சுப்ரமணியம்
சுவாமி ஏவிய ஏவுகணையில் இருந்து தப்பித்துள்ளார், மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய
நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை,
இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை
ஒதுக்கீட்டு ஊழல், ஏற்கனவே இரு அமைச்சர்களின் பதவிகளை காவு வாங்கிவிட்டது.
மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா
செய்தனர். இதில் ராசா, திகாரில் சிறிது காலம் தங்கியிருக்கும் பாக்கியமும்
பெற்று, வெளியே வந்துள்ளார். தயாநிதி, உள்ளே போவாரா, மாட்டாரா என்ற
சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை. பதவியை காவு கொடுத்த இருவருமே தமிழர்கள்.இந்த விவகாரத்தில், மூன்றாவது தமிழரான சுப்ரமணியம் சுவாமி, நான்காவது தமிழரான ப.சிதம்பரத்தை கோர்ட்டுக்கு இழுக்கும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது, சுவாரசியமான கோ-இன்சிடென்ட்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி மட்டுமின்றி, தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பிரசாந்த் பூஷனும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமோ, இருவரது மனுக்களையும் டிஸ்மிஸ் செய்திருந்தது. அடுத்த கட்டமாக, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த இரண்டு மனுக்களும்தான் இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தனர்.
அவர்களது தீர்ப்பில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் சதியில் சிதம்பரத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறி, இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டனர்.
ப.சிதம்பரத்துக்கும், மத்திய அரசுக்கும், கெட்ட சேதி மேல் கெட்ட சேதியாக வந்து கொண்டிருக்கும் காலத்தில், ஒரு நல்ல சேதி கிடைத்திருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக