கேம்பிரிட்ஜ்: மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி எழுதிய ஒரு கட்டுரை, அவர் விசிட்டிங் புரபஸராக பணியாற்றி வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இனி சாமி எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கோடை கால வகுப்புகளை எடுக்கும் பேராசிரியராக சாமி நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இது பகுதி நேரப் பணியாகும். இந்த நிலையில் சாமிக்கு ஹார்வர்ட் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத துவேஷத்துடன் சாமி நடந்து கொள்வதாக அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சாமி எழுதிய கட்டுரைதான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி விட்டது.
சாமி இனி பாடம் நடத்தக் கூடாது, அவரை நீக்குங்கள் என்று கூறி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெழுத்திட்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மத துவேஷத்தைத் தூண்டும் வகையில் சாமி நடந்து கொள்கிறார். எனவே அவரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக ஒரு ஆங்கில நாளிதழில் சாமி எழுதிய கட்டுரையில்,
இந்தியாவில் முஸ்லீம் சமுதாயத்தினர் அமைதியான முறையில் தீவிரவாதம் எண்ணம் படைத்தவர்களாக மாறுகிறார்கள். அப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். படிப்படியாக தங்களது போக்கை மாற்றிக் கொள்ளும் அவர்கள் ஒரு கட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக தற்கொலைப் படையைப் போல மாறி விடுகிறார்கள்.
எங்களது மூதாதையர் இந்துக்களே என்று சொல்லும் முஸ்லீம்களை மட்டுமே இந்தியாவில் தேர்தலில் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சாமி.
இதேபோல காஷ்மீர் குறித்து அவர் கூறுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முன்னாள் ராணுவத்தினரை குடியேற வைக்க வேண்டும். அந்தப் பகுதி இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் நிரந்தரமான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார் சாமி.
அவரது இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சாமியின் கருத்து மதவாதத்தை திணிக்கும் கருத்து, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவர் எழுதியுள்ளது இரு மதங்களுக்கு இடையிலான துவேஷத்தை வளர்க்கும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் ஹார்வர்டுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாமி போன்றவர்களுக்கு ஹார்வர்ட் போன்ற உயரிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அடிப்படை சகிப்புத்தன்மை, அடுத்த மதத்தின் மீதான மரியாதை ஆகியவற்றைக் கூட சாமி கொண்டிருக்கவில்லை. இது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
இப்படிப்பட்ட ஒருவர், தான் போதிக்கும் கல்வி நிறுவனத்தில் பயிலும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மாணவர்களை ஒரே மாதிரியாக பார்ப்பார், போதிப்பார் என்று நம்புவது கடினம். அவரது கருத்துக்கள் ஒரு மதத்தை பெருமளவில் இழிவுபடுத்துவதாக உள்ளது. தான் சார்ந்த மதத்தைத் தவிர மற்ற மதங்களை அவர் வேறுபட்ட பார்வையில் பார்க்கிறார் என்பதும் நிரூபணமாகியுள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து சாமி கூறுகையில், எனது கட்டுரைக்கு இந்தியாவில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இடதுசாரி தீவிரவாத எண்ணம் கொண்ட சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றபடி எனது கட்டுரைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் கொடுத்துள்ள கோரிக்கையை தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்ந்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பாடம் நடத்தி வருகிறார் சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
சாமிக்கு நாக்கிலே சனி என்பது தெரிந்த விடயமே ஆனாலும் சில வேளைகளில் இவர் கூறும் கருத்துக்கள் சுவாரசியமாக இருந்துவிடுவது உண்டு . அரசியலில் சிறந்த நகைச்சுவையாளர் என்ற தனது பாத்திர மகிமையை இவர் நெடுங்காலமாக தக்க வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக