சனி, 30 ஜூலை, 2011

நீதிபதி தினகரன்:நீதித்துறை மீது நம்பிக்கையில்லை

டெல்லி: தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இடம்பெற்ற சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தினகரன் ராஜினாமா செய்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதை இந்த சமூகமும் அரசியல் அமைப்பும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, விரும்புவதும் இல்லை. காலகாலமாக நடந்துவரும் இந்த அநீதிதான் எனக்கும் நேர்ந்துள்ளது, என தினகரன் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினகரன் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த தினகரன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமிழகத்தில் ஏராளமான நிலங்களை சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக அவரும், அவர் குடும்பத்தினரும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், சிக்கிமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக இது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பியதை அடுத்து, விசாரணைக்காக குழு அமைத்து குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு மேல் நீதிபதியாக தொடர விரும்பவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் என்னை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்,' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்

தனது ராஜினாமா குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நானோ என் குடும்பத்தினரோ எந்த நிலத்தையும் யாரிடமிருந்தும் அபகரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டே மோசடியான பொய்யானது. என் பெயரிலோ, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரிலோ எந்த நிலமும் இல்லை என இந்திய சர்வே துறையே தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அந்தக் குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கி என்னை அசிங்கப்படுத்துகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் உயர்ந்த இடத்திலிருப்பதை விரும்பாத சக்திகள் செய்யும் சதி இது.

நான் இப்போது என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு ப்ரீலான்சராக இப்போது பேசுகிறேன். சாதியை ஒரு சாக்காக காட்டி அனுதாபம் தேட நான் முயலவில்லை. நாட்டில் நிலவும் நடைமுறை எதார்த்தத்தைச் சொல்கிறேன். என்னைப் போன்றவர்கள் அதிகார பீடத்தில் இருப்பதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.

நீதித்துறை மீது நம்பிக்கையில்லை

என் மீதான விசாரணைக் கமிட்டி மீதோ, நீதி விசாரணையிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையே இல்லாமல் புனையப்பட்ட இந்த வழக்குக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதை நினைத்தால், நீதித் துறை மீதே நம்பிக்கை இன்மை தோன்றுகிறது," என்றார்.

கருத்துகள் இல்லை: