வியாழன், 28 ஜூலை, 2011

நல்லூர் திருவிழாவில் இம்முறை தமிழ்ப் பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவில் இம்முறை தமிழ்ப் பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா இதனைக் கூறியுள்ளார். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.இதில் மேற்கண்டவாறு முதல்வர் கூறினார்.


இதில் மேலும் கலந்துரையாடப்பட்டதாவது:
ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனைகளைத் தடைசெய்ய வேண்டும். இதன்மூலம் பொலித்தீன் பாவனைத் தடை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இதற்கான செயற்பாடுகள் அவசியம் என்று ஆணையாளர் மு.செ.சரவணபவ குறிப்பிட்டார்.திருவிழாக் காலத்தில் பணியில் ஈடுபடும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ். பிரிவு, சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் தொண்டர் அமைப்புக் கள் வழமைபோன்று தமது செயற் பாடுகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளன.அவசர சிகிச்சைக்கெனப் பயன்படுத்தப்படும் அம்புலன்ஸை அனைத்து வீதித்தடைகள் ஊடாகவும் அனுமதிக்க வேண்டும் என்று யாழ்.செஞ்சிலுவைச்சங்கத் தலைவர் பேராசிரியர் கே.கணேசலிங்கம் கோரிக்கை விடுத்தார். தண்ணீர்ப் பந்தல்களில் வழங்கப்படும் அனைத்துப் பானங்களும் சுத்தமாகவும் சுகாதார முறைகளைக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: