திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யா தொடர்வாரா ?

பி.பி.யாக ஆச்சார்யா தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அளவில் கவனிக்கப்படுகின்ற மிக முக்கியமான வழக்கு. ஆவணங்களே ஆதாரங்களாக அடுக்கப்பட்டுள்ளன. எனினும் 16 ஆண்டுகளாக வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. அத்தகைய வழக்கில் தற்போது மற்றுமொரு எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம்.
பெங்களூருவில் நடக்கும் ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.பி.ஆச்சார்யா. அவர், பெயர் மற்றும் பதவிக்கு ஏற்ப ஆச்சரியமும் சிறப்பும் ஒருசேர கொண்ட நபர். இவர் கடந்த 13-ம் தேதி திடீரென்று, "நான் இனிமேல் ஜெ.வுக்கு எதிராக நடக்கும் வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகமாட்டேன். எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என கர்நாடக சட்டத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். 14-ந் தேதி மதியம் அரசல் புரசலாக தெரியவந்த இந்த கடிதம் சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் தந்தது.


கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க.வின் அப்போதைய முதல்வர் சதானந்த கவுடா, ஆச்சார்யாவிடம் ""நீங்கள் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் ஜெயலலிதாவுக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என இரு பதவிகளில் இருக்கிறீர்கள். எனவே சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த ஆச்சார்யா, ""மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி, மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கொடுத்த பதவி. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர் நாடக உயர்நீதிமன்றம் எனக்கு அளித்த பதவி. நீங்கள் ஜெ.வுக்காக அந்த பதவியிலிருந்து என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறீர்கள். அதற்குக் காரணமாக, நான் இரண்டு பதவி களை வைத்திருக்கிறேன் என சுட்டிக்காட்டு கிறீர்கள். நான் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது அவ்வளவுதானே. கர்நாடக பா.ஜ.க. அரசு கொடுத்த அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஜெ.வுக்கு எதிரான வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நான் செயல்படுவதை உங்களால் தடுக்க முடி யாது'' என முதல்வர் சதானந்த கவுடாவின் முகத் துக்கு நேரே ஓங்கிச் சொல்லி, ஜெ.வுக்கு எதிரான வழக்கில் தான் வகிக்கும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவிதான் உயர்ந்தது என்ற முடிவெடுத்து அனை வரையும் ஆச்சரியப்படுத்தியவர் ஆச்சார்யா. அந்த பரபரப்பு முடிந்து 6 மாதம் கழித்து, தான் உயர்வாகக் கருதிய சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அதே ஆச்சார்யா.

ஏன் இந்தத் திடீர் திருப்பம் என சுதந்திர கொண்டாட்டங்களை முடித்துவிட்டு சொந்த ஊரான உடுப்பிக்கு போவதற்காக காரில் ஏறிக்கொண்டிருந்தவரை நிறுத்திக் கேட்டோம்.

ஆழ்ந்த சிந்தனையுடன் விளக்கினார்.

""நான் கர்நாடகத்தில் பிறந்தவன் என்றாலும் எனது அடிப்படையான சட்ட அறிவு தமிழகத் திற்குச் சொந்தமானது. நான் பிறந்த உடுப்பி, பிரிட் டிஷ் ஆட்சி காலத்தில் சென்னை ராஜதானியில் இருந்தது. அதனால் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த நான், வழக்கறிஞராக பயிற்சி பெற்றதும் சென்னையில்தான். எத்திராஜ் மகளிர் கல்லூரியை நிறுவிய பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் எனது குருநாதர். தமிழகத்தின் பிரபல வழக்கறிஞர் என்.டி.வானமாமலை போன்றோ ருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன்.





2005-ஆம் வருடம் ஜெ.வுக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் என்னை சிறப்பு அரசு வழக்கறிஞராக சுப்ரீம் கோர்ட்டும், கர்நாடக உயர்நீதி மன்றமும் நியமித்தபோது, அகமகிழ்ந்தேன். தமிழகத்தின் முதல்வராக இருந்தவருக்கு எதிரான வழக்கு. இதை ஒட்டுமொத்த தமிழகமே உன்னிப்பாகப் பார்க்கும். தமிழகத்தைச் சேர்ந்த பெரிய சட்ட வல்லுநர்கள் எல்லாம் வருவார்கள், வாதிடுவார்கள். அவர்கள் வாதத்திற்கெதிராக நான் வாதம் செய்வேன். இந்த வழக்கு இந்திய நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானதாக இடம் பெறும் என நினைத்து சந்தோஷப்பட்டேன்.

இந்த வழக்கை அப்போது நடத்திவந்த காவல்துறை அதிகாரிகளான துக்கையாண்டியும், நல்லம்மநாயுடுவும் என்னிடம் இந்த வழக்கைப் பற்றி விவரித்தார்கள். ஒரு முதல்வர் செய்த ஊழல் விவகாரங்களை இந்த வழக்கில் சொல்லப்பட்ட தைப் போல சிறப்பாக வேறெந்த வழக்கிலும் இது வரை விவரிக்கப்படவில்லை என்பதை உணர்ந் தேன். அந்த அளவிற்கு மிக மிக கடுமையாக உழைத்து, எந்தவிதமான ஓட்டையும் இல்லாமல் அழகாக செதுக்கப்பட்டிருந்த இந்த வழக்கு நிச்சயம் வெற்றிபெறும் என்றும் நம்பினேன். ஆனால் முதல் குற்றவாளியான ஜெ., மறுபடியும் முதல்வராகி பதவியேற்ற பிறகு நிலைமை மாறியது.

ஜெ. சட்டபூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள் வார். பெரிய வழக்கறிஞர்களை அனுப்புவார். எனது சட்ட அறிவு மூலம் அவர்களை எதிர்கொள்ளலாம் என நான் நினைத்ததற்கு நேர்மாறான வழக்கறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் வேலையெல்லாம் இந்த வழக் கை எப்படி இழுத்தடிப்பது என்பதிலேயே இருந்தது.

"இந்த வழக்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் முறை யாக விசாரிக்கப்படவில்லை. எனவே வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும்' என்பதுதான் வழக்கை நடத்தும் அரசுத் தரப்பான லஞ்ச ஒழிப்புத்துறை கொண்டுவந்த முதல் கோரிக்கை. லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் பொறுப்பில் இருப்பது.

"இது வழக்கை தாமதப்படுத்தும் செயல். இதன் முடிவில் "ஜெ.' குற்றமற்றவர் என போலீசாரே சொல்ல வாய்ப்பிருக்கிறது' என அந்த கோரிக்கையை எதிர்த் தேன். அதே கோரிக்கையோடு கர்நாடக உயர்நீதிமன் றத்திற்கும் போனார்கள். அங்கும் நான் கடுமையாக வாதாடினேன். உயர்நீதிமன்றம் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டது. அன்று முதல் ஜெ. என்னை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார். அவர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு தடையாக எனது சட்ட அறிவும் நேர்மையும் இருக்கிறது என அவர் புரிந்துகொண்டார் போலும்.

2005 முதல் 2011 வரை தனது வழக்கறிஞர்கள் மூலம் ஒவ்வொரு மனுவாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். அதை சிறப்பு நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நான் முறியடிப்பேன். அதை பெரிய வழக்கறிஞர்கள் துணையோடு சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்வார். அதையும் கீழ் கோர்ட்டுகளில் நான் எடுத்து வைத்த வாதங்கள், அதன் அடிப்படை யில் வந்த தீர்ப்புகள் முறியடிக்கும். சில சந்தர்ப்பங்களில் நானே சுப்ரீம் கோர்ட்டில் போய் வாதிடுவேன். இப்படி நான் அந்த ஐந்தாறு வருடங்களில் "ஜெ.'வின் இழுத்தடிப்பு முயற்சிகளையெல்லாம் முறியடித்தேன். அது அவரது கோபத்தை அதிகப்படுத்தியது.

இந்த இழுத்தடிப்பு வேலையையெல்லாம் தாண்டி கடந்த வருடம் முதல்வராக மூன்றாவது முறை பொறுப்பேற்ற ஜெ.வை அவர் மீதான குற்றச்சாட்டு களுக்குப் பதில் சொல்ல சிறப்பு கோர்ட்டுக்கு நேரில் வர வைத்தேன். இதன்பிறகு "ஜெ.' தனது இன்னொரு முகத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

ஜெ.வின் கீழ் இயங்கும் போலீசார் திடீரென்று, சென்னையைச் சேர்ந்த எம்.பி.நானைய்யா அசோசி யேஷன் என்கிற குழுமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் களை எனக்குப் பதிலாக, ஆஜராக வைத்தனர். அதை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அந்த முயற்சி தோற்றவுடன் கர்நாடக கவர்னரிடம், "நான் அட்வகேட் ஜெனரல், ஜெ.வுக்கு எதிரான வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என இரண்டு பதவி வகிப்பதால், ஒருவர் இரு பதவிகள் வகிக்கக்கூடாது. எனவே என்னை அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என ஒரு மனு அளித்தார்கள். அதே கோரிக்கையை பொதுநல வழக்காகவும் கர்நாடக உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்தார்கள். அதை கர்நாடக உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

முதலில் எனக்கெதிராக யார் செயல்படு கிறார்கள் எனப் புரியாமல் இருந்தேன். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் எனது இரு பதவிகள் தொடர்பான வழக்கை டிஸ்மிஸ் செய்த பிறகு, என்னை அழைத்து பேசிய கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, "நீங்கள் ஜெ.வுக்கெதிரான வழக்கில் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜி னாமா செய்யுங்கள். அட்வகேட் ஜெனரலாக தொடருங்கள்' என சொன்னபோது, "ஜெ.தான் எனக்கு எதிராக இவ்வளவும் செய்கிறார்' என புரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்த வரை நான் ஒரு வழக்கறிஞர் அவ்வளவுதான். அதுவும் அரசு வழக்கறிஞர். நான் ஜெ.வுக்கு எதிரானவன் அல்ல. நான் என் கடமையைச் செய்கிறேன்.

ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றமற்றவர் என தன்னை நிரூபித்து வெளியே வர வேண்டுமென்றால், எனது உதவி அவருக்கு நிச்சயம் தேவை. ஒரு அரசு வழக்கறிஞர் குற்றவாளிக்கு தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல. அவர் தனது கடமையைச் செய்கிறார் என்பதை ஜெ. புரிந்துகொள்ளத் தவறிவிட் டார். நான் அந்த சூழ்நிலையில் நியாயத்தை, தர்மத்தை விட்டுவிட தயாராக இல்லை. உங்க ளுக்கு நான் இரண்டு பதவிகள் வகிக்கக்கூடாது அவ்வளவுதானே என எனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து, எனது பக்க நியாயத்தை குறிப்பால் உணர்த்தினேன்.

அதன்பிறகு ஜெ.தரப்பு இன்னமும் விசுவரூபமெடுத் தது. நான் சட்டத்தை மதிப்பவன். நேர்மையை எனது உயிராக நினைப்பவன். சட்டமும் நேர்மையும் எனது இரண்டு கண்கள். கடந்த மூன்றரை வருடங்களாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஜெ. தரப்பு கால நீட்டிப்பு அவகாசம் கேட்டபோதெல்லாம் எனது கடுமை யான எதிர்ப்பை மீறி அனுமதித்தார். மிக நல்லவரான அவர், ஜெ. தரப்புக்கெதிராக பேசிக்கொண்டே அவர் களது இழுத்தடிப்பு வேலைகளை அதிகபட்சமாக அனு மதித்தார். அதை எதிர்த்து கோர்ட்டில் வாதாடினேனே தவிர, கோர்ட்டுக்கு வெளியே வேறெந்த வேலையையும் நான் செய்யவில்லை.

ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவில் அரசு வழக்கறிஞர்கள் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டப்படி அமைக்கப்பட்ட லோக்ஆயுக்தா கோர்ட்டில், நான் ட்ரஸ்ட்டியாக இருக்கும் பி.எம்.எல். கல்வி அறக்கட்டளையில் நிதி முறைகேடும், நிர்வாக சீர்கேடும் நடந்துள்ளது. ஜெ. வழக்கில் அரசு வழக்கறிஞர் என்பதால் "ஆச்சார்யா அரசு ஊழியர். எனவே அவர் மீது ஊழல் புகார் விசாரணை நடத்தவேண்டும்' என யாரோ பெயர் தெரியாத வெங்கடசேஷய்யா என்பவரை தூண்டிவிட்டு மனு தாக்கல் செய்ய வைத்தார். அதை அந்த நீதிமன்றம் ஏற்கவில்லை. மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

ஓட்டை உடைசல்களுடன் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவுக்குப் பதிலாக மார்ச் மாதம் இரண்டாவது மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு, பெரிய வழக்கறி ஞர்கள் துணையுடன் புதுடில்லியில் தயாரிக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது டெல்லியிலிருந்து ஒரு பெரிய வழக்கறிஞர் படையே வந்து மிகச்சிறிய நீதிமன்றமான லோக் ஆயுக்தா கோர்ட்டில் எனக்கெதிராக வாதாடியது.

டெல்லியிலிருந்து வந்து எனக்கெதிராக வாதாடிய டோனி செபாஸ்டியன் என்கிற வழக்கறிஞருக்கு உதவியாக வந்த உதவியாளர் படை சென்னையிலிருந்து வந்திருந்தது.

இவையெல்லாம் யாருடைய வேலை எனத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். லோக் ஆயுக்தா நீதிமன்றம் எனக்கெதிரான ஊழல் புகாரை விசாரித்து அறிக்கை தருமாறு கர்நாடக போலீசுக்கு உத்தரவிட்டது.

இது என்னை மிகவும் காயப்படுத்தியது. சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் எனக்கெதிராக போலீஸ் விசாரணையா? என அதிர்ச்சியுடன் லோக் ஆயுக்தா கோர்ட்டில் என்ன நடந்தது என விசாரித்தேன். எனக்கு எதிராக நடக்கும் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க தமிழக முதலமைச்சரின் செயலாளர்கள் இரண்டு பேர் பெங்க ளூருவில் முகாமிட்டிருந்தார்கள் என தெரிந்துகொண் டேன். உடனே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டில் போலீஸ் விசாரணை உத்தரவுக்கெதிராக வழக்குப் போட்டேன்.

உயர்நீதிமன்றம், நான் ஜெ.வுக்கெதிரான வழக்கில் ஆஜராவதால் என்னை தனிப்பட்ட முறையில் பழிவாங்க லோக் ஆயுக்தா கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்கிற எனது வாதத்தை ஏற்றுக்கொண்டதோடு, அதையே தீர்ப்பாகவும் தந்து எனக்கெதிராக வழக்கு தொடர்ந்த வெங்கடசேஷையாவிற்கு 50,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

சென்னையில் சட்டப்படிப்பு பெற்ற நான், வாழ்நாள் முழுவதும் சட்டத்தின் மாட்சிமையை தூக்கிப்பிடித்து பணத்திற்காக ஆசைப்படாமல் நேர்மையாக உழைத்துவருபவன். எளிமையான வாழ்க்கை வாழ்பவன். பல வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டத்தின் ஆட்சி யை நிலைநாட்டத்தான் நான் உழைத்தேன். இதற்குப் பரிசு 50 வருடம் உழைத்துச் சம்பாதித்த எனது தனிப்பட்ட நேர்மைக்கு எதிராக கிரிமினல் வழக்கு என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

"ஜெ.' மீதான வழக்கு இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர என்னைப் போன்ற வழக்கறிஞர் மட்டும் போதாது. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையிட வேண்டும். தற்போது உள்ள நீதிபதி மல்லிகார் ஜுனய்யா நேர்மையானவர், நல்லவர், சட்ட அறிவு நிரம்ப உள்ளவர். ஆனால் அவர் ஏனோ வழக்கை நீட்டிக்க அனுமதி அளித்துவிட்டார். அவரைவிட கடுமையான ஒரு நீதிபதி, என இவை அனைத்தும் அமைந்தால்தான் இந்த வழக்கு முடியும்.

என் மீது குற்றம்சாட்டப்பட காரணமாக இருந்த கல்லூரி ட்ரஸ்ட்டியாக நான் வகித்த பதவி, கடந்த 3-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. அன்றுதான் உயர்நீதிமன்றம் என்மீதான குற்றச்சாட்டு பொய் என உறுதி செய்தது. அதன் பிறகுதான் நான் எனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன்.

எனது ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொள்ளும். நான் யாருக்கும் பயந்துபோய் ராஜினாமா செய்யவில்லை''-என புறப்பட்டார் ஆச்சார்யா.

நீதியும் நேர்மையும் இங்கே என்ன பாடு படுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது ஆச்சார்யாவின் ராஜினாமா.

-பிரகாஷ்
அட்டை மற்றும் படங்கள்: ஸ்டாலின்

திருப்பம்!

சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா பதவியில் நீடிப்பதை எதிர்த்து ஜெ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 16 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்திரமோகன் கவுடா முன், மல்லிகார்ஜுனய்யா தரப்பில் ஆஜரானார் ஆச்சார்யா. அப்போது, ""நான் பி.பி. இல்லை. ராஜினாமா செய்து விட்டேன்'' என்றார்.

உடனே நீதிபதி சந்திரமோகன் கவுடா, ""வழக்கில் உங்களின் ஒத்துழைப்பு தேவை'' என்று வலியுறுத்தியதையடுத்து, ஆகஸ்ட் 17 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராக ஒப்புக்கொண்டார் ஆச்சார்யா. நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகே, சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அப்போது பி.பி.யாக ஆச்சார்யா தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
thanks nakkeeran + S.Kumarmangalam Mumbai

கருத்துகள் இல்லை: