Viru News
லண்டன்
ஹீத்ரோ ஏர்போர்ட்டில் நேற்று (வியாழக்கிழமை) காலை, உயிரற்ற உடல் ஒன்று
எதிர்பாராத இடம் ஒன்றில் கிடைத்து, அதிர வைத்திருக்கிறது. அதிகாலை
தென்னாபிரிக்காவில் இருந்து வந்திறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
ஒன்றின் கீழ்ப் பகுதியை திறந்த பணியாளர்கள், அதற்குள் இறந்த மனிதன்
ஒருவரின் உடல் கிடந்ததை கண்டு அலறினர்!
இறந்த உடல் காணப்பட்ட விமானம், போயிங் 747 ரக விமானம். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து வந்திருந்தது.பயணிகள் யாரும் செல்ல முடியாத, விமானத்தின் அடிப்புறத்தில், பக்கேஜ்கள் வைக்கும் கார்கோ கேபினுக்கு அருகே லேன்டிங் கியர் இருக்கும் பகுதி அது. அங்கேதான், இறந்த மனிதரின் உடல் கிடைத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் விமானம் புறப்படுவதற்கு முன்னரே, விமானத்தின் அடிப் பகுதிக்குள், ஒரு நபர் எப்படியோ புகுந்து மறைந்து இருந்திருக்கிறார். பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லாமல், பிரிட்டன் செல்ல சுலபமான வழியாக இதை அவர் கருதியிருக்கலாம். ஆனால், விமானம் பறக்கும்போது மேலேயுள்ள அழுத்தம், மற்றும் மிகக்குறைந்த வெப்பநிலையை மனித உடலால் தாங்க முடியாது என்ற உண்மை, அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
விமானம் 20,000 அடி உயரத்துக்கு செல்லும்போதே இவரால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். 30,000 அடி உயரத்தை அடைந்தவுடன், உயிரை விட்டிருப்பார். அட்லான்டிக் சமுத்திரத்தை கடக்கும் 747 விமானங்கள் பொதுவாக 36,000 – 38,000 அடி உயரத்தில் பறப்பது வழக்கம்.
தென்னாபிரிக்கா விமான நிலைய அதிகாரி ஒருவர், “இரவு 8.40-க்கு விமான நிலைய பாதுகாப்பு வேலி உள்ள பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடமாடியதாக ரிப்போர்ட் உள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்லும் முன், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.
ஓடியவர்தான், விமானத்தின் கீழ் பகுதியில் சென்று மறைந்திருந்து, உயிரை விட்ட நிலையில், லண்டன் வந்து இறங்கியிருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக