வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கோவையில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் Mafia

"கார்ப்பரேட் நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி, சட்டத்துக்குப் புறம்பான வழியில், பணம் பிடுங்கும் புதிய கலாசாரம் கோவையிலும் உருவாகி வருகிறது. 
கோவையில், 1000ம் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இவை, பொது பங்குகளை வெளியிட்டு, பணம் திரட்டி, நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், பொது பங்குகளை வெளியிட்டுள்ளதால், இவை ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, நிதி நிலை அறிக்கை, நிறுவனத்தின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை, முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பங்கேற்க, கார்ப்பரேட் நிறுவனங்கள், பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஒருவர், ஒரு ஷேர் வைத்திருந்தாலும், அவருக்கும் அழைப்பு இருக்கும். எனவே, இதை தவறாக பயன்படுத்தி பலர், நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற கலாசாரத்துக்கு பயந்த மும்பையில் உள்ள பல நிறுவனங்கள், தொல்லையை தள்ளி விட, அன்பளிப்புகளை கொடுத்து அனுப்பி விடுவதுண்டு. இந்த கலாசாரம் தற்போது, கோவையில் வேரூன்றியுள்ளது. இவர்கள் மீது நிறுவனங்களே,போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. கோவையில் சுந்தரம் என்பவர், ஒரு பேப்பர் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளை
தொடர்ந்து வாங்கியுள்ளார். மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். பங்கின் விலை தொடர்ந்து சரியவே, கம்பெனிக்கு "இமெயிலில்' மிரட்டல் விடுத்துள்ளார். அதுவும், வேறு ஒரு நபரின் "இ-மெயிலை' பயன்படுத்தியுள்ளார். பங்கின் விலை ஏறுவதும், இறங்குவதும் சந்தையில் முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பனை செய்வதை பொறுத்ததே என, பதில் அளித்தாலும் விடுவதாக இல்லை. இது குறித்து, கோவை போலீஸ் கமிஷனரிடமும், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரவிச்சந்திரன் என்பவரும் கம்பெனிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இத்தகைய கம்பெனிகளை மிரட்டும் குண்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, கோவை மண்டல கம்பெனிகளின் பதிவாளர் மனுநீதிச்சோழன், மத்திய கம்பெனி விவாகரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில்,""மும்பையில் நடக்கும் இத்தகைய கலாசாரம், கோவையில் பரவி வருகிறது. பங்குதாரர் என்ற பெயரில், கம்பெனிகளை மிரட்டி, சட்டத்துக்கு புறம்பான வழியில் பணம் பிடுங்கும், "கார்ப்பரேட் குண்டர்கள்' மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு, இங்குள்ள தொழில் அமைதிக்கு ஊறு ஏற்படும்,'' என்றார். - நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: