திங்கள், 20 ஆகஸ்ட், 2012

மியன்மாரில் இன்றுமுதல் செய்தி தணிக்கை நீக்கம்

நீண்ட கால செய்தித் தணிக்கை, இன்று காலை எதிர்பாராத விதமாக நீக்கம்!

Viru News நீண்ட காலமாக அமலில் இருந்த செய்தித் தணிக்கை இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது மியன்மார் அரசு. இதுவரை காலமும் நாட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் வெளியுலகத்தை எட்டாத வண்ணம், கடுமையான தணிக்கை முறை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், இன்று முதல் செய்தித் தணிக்கை கிடையாது என்ற அறிவிப்பு, மியன்மார் அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கவில்லை. செய்தியாளர்கள் இன்று காலை தமது செய்திகளை தணிக்கை செய்வதற்காக கொடுக்கச் சென்ற இடத்திலேயே, இனி தணிக்கை கிடையாது என்ற செய்தியை தெரிந்து கொண்டனர்.
மியன்மாரில் வெளியாகும் மாலைச் செய்திகளை, காலையிலேயே செய்தியாளர்கள் அரசு அலுவலகம் ஒன்றுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
‘அரசு செய்தி பதிவு அலுவலகம்’ என்று அழைக்கப்படும் இந்த அலுவலகம், குறிப்பிட்ட செய்தி பிரசுரத்துக்கு ஏற்றது என்று கிளியர் செய்து கொடுத்த பின்னரே, ஊடகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இன்று காலை தத்தமது செய்திகளுடன் சென்றிருந்த செய்தியாளர்களிடம் செய்தி பதிவு அலுவலக அதிகாரிகள், “இனி நீங்கள் இங்கு வர வேண்டியது அவசியமில்லை. செய்தி தணிக்கை முறை இனி கிடையாது” என்று தெரிவித்தனர்.
மியன்மார் அரசின் இந்த நடவடிக்கை, உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கொடுத்த அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: