புதுடில்லி: ""இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில்
இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது,
தடுக்கப்பட்டுள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்
கூறினார்.
டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்காற்றுகின்றன. "அணு ஆயுதங்களை போர்க்களத்தில் பயன்படுத்த மாட்டோம்' என, துவக்கம் முதலே, இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒரு சில நாடுகள், போருக்கு பயன்படுத்துவதற்காக, அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன.
அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலை. சமீபகாலமாக, பெரும்பாலான நாடுகளும், மக்களும், "அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும்' என்ற வாதத்துக்கு ஆதரவு தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதற்கு முன், இந்த அளவுக்கு ஆதரவு எழுந்தது இல்லை.
உலகில், அணு ஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. இதற்கு, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். அதேநேரத்தில், நாட்டு மக்களை, வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், அரசுக்கு உள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து, மக்களை பாதுகாப்பதற்காக, அணு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சிவசங்கர் மேனன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக