இந்நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் கடந்த 12ம் தேதி நடந்த தேர்வை ஆணையம் ரத்து செய்தது. வினாத்தாள் இ,மெயில் மூலமாக வெளியானதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்கிருந்து இ,மெயில் வந்தது என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பிரவுசிங் சென்டருக்கு வந்த இ மெயில் மற்றும் திருவண்ணாமலை கார்த்திக் என்பவருக்கு வந்த இ,மெயில் இரண்டும் வெவ்வேறாக தெரிவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், கார்த்திக்கின் இ மெயிலை திறக்க போலீசார் திட்டமிட்டனர். குற்ற வழக்கு தொடர்பாக மற்றவர்கள் பாஸ்வேர்டை உடைத்து செல்ல வேண்டுமானால், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் முறையாக அனுமதி பெறவேண்டும்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில் பாஸ்வேர்டை உடைத்து இ மெயிலை திறந்து பார்க்க அரூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. இதனால் பாஸ்வேர்டை சைபர் கிரைம் போலீசார் திறந்து பார்த்து, அந்த இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்’’ என்றனர். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ரத்தினசபாபதி நேற்று தர்மபுரியில் விசாரணை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ குரூப் 2 வினாத்தாள் வெளியானது தொடர்பாக மாவட்ட அளவிலான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. வினாத்தாள் தயாரித்த இடம், வடிவமைப்பு, சிடியில் தயாரிப்பு, வெளிமாநிலத்தில் அச்சிடப்பட்ட இடம், போக்குவரத்து, கருவூலத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு கொண்டு சென்ற இடம் ஆகிய இடங்களைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக