திங்கள், 20 ஆகஸ்ட், 2012

எனக்கு ஏற்ற தொழில் எது?


ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 5
உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மிகப் பெரிய, வளமான சந்தை. நாம்தான் இதனை ஒரு வாய்ப்பாக உணர மறுக்கிறோம். மேம்போக்கான காரணங்கள் கூறி சுயதொழிலை நிராகரிக்கிறோம்.
சரி, எனக்கு ஏற்ற தொழில் எது என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒரு சிறிய உதாரணம்.
கண்மணி அதிகம் படித்தவரல்லர். பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவேண்டுமானால் வேலைக்குப் போயே தீரவேண்டும். ஆனால் அதற்கும் பல தடைகள். இவருக்கு விதவிதமாக உணவுப் பண்டங்கள் சமைப்பதில் அலாதி பிரியம். எப்போதும் ஏதாவது ஒன்று செய்து கொண்டேயிருப்பார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, புது வகையான இனிப்பு பண்டத்தை செய்ய முயற்சி செய்தார். வீட்டிலுள்ளோர் அனைவரும் பாராட்டினர்.

சில தினங்களில் அவருடைய கல்யாண நாள் வந்தது. தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். என்ன செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் ஒருமித்த குரலில் இதைத்தான் சொன்னார்கள். அன்று ஒரு இனிப்பு செய்தாயே, அதையே செய்துவிடு.
கண்மணியும் மற்ற உணவு வகைகளோடு சேர்த்து இந்த இனிப்பையும் கொஞ்சம் அதிகமாகச் செய்து, விருந்தினர்களுக்குப் பரிமாறினார். விருந்தும் இனிதே முடிந்தது. அனைவரும் பாராட்டித் தீர்த்தபிறகே வெளியேறினார்கள்.
ஒரு நாள் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தை தற்செயலாகப் பார்த்தார். ஒரு போட்டிக்கான விளம்பரம் அது. நல்ல கைமணமுள்ள பெண்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர ஒரு போட்டியை அறிவித்திருந்தார்கள். கண்மணியும் வீட்டிலுள்ளோர் விருப்பத்துக்கும், வற்புறுத்தலுக்கும் கட்டுப்பட்டு அந்தப் போட்டிக்கு நுழைவுத்தாளை அனுப்பினார். பலத்த போட்டிக்கு நடுவில் அவர் முதல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தப் பரிசளிப்பு விழாவை ஒட்டி நடந்த கண்காட்சியில் ஒரு ஸ்டால் போடுவதற்கு அனுமதி அளித்தனர். தனக்குத் தெரிந்த அந்த இனிப்பு வகையைச் செய்து அடுக்கி வைத்தார். அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகு கிடைத்த லாபம் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.
சுயதொழிலா, நானா என்று காத தூரம் ஓடிப்போன கண்மணிக்குள் ஒரு சிறு பொறி. பணம் மட்டுமா கொடுக்கிறது இந்தப் புதிய முயற்சி? பாராட்டுகள். தொழில்திருப்தி. அளவிடமுடியாத மகிழ்ச்சி. வேறு என்ன வேண்டும்?
சீரியசாக யோசிக்கத் தொடங்கினார். தொழில் முயற்சி தொடங்கியது. சில பயிற்சி மையங்களில் இணைந்து வேறு பல புதிய பதார்த்தங்களைத் தொழில் ரீதியாகச் சமைக்கக் கற்றுக்கொண்டார். வங்கியில் சிறு தொகை கடன் வாங்கினார். சொந்த நிறுவனம் வளர்ந்தது. இன்று ஐந்து, ஆறு பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்து, மிகச் சிறந்த முறையில் தொழில் செய்து வருகிறார்.
எதற்கு ரிஸ்க் வேறு ஏதாவது செய்யலாமே என்று இன்று யாராவது அவரிடம் சென்று கூறினால் நிச்சயம் அவர் அதனைப் பொருட்படுத்த மாட்டார். சுயதொழில் அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்துள்ள சிலரையும் இன்று வாழ வைத்துக்கொண்டிருக்கிறத. இதில் கிடைக்கும் சுகம், சந்தோஷம், ஆத்ம திருப்தி ஆகியவற்றை அனுபவிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.
0
கண்மணியின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம். அவரைப் போல் நமக்குள்ளும் பல விருப்பங்களும் தனித் திறமைகளும் ஒளிந்துகொண்டிருக்கின்றன.
நம்மில் பெரும்பாலோர் நமது சுய மதிப்பீட்டில் பெரும் தவறு செய்து விடுகிறோம். இதன் காரணமாக ஒன்று நம்மைப் பற்றி மிக தாழ்வான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அல்லது மிதமிஞ்சிய அளவுக்கு நம் திறமையின்மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஈடு எவரும் இல்லை என்று கூறிக்கொள்கிறோம்.
இந்த இரண்டு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு நம்மை நாமே சுய விமர்சனம் செய்து, நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைத் தூசித்தட்டி வெளிக்கொணர்ந்து, உண்மையான உழைப்பை முதலீட்டாக்கினால் வெற்றி நிச்சயம்.
சுயதொழிலுக்கு வர விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.
  1. சுய தொழிலில் செய்த முதலீட்டுக்கு உடனடி அறுவடை கிடைக்காது. இதை மிகுந்த கவனத்தில் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். செய்யும் தொழிலின் தன்மையைப் பொறுத்து லாபம் ஈட்டுதல் என்பது அந்தந்தச் சூழலுக்கேற்ப மாறுபடும். அதனால் பொறுமை மிக மிக அவசியம்.
  2. எந்தத் தொழிலும் கடலில் கரைக்கும் உப்பாக மென்மேலும் முதலீட்டை இழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. தொழில் செய்பவர், அவரின் பணபலம் என்ன, தான் எதுவரை தாக்குப் பிடிக்க முடியும் என்பதில் சீரிய கவனத்தோடு செயல்படவேண்டும். முதலீட்டுக்காகத் திட்டமிடும்போது இதனை மனத்தில் வைத்திருக்கவேண்டும்.
  3. தொழிலின் சந்தையைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து திரட்டவேண்டும். மாறும் சூழலுக்கேற்ப முடிவுகளை மாற்றிச் செயல்படவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. உணர்வுப்பூர்வமாக அணுகுமுறை தொழிலுக்கு, அதுவும் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, தவிர்க்கப்பட வேண்டும். மாறாக புத்தி பூர்வமான அணுகுமுறை கையாளப்படவேண்டும். உறவு, நட்பு போன்ற வலைப் பின்னல்களில் மாட்டிக்கொண்டு தொழிலைச் சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது.
  5. கடன் கொடுக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தயாராக இருந்தாலும், கூடிய மட்டும் கடனைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
  6. ஒரு தொழில் ஆரம்பிக்கும் வரைதான் தொழிலதிபரின் முயற்சியும் அறிவு கூர்மையும் முதன்மை பெறுகின்றன. அது தொடர்ந்து வளரும் போது, அதன் சாதகங்கள் தொதிலதிபரைச் சேர்ந்தாலும், அதன் பாதகங்கள் அவரை மட்டுமல்லாது அதை சார்ந்துள்ள பலரையும் பாதிக்கும். எனவே, தொழிலைத் தீவிரமாக நேசிப்பவர்கள் மட்டுமே இதில் காலடி எடுத்து வைக்கவேண்டும். பகுதி நேரமாகச் செய்து பார்ப்போமே என்று அலட்சிய மனோபாவத்துடன் தொழிலில் இறங்குவது பயனளிக்காது.
  7. இன்றைய சூழலில் சிறுதொழில் செய்ய முன்வருபவர்கள் தொழிலின் பல்வேறு பகுதிகளைப் பற்றி ஓரளவுக்காவது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். உதாரணம், சேல்ஸ் & மார்க்கெட்டிங், ஆள்கள் நியமித்தல், நிதி, நிர்வாகம், மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவை.
  8. எல்லாவற்றுக்கும்  பிறரை முழுவதுமாக அண்டியிருக்கக்கூடாது. தொழிலை தடையில்லாமல் நடத்திச் செல்லவேண்டுமானால், தொடர்ந்து நம் திறமைகளைக் கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை மனத்தில் வைத்துக்கொண்டு பொறுப்புணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களால் நிச்சயம் தங்களுடைய இலக்கை அடையமுடியும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: