சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் எம்.டெக் மாணவி
தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பெற்றோருக்குத் தெரியாமல்
ரகசிய திருமணம் செய்தவர் ஆவார்.
சென்னை ஐ.ஐ.டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காதல் தோல்வி காரணம் என்று தெரியவந்தது.இந் நிலையில் இப்போது மாணவி ஒருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த மானஷா மெருகு (22) ஐ.ஐ.டியில் எம்.டெக் கெமிக்கல் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி தான் இவர் ஐ.ஐ.டியில் சேர்ந்தார். அங்குள்ள சரயூ விடுதியில் தங்கியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் இவரது அறையில் தங்கி இருந்த சக மாணவி ஜோபி வெளியில் போய் விட்டு, அறைக்கு திரும்பினார். ஆனால், நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் செக்யூரிட்டியிடம் தெரிவித்தார்.
அவர் ஐஐடி அதிகாரிகளிடம் தெரிவிக்க, கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது மானஷா மின் விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துணை கமிஷனர் புகழேந்தி, உதவி கமிஷனர் சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படை விரைந்தது. மானஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மானஷா திருமணமானவர் ஆவார். இவரது கணவர் சீனிவாசா மினிசலா ஹைதராராபாத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆந்திராவில் ஜவஹர்லால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன் இறுதியாண்டு பி.டெக் படித்தபோது இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், அது வீட்டுத் தெரியாது.
மானஷா இறந்த தகவல் அவரது கணவருக்கும், தந்தை ராஜேஷ் ஷியானுக்கும் தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் மானஷா திருமணம் செய்து கொண்டது தந்தைக்கே தெரியவந்தது.
விடுமுறையில் ஆந்திரா சென்ற மானஷா கணவர் சீனிவாசாவை சந்தித்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்குள் சண்டை ஏதாவது வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மானஷா சென்னை வந்து உயிரை விடும் முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தற்கொலைக்கான காரணம் குறித்து மானஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவரோடு அறையில் தங்கி இருந்த சக மாணவி ஜோபி, மானஷாவின் தூக்கில் தொங்கிய உடலைப் பார்த்து மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மானஷாவின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். தற்கொலைக்கு முன்பாக அவர் யாருடன் பேசினார் என்பது தொடர்பான தகவலையும் சேகரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் சென்னை ஐ.ஐ.டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக