வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

2000 வருடங்களாக எம்மை படிக்கவே விடவில்லை


மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 5
இந்திய வரலாற்றாய்வில் தரம்பால் ஈடுபாடு கொண்டது மிகவும் தற்செயலாக நடந்த ஒரு செயல் என்றுதான் சொல்லவேண்டும். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றாலும் அடிப்படையில் லட்சிய கிராம (ஆஸ்ரம) வாழ்க்கை வாழ்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1948 வாக்கில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் Kibbutzim பாணியில் வாழ்வதைக் கேள்விப்பட்டு அங்கு போய்ப் பார்த்தார். ஆனால், அது இந்திய சூழலுக்கு ஒத்துவராது என்று அவர் மனதுக்குப் பட்டது. ரிஷிகேஷில் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கூட்டுப் பண்ணை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அனைத்து குடும்பத்தினருக்கும் சம அளவிலான நிலம் என அது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருந்தது. ஆனால், அவர்களுக்கிடையே ஒருவித ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை.
அதன் பிறகு வேறு பல விஷயங்களில் ஈடுபட்டவர் 1960-ல் ஒரு ரயில் பயணம் மேற்கொண்டார். அது அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று சொன்னால் மிகையில்லை. அதை அவருடைய வார்த்தையிலேயே பார்ப்போம்:

1960 வாக்கில் குவாலியரில் இருந்து டெல்லிக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்தேன். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஆறு-ஏழு மணி நேரப் பயணம். அந்தப் பயணத்தில் ஒரு சிலரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு ஒருவகையில் எனக்கு இந்தியாவைப் பற்றிய அதாவது, உண்மையான இந்தியாவைப் பற்றிய ஒரு பக்கத்தைத் திறந்து காட்டியது.
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருந்தும் தங்களை ஒடுக்கிக் கொண்டு சிலர் எனக்கு உட்கார இடம் ஏற்படுத்தித் தந்தனர். அங்குதான் அவர்களைச் சந்தித்தேன். சுமார் 12 பேர் அந்தக்குழுவில் இருந்தனர். மூன்று நான்கு பெண்கள். ஏழெட்டு ஆண்கள்.
எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.
ராமேஸ்வரத்துக்கும் வேறு சில இடங்களுக்கும் புனித யாத்திரை முடித்துவிட்டு வருகிறோம் என்றார்கள்.
சுமார் மூன்று மாதமாக அந்தப் பயணத்தில் இருக்கிறார்கள். இப்போது ஹரித்துவார் போய்க்கொண்டிருந்தார்கள். லக்னோவுக்கு வடக்கே இருக்கும் கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் நிறைய துணி மூட்டைகள் இருந்தன. சில மண் பானைகளும் கைவசம் வைத்திருந்தார்கள். அந்த பானையில் என்ன இருக்கின்றன என்று கேட்டேன்.
நெய், கோதுமை மாவு, சர்க்கரை என தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்தே எடுத்து வந்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பற்றி அந்தப் பெண்களுக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால், யாராவது உணவுப் பொதிகளைக் காலால் மிதித்துவிட்டால் மிகவும் வருந்தினார்கள்.
நீங்கள் எல்லாரும் ஒரே ஜாதியினர்தானே என்று கேட்டேன்.
இல்லை.
இல்லையா… நம்பவே முடியவில்லையே.
யாத்திரையில் ஜாதி கிடையாது. அதிலும் புனித யாத்திரையில் ஜாதி கிடையவே கிடையாது என்றனர்.
எனக்கு அது தெரியாது. அப்போது எனக்கு 38 வயதாகியிருந்தது. இந்தியாவில் இருக்கும் பிறரைப் போலவே எனக்கும் விவசாயிகள், கைவினை கலைஞர்கள், பிற கிராமத்துவாசிகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.
நீங்கள் சென்னைக்குச் சென்றீர்களா?
ஆமாம்.
பம்பாய் சென்றீர்களா?
ஆமாம். அந்த இடங்களைக் கடந்துதான் வந்தோம்.
அங்கு என்னென்ன பார்த்தீர்கள்?
எதுவுமில்லை. எங்களுக்கு நேரமில்லை.
நவீன இந்தியாவின் பல இடங்களின் பெயரைச் சொல்லிக் கேட்டேன். எல்லா இடங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள். எதையும் இறங்கிப் பார்த்திருக்கவில்லை. அவர்களுடைய பயணத்தில் புனித ஷேத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
இப்போது டெல்லி போகிறீர்கள் அல்லவா?
ஆமாம்.
அங்கு இறங்கி சுற்றிப் பார்ப்பீர்களா?
மாட்டோம். டில்லியில் இறங்கி ரயில் மாற வேண்டியிருக்கிறது. நாங்கள் ஹரிதுவார் போகிறோம்.
சுதந்தர இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அதை இறங்கி பார்க்கமாட்டீர்களா?
மாட்டோம். எங்களுக்கு அதற்கு நேரமில்லை. ஹரித்துவார் போகவேண்டும். அதன் பிறகு வீடு திரும்ப வேண்டும்.
சுமார் ஐந்தாறு மணி நேரம் நாங்கள் பேசினோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. நாம் எந்த இந்தியாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நேருவும் இன்ன பிற தலைவர்களும் நவீன கோயில்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள் என இந்த நவீன இந்தியாவை யாருக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறோம்? புனித யாத்திரைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பாரம்பரிய மனிதர்களுக்கு இந்த நவீன இந்தியாவில் எந்த அக்கறையும் இல்லை. ஆனால், அவர்கள்தான் இந்த இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள். நேருவை விட என்னையும் உங்களையும் விட அதிக பிரதிநிதித்துவம் கொண்டவர்கள்.
இந்தப் பயணம் தரம்பாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் புதிய தலைவர்களுக்கும் அதன் எளிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி அவரை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. இந்தியா என்றைக்குமே இப்படித்தான் இருந்ததா என்ற கேள்வி அவர் மனத்தில் எழுந்தது.
பீஸ் பிஸ்வ மற்றும் சாசனா என்ற கிராம சபைகள் நிர்வாகத்திலும் செயல் திறனிலும் துடிப்புடன் இருந்ததை அவர் பார்த்திருந்தார். இந்திய கலாசாரத்தை எது இப்படி ஜீவனுடன் இயங்க வைத்துவருகிறது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. இந்த கிராமப்புற சமுதாயங்கள் செயல்படும் விதத்தை நாம் புரிந்துகொண்டுவிட்டால் நவீன உலகில் நாம் எதிர்கொண்டுவரும் பல பிரச்னைகளை எளிதில் தீர்த்து நாம் மறுமலர்ச்சி அடைந்துவிட முடியும் என்று நம்பினார்.
அந்தத் தேடல்தான் பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னால் இந்தியா எப்படி இருந்தது என்ற கேள்வியில் அவரை நிறுத்தியது. அந்தப் பணியை எப்படி ஆரம்பிப்பது என்று அவருக்கு முதலில் எதுவும் புரிந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆவணங்களினூடான தன் மாபெரும் பயணத்தின் சிறு காலடியை எடுத்து வைத்தபோது அதன் முக்கியத்துவம் அவருக்குப் புரிந்திருக்கவே இல்லைதான். இந்தியா பற்றி அதுவரை அவர் படித்தும் கேட்டும் வந்தவையெல்லாம் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படியாக இருந்திருக்கவில்லை.
ஆனால், பொய்யின் சருகுகள் மலை போல் குவிந்திருந்தாலும் உண்மையின் சிறு தீப்பொறி போதுமே அதை எரித்துச் சாம்பலாக்கிவிட. தரம்பால் வசமோ சூரியனைப் போல் பிரகாசமான ஜோதி கிடைத்தது. அது இந்தியாவின் கடந்த காலத்தைப் பொன்னிற ஒளியில் காட்டியது.
1964 வாக்கில் தரம்பாலுக்கு பழங்கால ஆவணங்கள் பற்றியும் அறிக்கைகள் பற்றியும் சாதாரண மனிதருக்குத் தெரிந்த அளவுக்குத்தான் தெரிந்திருந்தது. முதன் முதலாக பிரிட்டிஷ் ஆவணங்களை அவர் பார்த்தது சென்னையில்தான். டச்சு, போர்ச்சுகீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், பிற ஐரோப்பிய கிறிஸ்தவ அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் என 16-ம் நூற்றாண்டில் இருந்து இந்தியா வந்த பலரும் தங்கள் ஆவணங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். ஆனால், அவை அளவில் குறைவுதான். பிரிட்டிஷாரின் ஆவணங்கள்தான் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம்.
அவை மூன்று வகைப்பட்டவையாக இருந்தன. முதலாவதாக, இந்திய நிலப்பகுதி, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், சமூக வாழ்க்கை, திருவிழாக்கள், கலாசார வாழ்க்கை, கல்வி முதலான இங்கு இருக்கும் அமைப்புகள், விவசாய வழிமுறைகள், தொழில்கள், இந்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவை பற்றிய குறிப்புகள்.
இரண்டாவதாக, 1748-ல் ஆற்காட்டைக் கைப்பற்றியதில் ஆரம்பித்து 1947 வரையான பிரிட்டிஷ் இந்திய போராட்டங்கள், பிரிட்டிஷார் உருவாக்கிய அமைப்புகள், செயல்பாடுகள் பற்றிய ஆவணங்கள்.
மூன்றாவதாக, இந்தியாவை ஆள்வது தொடர்பாக பிரிட்டனில் நடைபெற்று வந்த கூட்டங்கள், தீர்மானங்கள், திட்டங்கள் இவற்றின் ஆவணங்கள்.
இதில் இந்தியாவின் கல்வி பற்றிய ஆவணங்களைப் படித்த தரம்பால் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்துபோனார். ஏனென்றால், கடந்த நூறாண்டுகளாக சொல்லப்பட்டு வந்த விஷயங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு சித்திரத்தை அவர் அங்கு கண்டார். இந்துக்களில் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி தரப்பட்டது. இஸ்லாமியர்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது என்பதுதான் பொதுவாகப் பரப்பட்டுள்ள பொய். உண்மையில் மதராஸ் பிரஸிடென்ஸியில் அதாவது தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் சூத்திரர்கள் என்றும் அவர்களுக்குக் கீழானவர்கள் என்றும் சொல்லப்படும் பிரிவினர்தான் அன்றைய பள்ளிகளில் பெரும்பான்மையாகக் கல்வி கற்றிருக்கிறார்கள். 1822-25-ல் பிரிட்டிஷாரால் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்த உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
1820-களில் பிரிட்டிஷ் வருவாய் ஆணையமானது கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ஆய்வில் என்னென்ன தகவல்கள் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், அங்கு பயிலும் ஆண்-பெண் மாணவர்கள் எண்ணிக்கை இவற்றை தொகுத்துத் தரும்படி கேட்டிருந்தது. மாணவர்கள் பிரிவில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பிற சாதியினர் என தனித்தனியாகக் குறிப்பிடும்படிக் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்படி 21 மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் சேகரித்த புள்ளிவிவரங்களை அனுப்பிவைத்தனர்.
கல்வி கற்ற மாணவர்களில் பிராமணர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் 13%, சென்னையில் 23% இருந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 3%க்கும் குறைவுதான். சேலத்தில் 10% தான். ஆனால், பள்ளியில் பயின்ற சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் சதவிகிதம் சேலத்தில் 70% ஆகவும் தென் ஆற்காடு, திருநெல்வேலியில் 84% அதிகமாகவும் இருந்திருக்கிறது.
கேரளாவில் பள்ளியில் பயின்ற பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 20%க்கும் குறைவுதான். இஸ்லாமிய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 27%. சூத்திரர்களும் பிற சாதியினரும் சுமார் 53% இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகத்தின் பெல்லாரியில் பிராமண-வைசிய மாணவர்களின் எண்ணிக்கை 33%. சூத்திரர்கள் மற்றும் பிற சாதியினரின் எண்ணிக்கை 63% . ஒரிய மொழி பேசப்படும் பகுதியிலும் நிலைமைஇதுதான். பிராமண மாணவர்களின் எண்ணிக்கை 35.6%. பிற சாதியினரின் எண்ணிக்கை 63.5%.
தெலுங்கு பேசும் பகுதியில்தான் பிராமணர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்திருக்கிறது. கடப்பாவில் 24%. விசாகப்பட்டிணத்தில் 46%. வைசியர்களின் எண்ணிக்கை கடப்பாவில் 29%. விசாகப்பட்டிணத்தில் 10.5%. சூத்திரர்களும் பிற சாதியினரும் கடப்பா, விசாகப்பட்டிணத்தில் சுமார் 41 % இருந்திருக்கிறார்கள்.
2000 வருடங்களாக எங்களைக் கல்வி கற்க விடவில்லை என்ற அசட்டு வாதத்தில் ஆரம்பித்து இணையதளங்களில் எங்களை வசைபாடுபவர்கள் இப்போது கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்திருப்பதுகூட எங்களால்தான் சாத்தியமானது என அரைவேக்காட்டு முழக்கங்கள் வரை ஓங்கி ஒலிக்கும் நம் சூழலில் தரம்பாலை இந்துத்துவ முத்திரை குத்தி ஒதுக்குவது எளிதாகவே இருக்கும். ஆனால், அவர் சொல்லும் உண்மைகள் அப்படி எளிதில் புறந்தள்ள முடிந்தவை அல்ல. இயேசுவைத்தான் சிலுவையில் அறைந்து கொல்ல முடியும். அவருடைய வார்த்தைகளை அல்ல.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: