ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

பொறியியல் கலந்தாய்வு முடிந்தது: 55 ஆயிரம் இடங்கள் காலி

சென்னை: ஜூலை 7ம் தேதி துவங்கி, ஒன்றரை மாதமாக நடந்து வந்த பொறியியல் கலந்தாய்வு, நேற்றுடன் முடிந்தது. ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து 712 இடங்கள் நிரம்பிய நிலையில், 55 ஆயிரத்து 40 இடங்கள் நிரம்பவில்லை.
நடப்பாண்டில், பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டை விட, புதிய கல்லூரிகள் அதிகம் வந்ததால், கலந்தாய்வு ஒதுக்கீட்டு இடங்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 752 ஆக உயர்ந்தன.ஜூலை 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை, தொழிற்கல்வி பிரிவு மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடந்தது. 12ம் தேதி ஒரு நாள், மாற்றுத்திறனாளி மாணவருக்கான கலந்தாய்வு நடந்தது. ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில், விளையாட்டுப் பிரிவு மாணவருக்கான கலந்தாய்வு நடந்தது. அதிக மாணவ, மாணவியர் பங்கேற்ற பொது கலந்தாய்வு, ஜூலை 13ம் தேதி துவங்கி, கடைசி நாளான நேற்றுடன் 35 நாட்கள் நடந்தன. மொத்தம், 43 நாட்கள் நடந்த கலந்தாய்வில், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 712 இடங்கள் நிரம்பின. நேற்று மட்டும், 3,205 இடங்கள் நிரம்பிய நிலையில், கடைசியில், 55 ஆயிரத்து, 40 இடங்கள் காலியாக உள்ளன.


மெக்கானிக்கல் பிரிவு முதலிடம்:
பொறியியலில் பல்வேறு பாடப் பிரிவுகள் இருந்தாலும், மெக்கானிக்கல், இ.சி.இ., - ஏரோநாட்டிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், சிவில் போன்ற பிரிவுகள் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. இவற்றில், 28 ஆயிரத்து, 173 பேர், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்தனர். 26 ஆயிரத்து, 572 பேர், இ.சி.இ., பிரிவில் சேர்ந்தனர். மூன்றாவது இடத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு உள்ளது. இதில், 18 ஆயிரத்து, 536 பேர் சேர்ந்தனர்.
தொழிற்கல்வி பிரிவு மாணவ, மாணவியருக்கான, இரண்டாவது கட்ட கலந்தாய்வு, இன்றும், நாளையும், அண்ணா பல்கலையில் நடக்கிறது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2 உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், மறுகூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண்கள் உயர்ந்த மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு, 21ம் தேதி நடக்கிறது. 22ம் தேதி, எஸ்.சி., பிரிவு மாணவருக்கான சிறப்பு கலந்தாய்வுடன், ஒட்டுமொத்த கலந்தாய்வு நிறைவு பெறும். இந்த நான்கு நாள் கலந்தாய்வில், 2,000 முதல், 3,000 இடங்கள் வரை நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) கூறியதாவது: கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள், கூடுதலாக சேர்ந்தனர். புதிய கல்லூரிகள் வருகை அதிகரித்ததால், கலந்தாய்வு இடங்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்தன. 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.
தொழிற்கல்வி மாணவருக்கான, இரண்டாவது கட்ட கலந்தாய்வு, 19, 20ம் தேதிகளில் நடக்கிறது. இதில், 3,000 இடங்கள் உள்ளன. ஆனால், 1,500 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். பொது துணை கலந்தாய்வு, 21ம் தேதி நடக்கிறது. அதில், 55 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 1,500 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இதிலும், 1,000 இடங்கள் வரை நிரம்பலாம். கடைசி நாளான இன்று (நேற்று), கடைசி மாணவர், "கட்-ஆப்' மதிப்பெண் 77.5 ஆக இருந்தது. ஒட்டுமொத்த கலந்தாய்வு முடிந்தால், காலியிடங்கள் எண்ணிக்கை 52 ஆயிரமாகக் குறையலாம். மாணவ, மாணவியருக்கான வகுப்புகள், செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும், என்றார்.

கருத்துகள் இல்லை: