ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஏமாந்த அப்பாவிகள் தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு கொடுத்திருக்கின்றனர்.
நாட்டுக் கோழிக்கு இது ஒரு துவக்கமென்பதால் வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம். இதை முன்னரே எதிர்பார்த்து பல நாட்டுக்கோழிப் பண்ணை அதிபர்கள் ஈமு கோழிப் பண்ணை அதிபர்களைப் போல தலைமறைவாயிருக்கின்றனர்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பண்ணை மோசடிகள் திசைக்கொன்றாய் கிளம்பும் நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாட்டுப் பண்ணை, வான்கோழிப் பண்ணை, கொப்பரைப் பண்ணை உள்ளிட்ட சர்வலோக பண்ணைகளிலும் ஆய்வு நடத்துகின்றார்களாம். இவர்களின் ஆய்வுக்கு உதவி செய்யும் முகமாக அந்தப் பண்ணை அதிபர்களும் அலுவலகத்திற்கு பூட்டைப் போட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கின்றனர்.
வங்கக் கடலுக்கு கீழே உள்ள நிலத்தையே பட்டாபோட்டு அரசு வங்கிகளுக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் ஆண்டவன்கள் வாழும் தமிழகத்தில் ஏமாறுவதற்கு தமிழன் என்றுமே சளைத்தவனல்ல. 90களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பிளேடு பக்கிரி சிட் பண்ட் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர் இலட்சக்கணக்கில் முதலீடு போட்டு ஏமாந்தனர். அவர்கள் இன்றும் சென்னை பனகல் பார்க்கில் விடுமுறை நாட்களில் சந்தித்து விட்ட பணத்தை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கின்றர். இதைத் தொடர்ந்து தேக்கு மரம், தங்கம், ரிசார்ட் என்று சற்று பசையான மாதச் சம்பளம் வாங்கும் அறிவாளிகள் ஏமாந்த கதையும் அதிகம். ஆனால் இன்றுவரை எந்தப் பணமும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
வாழ்க்கைக்கு உதவ இயலாத நிலைக்கு மாறிவிட்ட விவசாயத் தொழிலின் அழிவிலிருந்தே ஈரோடு பகுதியில் இத்தகைய ஜேப்படி பண்ணைகள் தோன்றின. சிட்ஃபண்ட் மோசடி போல இது வெறுமனே பணத்தை போட்டு வட்டிக்கு ஏங்கும் விசயமல்ல. ஏதாவது ஒரு தொழிலை செய்து கடைத்தேறமாட்டோமா என்ற விவசாயிகளின் ஆதங்கமே இப்படி பண்ணைகளில் சிக்கியிருக்கிறது.
திட்டமிட்டு விவசாயத்தை அழித்த அரசு, இத்தகைய பண்ணைகள் பகிரங்கமாக விளம்பரம் செய்து தொழிலை விரிவுபடுத்தும் போது கண்டு கொள்ளவில்லை. சொல்லப் போனால் இத்தகைய பண்ணைகளுக்கு பல்வேறு அரசுத் துறைகள் பலவழிகளிலும் உதவி செய்திருக்கின்றன. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாமூலை வாங்கிக் கொண்டு அமைதி காத்தனர். வாயாலேயே மின்சாரம் தயாரிக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுதில்லியில் சுசி நிறுவனத்தின் ஈமு உணவகத்தையே திறந்து வைத்திருக்கிறார். மார்க்கெட் இல்லாத ஆனால் பிரபலமான நட்சத்திரங்கள் பலர் விளம்பரங்களில் நடித்து ஆசையை உருவாக்கியிருக்கின்றனர். இவர்களையெல்லாம் யார் தண்டிப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக