கொண்டனர் (30.3.1941).
1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய போராட்டம்!
இன்னொரு கால கட்டத்தில் 1957இல் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உணவு விடுதி களில் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்று இருந்த பெயரை நீக்கக் கோரும் அறிவிப்பு அது (27.4.1957).
பலர் தாங்களாகவே நீக்கிக் கொண்டனர். சில இடங்களில் தார் கொண்டு அழிக்கப்பட்டது. சென்னை யில் திருவல்லிக்கேணி பகுதியில் முரளீஸ் கபே முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் நீக்க மறுத்தார்!
முரளீஸ் கஃபே
தந்தை பெரியார் வன்முறைக்கு இடம் அளிக்காமல் நாள்தோறும் தோழர்களைக் கொண்டு மறியல் போராட்டத்தை நடத்தச் செய்தார். தொடர்ந்து எட்டு மாத காலம் நடந்தது. 1010 திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றனர். பிறகு வேறு வழியின்றி அந்த உணவு விடுதி உரிமையாளர் தந்தை பெரியாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிராமணாள் பெயரையும் அகற்றிக் கொண்டார் (22.3.1958). அய்டியல் கபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!

1970-லும் பெரியார் அறிவிப்பு!
மீண்டும் சிற்சில இடங்களில் உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் தலை தூக்கியபோது, 1970இல் மீண்டும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். போராட்டத்துக்கு வேலை யின்றியே அவரவர்களும் பெயர்களை நீக்கிவிட்டனர்.
1978இல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எழுதிய கடிதம்
1978ஆம் ஆண்டிலும் போராட்டத்திற்கு வேலை ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருஷோத்தமன் அவர்களுக்கு இதுகுறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் கடிதம் எழுதினேன் (20.9.1978).
இரண்டே நாட்களில் (22.9.1978) அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த தாவது:
பேரன்புடையீர்,
வணக்கம். தங்களுடைய 20.9.1978 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் குறிப்பிட்டபடி உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை வியாபார ரீதியாக சுத்த சைவமான (Pure Vegetarian) உணவு விடுதி என்று பொது மக்களுக்குத் தெரிவதற்காக உபயோகிக்கப்பட்டு வந்து இருக்கிறது. உயர் ஜாதித் தன்மையைக் குறிக்கும் நோக்கத்துடன் போர்டுகள் எழுதப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கிறோம்.
மேலும் தற்கால ஜாதி சமயமற்ற சமதாய நோக்கோடு பெரும்பாலான உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி இருக்கிறார்கள்.
தற்போது பிராமணாள் என்ற வார்த்தை அடங்கிய பெயர்ப் பலகை கொண்ட உணவு விடுதிகளைக் காண்பது மிக மிக அரிது. தங்களின் கடிதத்தையொட்டி எங்கள் சங்கம் ஒரு சுற்றறிக்கையில் எந்த உணவு விடுதியிலாவது பிராமணாள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு மானால், தற்கால நிலைமைக்கு ஏற்ப அந்தச் சொல்லை நீக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இவ்விஷயத்தில் எங்கள் சங்கத்தின் முழு ஒத்து ழைப்பை தரத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு ஓட்டல்  சங்கத் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள் எழுதிய கடிதம் 24.9.1978 நாளிட்ட விடுதலையில் முதல் பக்கத்தில் வெளியிடவும் பட்டது.
ஒரு நீண்ட வரலாறுண்டு
இந்தப் பிராமணாள் எதிர்ப்பு - எழுத்து அழிப்பு என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இதனை இப் பொழுது விளக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது முக்கியமாகும்.
சிறீரங்கத்தில் திடீர் பிராமணாள்!
தாங்கள் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள சிறீரங்கத்தில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் திரு. கிருஷ்ண அய்யர் என்பவர் நடத்தும் உணவு விடுதியில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத்திருக்கிறது.
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்ததன் பேரில், உரிமையாளரை நேரில் அணுகிக் கேட்டுக் கொள்ளுங்கள். எடுக்க மறுக்கும் பட்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்பற்றி அறிவிக்கலாம் என்று கூறியி ருந்தோம்.
காவி அமைப்புகளின் துணையோடு...
அதுபோன்றே திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் கேட்டுக் கொண்டதற்கு உணவு விடுதி உரிமை யாளர் பிடிவாதமாக பிராமணாள் பெயரை நீக்க மறுத்துவிட்டார். சில காவி அமைப்புகள் அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினையில் முதல் அமைச்சராகிய தங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
2012-லும் பிராமணாளா?
2012ஆம் ஆண்டிலும் பிராமணாள் - சூத்திராள் பேதத்தை நினைவூட்டி வலியுறுத்தும் போக்குகள் தேவைதானா?
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளோம். (13.10.2012).
தாங்கள் தலையிடுக!
முதல் அமைச்சர் என்பதைவிட, தங்களின் தொகுதி என்ற முன்னுரிமையில் தாங்கள் தலையிட்டு, இந்தப் பிரச்சினையில் சுமுக சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். முயற்சிப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் எங்கள் போராட்டத் திற்கும் அவசியம் இல்லாத ஒரு நிலை ஏற்படக் கூடும்.
சில வாரங்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் இதுபோல பிராமணாள் ஓட்டல் என்று இருந்ததை, எங்கள் கழகத் தோழர்கள் கேட்டுகொண்டதன் பேரில், பிராமணாள் பெயரை நீக்கிவிட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல; தந்தை பெரியார் முன்பு கையாண்ட வழிமுறைப்படி அறப்போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாதது என்பதைத் தங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.
வரும் 28ஆம் தேதி சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள்,
கி.வீரமணி

கருத்துகள் இல்லை: