Viru News
மதுரை
காவல்துறைக்குள் லேசான ஒரு முறுகல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். காரணம்,
தலைமறைவாக இருந்த பி.ஆர்.பி.-யை அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து சரணடைய
வைப்பதற்காக போலீஸ் செய்த ஒரு தந்திரத்தில், விஷயம் தெரியாமல் தலையைக்
கொடுத்தார் ஒரு போலீஸ் அதிகாரி.
இப்போது, இந்த போலீஸ் அதிகாரி மீது
பி.ஆர்.பி. தரப்பும் கோபமாக உள்ளது. சக போலீஸ் அதிகாரிகளின் கேலி
பார்வைகளையும் தாங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவரது
பி.ஆர்.பி. தொடர்பும் அம்பலமாகி விட்டது. அதுதான், அவர் தலைமையுடன் முறுகல்
நிலையில் உள்ளார்.எமக்கு தகவல் கொடுத்தவர்களுக்கு சிக்கல் வரக்கூடாது என்பதால், எந்த அதிகாரியின் பெயரையும் இங்கு குறிப்பிடவில்லை. மதுரை மேட்டர்கள் தெரிந்தவர்களுக்கு, பெயர்கள் சொல்லாமலேயே புரியும்.
கிரானைட் விவகாரம் டாப் கியரில் ஓடத் துவங்கியபோது, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியை மதுரை ஏரியாவில் இருந்து விலகி இருக்கும்படி அட்வைஸ் கொடுத்தவரே, போலீஸ் அதிகாரி ஒருவர்தான். பி.ஆர்.பி. நிறுவனம் மீதான ரெயிடுகள் பற்றி முன்கூட்டியே தகவல் கொடுத்தவரும் அவரே.
ஆனால், முன்கூட்டியே தகவல் கிடைத்தாலும் மறைத்து வைக்க இவையென்ன வைரங்களா? அளவில் பெரிய கிரானைட் கற்களை எங்கேயும் அகற்ற முடியவில்லை. முடிந்தவரை ஆவணங்களை மறைத்துக் கொண்டார்கள். மீதி அனைத்தும் சிக்கிக் கொண்டன. நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது, பி.ஆர்.பி.-யை தலைமறைவாக போய்விடும்படி ஐடியா கொடுத்தவரும், நம்ம போலீஸ் அதிகாரிதான். பி.ஆர்.பி.-யும் தலைமறைவானார்.
அதன்பின், நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை கைது செய்தது காவல்துறை. உரிமையாளர்களை கைது செய்யவில்லை. அவர்களது வீடுகளுக்கு சென்று பார்த்தபோது, ஆட்களை காணவில்லை என அப்பாவியாக சொன்னார்கள். அதை கிண்டலடிக்காத ஆட்களே கிடையாது.
இந்தக் கட்டம் வரைதான் நம்ம அதிகாரி ஹான்டில் செய்தார். அதற்குமேல், அவரின் கைகளை மீறிச் சென்றது விவகாரம். அவரது மேலதிகாரி இதில் நேரடியாக குதித்தார். அதன் பின்னரே ஆக்ஷன் துவங்கியது. உயரதிகாரி தாமே நேரடியாக வியூகங்களை வகுத்தார்.
மதுரை போலீஸூக்கும் மரியாதை ஏற்பட்டது.
உயரதிகாரி களத்தில் குதித்த முதல் 24 மணி நேரத்துக்கு, பி.ஆர்.பி. தலைமறைவாக இருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின், தமது சர்க்கிளில் உள்ள ஒருவருடன் பி.ஆர்.பி. தொடர்பில் இருந்ததை தெரிந்து கொண்டார்கள். அதை எப்படி தெரிந்து கொண்டார்கள் என்ற விபரம் வேண்டாம். சம்மந்தப்பட்டவரின் சில பர்சனல் விஷயங்கள் அதில் உள்ளன.
இந்த தொடர்பு விஷயம் உறுதியானதும், போலீஸ் பி.ஆர்.பி.-யை தேடி செல்வதைவிட, பி.ஆர்.பி. போலீஸை தேடி ஓடிவர செய்ய ஒரு பிளான் போட்டார்கள். அதில்தான் சிக்கிக் கொண்டார் நம்ம அதிகாரி.
குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிக்கு, மதுரை ஆண்டாள்புரம் ஏரியாவில் ஒரு இன்ஃபர்மர் இருக்கிறார். அந்த நபர், மற்றொரு மதுரை ஏரியா இன்ஃபர்மரின் ஊர்க்காரர். இந்த இரண்டாவது நபரை யூஸ் பண்ணிக் கொண்டார் உயரதிகாரி.
“பி.ஆர்.பி. நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த கிரானைட் கல்லுக்குள் போதை மருந்து கடத்தப்படுவதாக ஒரு தகவல் கிடைத்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.ஆர்.பி. நிறுவன ஊழியர் ஒருவர், தம்மை வெளியே கொண்டுவர நிறுவனம் எந்த உதவியும் செய்யவில்லை என்ற கோபத்தில், வெளியிட்ட தகவல் இது” என்று ஆண்டாள்புரம் நபரிடம் பேச்சுவாக்கில் கூறிய மற்றையவர், “அதை உயரதிகாரியிடம் தெரிவித்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்த கதை அப்படியே, ஆண்டாள்புரம் இன்ஃபர்மர் மூலம், நம்ம போலீஸ் அதிகாரிக்கு போய் சேர்ந்தது.
இதற்கிடையே, மதுரை போலீஸ் மேலிட அலுவலகம் ஒன்று, போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் சில ‘செட்டப்’ டிஸ்கஷன்களில் ஈடுபட்டது. அந்த விபரமும் நம்ம அதிகாரிக்கு தெரியும்படி பார்த்துக் கொண்டார்கள்.
போலீஸ் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் கொண்டுபோக போகிறது என தலைகீழாக புரிந்து கொண்டார் நம்ம அதிகாரி.
உடனடியாக, தலைமறைவாக இருந்த பி.ஆர்.பி.-யை தொடர்பு கொண்ட இவர், “இதற்கு மேலும் நீங்கள் தலைமறைவாக இருந்தால், விவகாரம் வேறு திசையில் திரும்பிவிடும். போதைப்பொருள் கடத்தல் விவகாரம் எல்லாம் காட்சிக்குள் வந்தால், ஜாமீன்கூட கிடைக்காது போகலாம். டில்லி வேறு தலையிடும். நீங்கள் பேசாமல் சரண்டராகி விடுங்கள்” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.
இதைக் கேட்டு தலை கிறுகிறுத்து போன பி.ஆர்.பி,, அலறியடித்துக் கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி. மயில்வாகனனிடம் சரணடைந்தார். நன்கு தயார் படுத்தப்பட்ட நிலையில், வக்கீல்களுடன் வந்திருந்தார். தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த மனு ஒன்றை தமது வக்கீலிடம் இருந்து வாங்கி, எஸ்.பி.யிடம் கொடுத்தார்.
போதைப்பொருள் தொடர்பாக குற்றச்சாட்டு போலீஸ் பதிவுகளில் இல்லை என்பதால், மற்றைய குற்றச்சாட்டுகளை தனது மனு மூலம் மறுத்த வகையில், “இவ்வளவுதான் குற்றச்சாட்டுகள்” என்று சட்ட ரீதியாக உறுதி செய்துகொண்டார். யாரோ ஒரு சட்ட நிபுணர் கொடுத்த ஐடியாவாக இது இருக்க வேண்டும்.
அதாவது, ‘அது’ இல்லிங்க.. ‘இது’தான் என்று தமது மனு மூலம் சொல்லியிருக்கிறார். அத்துடன் சரணடைந்து விட்டதால், கேஸை வேறு திசையில் கிளறாமல் இருக்கட்டும் என்றுகூட யாராவது ஆலோசனை கொடுத்திருக்கலாம்.
எப்படியோ, போலீஸ் உயரதிகாரி போட்ட திட்டமே, பி.ஆர்.பி.-யை வெளியே கொண்டு வருவதுதான். உள் விஷயம் புரியாமல், நம்ம அதிகாரியும் அட்வைஸ் கொடுத்து, ஆளை மதுரைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.
சரணடைந்த பின், போதைப் பொருள் விவகாரம் தொடர்பான கதையையே காணவில்லை என்பதில் கொதித்துப் போய் இருக்கிறது பி.ஆர்.பி. தரப்பு. விஷயம் தெரிந்த சில அதிகாரிகள் நம்ம அதிகாரியைப் பார்த்து கேலியாக வேறு சிரிக்கிறார்கள்.
ஏன்யா ஒரு மனுஷனுக்கு மத்தளம் போல இரு பக்கமும் இடிக்கிறீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக