Posted by: Mayura Akilan
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையத்தை சேர்ந்தவர் முனியன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் ஸ்ரீநித்யா பவுல்ட்டரி ஃபாம் என்ற நாட்டுக்கோழி பண்ணையை ஆரம்பித்தார்.
பின்னர் அவர் ஈமு கோழி பண்ணை பாணியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், கோழி பண்ணையும் அமைத்து தரப்படும் என கவர்ச்சிகரமான திட்டத்தினை அறிவித்தார்.
இதை நம்பிய பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் 3 மாதங்கள் ஊக்கத்தொகை வழங்கி வந்த அந்த நிறுவனம் 4-வது மாதம் முதல் ஊக்கத்தொகை வழங்க காலதாமதம் செய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பண்ணை அதிபர் முருகவேல் நிறுவனத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். முதலீட்டாளர்களின் பணம் ரூ.15 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் திங்கட்கிழமையன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பின்னர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் புகார் தெரிவித்தனர்.
இதில் தேனி, கம்பம், சேலம், ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 100 முதலீட்டாளர்கள் புகார் கொடுத்தனர். அவர்கள் தலைமறைவாகிவிட்ட பண்ணை அதிபரை தேடி கண்டுபிடித்து தங்களின் முதலீட்டு பணத்தை திரும்ப பெற்றுதர வேண்டும் என கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 7 ஈமு கோழி பண்ணைகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு சிலரை மட்டுமே கைது செய்துள்ளனர். திங்கட்கிழமையன்று சுசி ஈமு பண்ணையின் பொது மேலாளரை கைது செய்தனர். அதன் அதிபர் குரு இன்னமும் தலைமறைவாகவே உள்ளார். ஈமு கோழிப்பண்ணை அதிபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி பண்ணை மோசடி பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நாட்டுக்கோழி பண்ணை மோசடியும் சேர்ந்துள்ளதால் ஈரோடு மாவட்ட போலீசார் செய்வதறியாது திகைத்துபோயுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக