வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அல்லிராணிக்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்!




ஜெயலலிதா கொட நாட்டில் தங்கி ஓய்வு அரசியல் செய்வதை சுட்டிக்காட்டியதற்காக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி செல்வம் போன்றவர்கள் அக்டோபர் 10 அன்று சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். 9-ம் தேதிக்குள் ராமதாசும், ஆனந்தவிகடன் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும், 15-ம் தேதி விஜயகாந்த் மற்றும் தி ஹிந்து நாளிதழின் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும் ஆஜராக வேண்டுமாம்.

கொட நாட்டில் தங்கியிருந்து அறிக்கைகள் மற்றும் வெற்று அறிவிப்புகளால் ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா என்று விஜயகாந்த் ஆகஸ்டு 1-ம் தேதியன்று பேசியதன் பேரில் அவர் மீதும், செய்தியை வெளியிட்ட தி ஹிந்து பத்திரிக்கை மீதும் அவதூறு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனை எதிர்க்காமல் வழக்கில் ஜெயலலிதா தன்னைப் பற்றி கூறிய சுயதம்பட்டங்களையே மறுநாள் பதிவுசெய்து முதல்வரிடம் விசுவாசத்துடன் வாலை ஆட்டியது தி ஹிந்து.
சென்னையில் காலரா பரவி தற்போது ஏற்படும் மரணங்கள் தான் மேயராக இருந்தபோது ஏற்படவில்லை எனச் சொன்னதற்காக ஸ்டாலின் மீது வழக்குத் தொடருவோம் என அதிமுக மிரட்டியது.

ஜெயா ஆட்சிக்கு தான் போட்ட மார்க்கில் 10 ஐக் குறைத்திருப்பதாகவும் ஊழல் நிறைந்திருப்பதாகவும், முதல்வரை தொடர்புகொள்ள அதிகாரிகளுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும், வேறு மாநில முதல்வர்கள் இப்படியா ரெஸ்ட் எடுக்கிறார்கள்? என்றும், வரும் தேர்தலில் 2000 ரூபாய்க்கு பதிலாக 3000 கொடுத்தால் ஜெயிக்கலாம் என்ற தைரியத்தில் மலை மேல் தூங்குகிறார் என்று ஆகஸ்டு 1 தேதியிட்ட ஆவி வார இதழுக்கு அளித்த பேட்டியில், கூறியிருக்கிறார் ராமதாசு. இவர் மீதும் வழக்கு, இந்த செய்திகளை வெளியிட்டதற்காக ஆனந்த விகடன் மீதும் வழக்கு.
செயல்படாத பிரதமர் என மன்மோகனை சொல்லும்போது பதிலுக்கு அவருக்கு கோபம் வந்து இது அவதூறு என கேசு போட முடியுமா? அப்படிப் போட்டால் தேசிய ஊடகங்கள் சாமியாடியே மக்குசிங்கை காலி செய்து விடமாட்டார்கள? ஆனால் அந்த உரிமை தமிழகத்தில் மட்டும் இல்லையென்றால் ஏன்? மலை மேல ஏம்மா தூங்குற? கொஞ்சம் மலைய விட்டு இறங்கு! எனச் சொன்னதற்காக நான்கு வழக்குகள், இதனை விசாரிக்க ஒரு நீதிமன்றம், அந்தம்மாவுக்கு துதிபாட சில அரசு வழக்கறிஞர்கள்..
ஆனால் பெங்களூருவில் நடக்கும் சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்காடும் ஆச்சார்யா இந்த அம்மாவோட வாய்தாக்களைப் பார்த்து ஆள விடுங்கடா சாமி என ராஜினாமாவுக்கு முன்வந்தது, அவரை சமாதானப்படுத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி.. எனப் பார்த்தவர்களுக்கு இவர் நீதிமன்றங்களை மதிக்கும் யோக்யதை தெரியும்.
ஆனால் இந்த வழக்குகளை கண்டித்துப் பேச எதிர்க்கட்சிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தைரியமில்லை. ஒரு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் அவ்வளவு ஏன்? அறிக்கைகளுக்கு கூட தயாராக இல்லை. இந்தக் கோழைகளை விடுங்கள். கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்பதாக பீற்றிக் கொள்ளும் பத்திரிக்கைகள் கொட நாட்டு அல்லி ராணியை, அவரது பாசிச நடவடிக்கைகளை, இத்தகைய பொய் வழக்குகளை கண்டித்து தலையங்கம் தீட்டவோ, கேலிச்சித்திரம் வரையவோ கூட தயாராக இல்லை. ஹிந்து காலில் விழுந்தால், தனது லூசுப்பையன் பகுதியில் கூட கலாய்க்க திராணியில்லாமல் இருக்கிறது ஆனந்த விகடன்.
உலகறிந்த உண்மையை சொல்லத் திராணியற்ற ஊடகங்கள்தான் பாசிஸ்டுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஊடகங்கள் தமது மவுனத்தின் மூலம் இந்த அவதூறு வழக்குகளை நியாயம் என்று அடக்கத்துடன் ஆதரிக்கின்றன. ஜெயாவின் திமிர் பிரச்சினை அல்ல. அந்தத் திமிரை தட்டிக் கேட்க துப்பற்ற ஊடக அடிமைத்தனம்தான் தமிழ்நாட்டின் ஆகப் பெரிய அவமானம்!
 இப்படித்தான் ஈழப்புலிகளுக்கு பல்லக்கு தூக்கியே அவர்களை இல்லாமல் செய்துவிட்டன ஜூனியர் விகடன் வகையறாக்கள்
www .vinavu .com  

கருத்துகள் இல்லை: