வியாழன், 23 ஆகஸ்ட், 2012

Anna baloon வீங்கி வெடித்து வீணாய் போன அன்னா போராட்டம்


தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஜன்லோக்பால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று படிப்படியாக முன்னேறி இறுதியாக அரசியல் களத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் அன்னா ஹஸாரே குழுவினர்.
ஜன்லோக்பாலை வலியுறுத்தி சென்ற வாரம் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அன்னா ஹஸாரே. தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர். கடந்தமுறை ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களின்போது கூடிய கூட்டம், திரண்ட ஆதரவு இம்முறை இல்லை என்றபோதும் ஹஸாரே கூடுதல் உற்சாகத்துடன் இருந்தார். இந்நிலையில் திடீரென உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே அறிவித்தார். தொடர்ந்து அன்னா குழுவினர் வெளியிட்ட அறிவிப்புதான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை அறவழிப்போராட்டம் மூலம் தீர்த்துவிடலாம் என்று நினைத்து போராடினோம். அரசு அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, வலுவான லோக்பால் விஷயத்தில் அரசு காட்டிவரும் அலட்சியம் எங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. இனி பிரச்னைகளை அரசியல்ரீதியாகத் தீர்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம். விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போகிறோம்.’

உண்ணாவிரதம் முடித்தபிறகு அன்னா ஹஸாரே பேசினார். ‘நம் நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிரம்பியவை; தார்மிக நெறிமுறைகள் அனைத்தையும் உதறித்தள்ளியவை. ஏழைகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாதவை. ஆகவே, மக்களுக்கு ஒரு மாற்று சக்தியை, மாற்று அரசியல் கட்சியை அடையாளம் காட்டப்போகிறேன். மக்கள் கொதித்து எழுந்தால் ஊழல் நாட்டைவிட்டு ஓடிவிடும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நாடு தழுவிய பிரசாரப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டும் எங்களுடைய முயற்சிகள் இறுதிவரை தொடரும். ஆனால், நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.’
அன்னா ஹஸாரேவின் தலைமைத் தளபதி அர்விந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் தொடங்கிய சில தினங்களிலேயே மிகவும் பலவீனமடைந்துவிட்டபோதும் கட்சி தொடங்கும் அறிவிப்பை உற்சாகமாக வெளியிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்கான இதுதான் சரியான தருணம் என்று ஆரம்பித்த கெஜ்ரிவால், ‘எங்கள் கட்சியின் பெயரை மக்களே தேர்வுசெய்வார்கள். கட்சியின் கட்டமைப்பையும் மக்களே தீர்மானிப்பார்கள். வேட்பாளர்களையும் மக்களே தேர்வுசெய்வார்கள். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார்செய்ய மாட்டோம். அதை மக்களே தயாரிப்பார்கள். ஏனென்றால், எங்கள் கட்சி மக்கள் கட்சி’ என்றார்.
இன்று தெருக்களில் போராடிக்கொண்டிருக்கும் நாங்கள் நாளை நாடாளுமன்றத்துக்குள்ளும் போராடப்போகிறோம் என்று ஆவேசப்பட்ட கெஜ்ரிவால், காங்கிரஸ், பாஜக கட்சிகளில் அதிருப்தி எண்ணத்துடன் இருப்பவர்களையும் இளைஞர்களையும் தங்களுடைய புதிய கட்சிக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். ஊழல் நிரம்பிய அரசுக்கு எதிரான மக்கள் யுத்தம் தொடங்கிவிட்டது. நாட்டில் முழுப்புரட்சிக்கான அவசியம் உருவாகிவிட்டது என்றார் கெஜ்ரிவால்.
அன்னா ஹஸாரே குழுவினரின் பத்துநாள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்தவர் சமீபத்தில் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே. சிங். மத்திய அரசுடன் ஏற்கெனவே மோதியவர் என்பதால் அவருக்கு மேடையில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ‘நாட்டில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஊழலுக்கு எதிரான புரட்சி. அன்னா ஹஸாரே ஒரு புரட்சியை நோக்கி மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தற்போதைய அரசின் கொள்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. ஜனநாயகத்தைப் புனரமைக்கும் புனிதப்பணியை அன்னா ஹஸாரேவின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்படவிருக்கும் புதிய கட்சி செய்யும்’ என்று சொன்ன வி.கே. சிங், ‘நாடு திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தால், கேள்வி எழுப்பினால் அவர்கள் நம்மைப் பழிவாங்குவார்கள். ஆகவே, எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்’ என்று எச்சரித்தார். இப்படி முடித்துக்கொண்டார். ‘மக்கள் வருகிறார்கள். ஆட்சியாளர்களே, நாற்காலிகளைக் காலிசெய்யுங்கள்!’
உண்மையில் அன்னா ஹஸாரேவை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலோ கிரன்பேடியோ அல்ல; காங்கிரஸ் தலைவர்கள்தாம். மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடாதீர்கள்; துணிச்சல் இருந்தால் அரசியல் கட்சி தொடங்குங்கள்; மக்களைச் சந்தியுங்கள்; தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு வாருங்கள். அதன்பிறகு கேள்வி கேளுங்கள் என்று அன்னா குழுவினரை உசுப்பேற்றி
விட்டவர்களும் அவர்கள்தாம்.
இப்போது அன்னா ஹஸாரே குழுவினருக்கு இரண்டே வாய்ப்புகள்தாம் இருக்கின்றன. ஒன்று, ‘ஊழலுக்கு எதிராக’ என்ற கோஷத்தை முன்வைத்து தனித்துப் போட்டியிடுவது. மற்றொன்று, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. இரண்டில் எதைத் தேர்வுசெய்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போகும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதையே அன்னா குழுவினருக்கு எதிரான ஆயுதமாகப் பிரயோகம் செய்துவிடலாம்.
இப்போது அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் புதிய கட்சியைத் தொடங்கும் நிலையில் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. சமூக செயல்பாட்டாளராக அன்னா ஹஸாரேவைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு அரசியல் கட்சியின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வார்களா? ஏனென்றால், அன்னா ஹஸாரேவின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த, இருக்கின்ற பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மேதா பட்கர், சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை.
அன்னா ஹஸாரேவின் அரசியல் பிரவேசம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்கிறார் பாபா ராம்தேவ். ஹஸாரேவின் முடிவு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறியுள்ளஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ‘நான் அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார். அன்னா ஹஸாரேவுக்கு அரசியல் வேண்டாம் என்ற கருத்தையே பிரபல சமூக சேவகர் மேதா பட்கரும் முன்வைத்திருக்கிறார். எல்லோரையும்விட ஒருபடி மேலே சென்றுவிட்டார் சுவாமி அக்னிவேஷ். உண்ணாவிரதம் என்ற புனிதமான அகிம்சைப் போராட்டமுறையின் கற்பை சூறையாடிவிட்டார் அன்னா ஹசாரே என்பதுதான் அக்னிவேஷின் எதிர்வினை.
இவர்கள் மட்டுமல்ல; இன்றைய அரசியலை விரும்பாத, ஆனால் அன்னா ஹஸாரேவை ஆதரிக்கும் பலர் அவருடைய அரசியல் பிரவேசத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பது முக்கியமான கேள்வி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்னா ஹஸாரே தீவிரமாக செயல்படத் தொடங்கியபோது காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று மூன்று முக்கிய முறைகேடுகள் நாட்டை உலுக்கிக்கொண்டிருந்தன. அரசியல்வாதிகள் மீது, குறிப்பாக, ஆட்சியாளர்கள் மீது இளைஞர்களும் பொதுமக்களும் ஆவேசத்துடன் இருந்த சமயம் அது. அவர்களுடைய கோபத்துக்கு வடிகாலாக அன்னா ஹஸாரே இருந்தார். நாடு தழுவிய அளவில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு குவிந்தது.
ஆக, ஹஸாரேவை ஒரு சமூகப் போராளியாக, சமூக ஆர்வலராக ஏற்றவர்களே அதிகம். அப்போது ஹஸாரேவின் பேச்சுகளுக்குக் கைத்தட்டி ஆதரவளித்தவர்களும், அவரைப்போல குல்லாய் அணிந்து கொண்டவர்களும் ஹஸாரே படம் பொறித்த டீஷர்ட் போட்டுக்கொண்டவர்களும் அரசியல்வாதி ஹஸாரேவுக்கும் ஆதரவளிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆக, இதுவரை தன்னை ஆதரித்தவர்களையும் தனக்குப் பின்னால் நின்றவர்களையும் தனக்கு ஆதரவாக இருக்கவைப்பது ஹஸாரேவின் முன்னால் இருக்கும் முதல் சவால். புதிய ஆதரவாளர்களைத் தேடுவது அடுத்த சவால்.
ஊழலுக்கு எதிராக யுத்தம் நடத்தவேண்டும், மாற்று அரசியல் கட்சியை உருவாக்கவேண்டும் என்றெல்லாம் குரல் எழுப்பும் ஹஸாரே, தான் தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்கிறார். எனில், அவருடைய புதிய கட்சியின் தலைமைப்பொறுப்பை நிர்வகிக்கப்போவது யார்? புதிய கட்சியின் ஆதாரப்புள்ளியே ஹஸாரே என்ற நிலையில் புதிய கட்சிக்கு யாரை நம்பி வாக்களிக்கச் சொல்கிறார்? ஒருவேளை அன்னா ஹஸாரேவின் கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டால், பிரதமர் யார்?
நிதியின்றி அரசியல் கட்சி இயங்காது என்பதுதான் இன்றைய நியதி. ஊழலை எதிர்க்கும் அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் தங்கள் கட்சிக்கான நிதியாதாரத்தை எங்கிருந்து பெறப்போகிறார்கள்? காங்கிரஸும் பாஜகவும் இன்னபிற கட்சிகளும் நாடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளைத்தான் என்றால் அவர்களுக்கும் புதிய கட்சிக்கும் என்ன வித்தியாசம்?
ஊழலுக்கு எதிரான இயக்கம் என்னும் பெயருமேகூட அவர்களுக்குப் போதுமானதா என்பது தெரியவில்லை. ஊழல்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை; அதை ஒழித்து விட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதை அன்னா ஹஸாரா ஆதரவாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில், ஊழலைத்தாண்டிய பல பிரச்னைகள் இருக்கின்றன. சாதி, மதச் சிக்கல்கள், பொருளாதாரப் பின்னடைவு, தீவிரவாதம், எல்லைத்தகராறுகள், நீர்ப்பங்கீட்டுச் சிக்கல் உள்ளிட்டவற்றுக்கு அன்னாவின் தீர்வு என்ன? இதுபோன்ற பிராந்திய, தேசிய பிரச்னைகளையும் கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்னா ஹசாரேவால் தனது கட்சிக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கிக்கொள்ளமுடியும்.
முழுப்புரட்சி என்ற பதத்தை அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பலரும் மேடைகளில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அதாவது, ஊழல் மலிந்த காங்கிரஸ் கூட்டணி அரசை அப்புறப்படுத்த முழுமையான புரட்சி அவசியம் என்கிறார்கள். இந்திய அரசியல் இப்படியொரு பதம் எழுபதுகளின் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது பிகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, மாணவர்கள் களமிறங்கி நடத்திய போராட்டங்கள். அவர்களை வழிநடத்தியவர் ஜெயப்ரகாஷ் நாராயணன்.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, அரசியல் அத்துமீறல்களில் ஈடுபட்டபோது, ‘நாட்டின் இன்றைய தேவை முழுப்புரட்சி மட்டுமே’ என்றார் ஜெயப்ரகாஷ் நாராயணன். அன்று அவர் விடுத்த அழைப்புக்கு தேசம் தழுவிய அளவில் ஆதரவு கிடைத்தது. அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. தற்போது அதேபோன்றதொரு ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே அன்னா குழுவினர் முழுப்புரட்சி தேவை என்கிறார்கள்.
இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் ஜெயப்ரகாஷ் நாராயணனின் அணுகுமுறை. அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். மாணவர்களைத் திரட்டினார். பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தல் என்று வந்தபோது ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த மக்களையும் மாணவர்களையும் மட்டும் நம்பவில்லை. தனது தலைமையில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை. இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளை, கட்சிகளை ஓரணியில் திரட்டினார். ஓரளவுக்கு ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளை ஒரே கட்சியாக இணைத்தார்; இந்திரா காங்கிரஸுக்கு எதிரான வேறு சில கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார்; அதன்பிறகே ஆட்சிமாற்றம் நடந்தது.
இந்த இடத்தில்தான் அன்னா ஹஸாரே குழுவினரின் நடவடிக்கைகள் வேறுபடுகின்றன. எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எதையும் அன்னா குழுவினர் செய்யவில்லை. நேரடியாகக் களம் காணத் தயாராகி விட்டனர். தேசிய அளவில் விரிந்துபரந்துகிடக்கும் ஒரு கட்சியை – மாநில அளவில் பலம்பொருந்திய கட்சிகளைக் கூட்டணிக்குள் வைத்திருக்கும் ஒரு கட்சியை – வீழ்த்துவதற்கு அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் எடுத்துள்ள இந்த தனிக்கட்சி முயற்சி எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கேள்விக்குறி. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுப்பது எலியூருக்குப் பயந்து புலியூருக்குப் போவது போன்றது.
என்ன செய்யப்போகிறார்கள் அன்னா குழுவினர்?
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: