வெள்ளி, 29 ஜூலை, 2011

லண்டனில் சுமந்திரன் கூறியமை தமிழ்க் கூட்டமைப்பின் கருத்தல்ல அரியநேத்திரன் கூறுகிறார்

கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்த கூற்றை கொண்டு அது கட்சியினுடைய கருத்தாக கருதுவது தவறானது.அந்த வகையில் லண்டனில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தவற்றை கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுப்பது தவறெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ப ல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அங்கு அவர் தெரிவித்தவை அவரது கருத்தாகவுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.அவ்வாறு எண்ணுவது தவறானதாகும். ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. எமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுப்பதாயின் கட்சியிலுள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்தையும் கவனத்தில் கொண்டு முடிவினை மேற்கொள்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரோ அல்லது விரோதமானவரோ அல்ல. அவர் அதில் உறுதியாகவுள்ளார் என்பது எனக்கு தெரியும். அவர் அந் நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கே பதிலளித்துள்ளார். அவர் தனது உரையில் அவ்வாறு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டு கூற விரும்புகின்றேன். எனவே அவருக்குள்ள கருத்துச் சுதந்திரத்தினை கொண்டு கட்சி தீர்மானம் என்பது பிழையானது.விமர்சிப்பது தவறானது. எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் 10 ஆவது பேச்சுவார்த்தை இடம் பெறுகின்றது. முழு இலங்கைக்கான தீர்வு தொடர்பில் பேசவில்லை. வடக்கு, கிழக்கு தீர்வு குறித்தே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது பிரதிநிதிகள் என்பதை நிரூபித்துள்ளனர். எனவே தெரிவுக்குழுவெனவும் வேறு வழிகளிலும் இழுத்தடிக்காது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் கோருகின்றேன்.

கருத்துகள் இல்லை: