www.tamilpaper.net
எத்தனை
பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு
மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு
ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில்
நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை
உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை
இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப்
பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக்,
பராக்!சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.
கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது!
ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.
2
கடந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethenol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.
போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!
அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.
செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?
க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?
3
சரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.
இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.
கடந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.
அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.
தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை.
மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!
உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.
பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?
இந்தியாவில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.
தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.
பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.
தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!
_____________________________________
- http://blogs.un.org/blog/2012/06/19/zero-hunger-challenge/
- The FAO Food Price Index is a measure of the monthly change in international prices of a basket of food commodities. It consists of the average of five commodity group price indices
- http://www.aljazeera.com/indepth/opinion/2011/10/201110241502249406.html (சைனா-ஆப்பிரிக்கா)
- http://www.howwemadeitinafrica.com/how-africa-can-learn-from-chinese-agriculture/9333/ (சைனா-ஆப்பிரிக்கா)
- Issue in brief: http://go.worldbank.org/F28Z012480
- http://www.thehindu.com/news/national/article3759335.ece
- http://articles.timesofindia.indiatimes.com/2012-06-26/rest-of-world/32423812_1_capita-food-food-agriculture-organization-consumers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக