அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன் :
அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த காவல்
ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.
கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன்.
கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில் மௌனம் சாதித்து வருகிறது.
கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.
கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் மாணவி கடத்தப்பட்ட நள்ளிரவு 12.00 மணிமுதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம் அந்த மாணவிக்கு நடந்தது என்ன என்பதை சட்ட ஒழுங்கு காவல்துறை வேண்டுமென்றே தன் சக காவல்துறை நண்பரைக் காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்கிறது. அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைகள் புலன் விசாரணையில் வெளிக் கொணரப் படவேண்டும்.
மாணவி கடத்தப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும். உரிய குற்றப் பிரிவுகளில் கண்ணனின் மீது வழக்குப் போடவேண்டும்.
காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் பெண் முதல்வர் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கும் அநியாயத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களும் குற்றத்தை மறைத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த. பானுமதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மகளிர் ஆயம் தஞ்சை தோழர் காந்திமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி திருச்சி தோழர் கவித்துவன், தோழர் ராசாரகுநாதன், தோழர் இனியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆய்வாளர் கண்ணனையும், அவனுக்குச் சலுகை காட்டும் காவல்துறையையும் கண்டித்து கண்டனை உரையாற்றினார்கள்.
சமூகப் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராகவும் ஆய்வாளர் கண்ணனுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு போலிசுக்கு உள்ளது. ஒரு போலிஸ்காரர் எளிதில் யாரையும் கூட்டிச் செல்ல முடியும். ஏனெனில் அவர்களுக்கு அந்த பவர் இருக்கிறது. ஒரு போலிஸ் அழைத்து செல்லும் போது, அவர் குற்றம் செய்யும் வரை அவரை கேள்வி கேட்க முடியாது. போலிஸ் அல்லாத ஒரு நபர் கூட்டிசென்றால் உடனே கேள்வி கேட்க முடியும். இப்படிப்பட்ட சலுகையை, உரிமையை வைத்திருக்கும் போலிஸ், அதிகார துஷ்டபிரயோகம் செய்ததால், அவருக்கு கொடுக்கப் பட வேண்டிய தண்டனை மற்றவர்களை விட கடுமையாகவே இருக்க வேண்டும். அவரை மற்ற பிரஜைபோல பாவிக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வாறு செய்த ஒரு மும்பை போலிசுக்கு ( அவர் புணரமுடியாமல், பெண் மீது படுத்து, முத்தம் கொடுத்து, புணர முயற்சித்தார் என்ற காரணத்திற்காக) கற்பழிப்பு குற்றம் சுமத்தி ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை விதித்தது பாம்பே உயர்நீதி மன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக