வெள்ளி, 29 ஜூலை, 2011

Jeyalalitha சாய ஆலைப் பிரச்னைக்கு ரூ.200 கோடியில் தீர்வு


திருப்பூர் சாயக் கழிவுநீர் பிரச்னை குறித்து, சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடம
சென்னை, ஜூலை 28: திருப்பூர் சாயக்கழிவு பிரச்னையைத் தீர்ப்பதற்கான புதிய தொழில்நுட்பம் இரண்டு மாதங்களில் அமல்படுத்தப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வசதியாக, ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்துக்கும் தலா ரூ.10 கோடி என மொத்தமாக ரூ.200 கோடி வட்டியில்லாத கடனாக வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் உள்ள சாயப் பட்டறை உரிமையாளர்கள் மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மாலை தனித்தனியே சந்தித்துப் பேசினார் முதல்வர். இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:அதிமுக அரசு அமைந்த பிறகு, திருப்பூரில் சாய பட்டறை பிரச்னைக்குத் தீர்வு காண நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:திருப்பூர் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றத்தில் ஜீரோ நிலையை எட்டுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை தமிழ்நாடு நீர் முதலீட்டுக் கழகத்தின் மூலம் அங்குள்ள அருள்புரத்தில் சோதனை முறையில் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இப்போது பெறப்படும் 20 சதவீதம் கழிவுநீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து உப்பு நீரை மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இதுவரை வேறெங்கும் பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த புதிய தொழில்நுட்பத்தை அனைத்து கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிலும் கடைப்பிடிக்க இயலுமா என்பது 2 மாதங்களுக்குப் பிறகு தெரிய வரும்.குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் 20 சதவீதம் கழிவுநீர் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் ஏழு சதவீதமாகக் குறைக்கப்பட்டு நீர் ஆவியாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்ட நீரும், பெறப்படும் உப்பும் மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது.இந்தத் தொழில்நுட்பத்தை திருப்பூரில் கடைப்பிடிக்க இயலுமா என்பதை ஆராய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மற்றும் திருப்பூர் சாயப் பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு இந்த வாரத்தில் குஜராத் மாநிலத்துக்குச் செல்லும்.பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இரண்டு தொழில்நுட்பங்களில் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க ஒவ்வொரு நிலையத்துக்கும் சுமார் ரூ.10 கோடி தேவைப்படும். அதாவது, மொத்தத்தில் சுமார் ரூ.200 கோடி தேவைப்படும். அந்தத் தொகை வட்டியில்லாத கடனாக அரசால் வழங்கப்படும்.குஜராத் மாநிலத்தில் பின்பற்றப்படும் தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பது என்றாலும், அருள்புரத்தில் சோதனை முறையில் உள்ள தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது என்றாலும் சுமார் இரண்டு மாதங்கள் ஆகும். எனவே, எந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பது என்பது குறித்து இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும்.அதற்கான கூடுதல் சுத்திகரிப்பு உபகரணங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், சோதனை முறையில் மூன்று மாதங்கள் இயங்கி பிறகு உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கும்.இழப்பீடு; அணை தூய்மை: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்தவும் ரூ.49.29 கோடி அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், ரூ.37.11 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்த ரூ.6.77 கோடி பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.11.96 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தொகை ரூ.18.38 கோடியாகும். இழப்பீடு இன்னமும் வழங்கப்படாத விவசாயிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 838. விவசாயிகள் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகே இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க இயலும். ஆனாலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ரூ.18.38 கோடியை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதைத்தவிர, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.62.37 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வட்டியுடன் இப்போது ரூ.67 கோடியாக உள்ளது. அதில், ரூ.25 கோடி உயர் நீதிமன்றத்திலும், ரூ.42 கோடி மாவட்ட ஆட்சியரிடமும் உள்ளது. இந்தத் தொகை நீதிமன்ற உத்தரவைப் பெற்று விவசாயிகளுக்கு இழப்பீடாகவும், பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை சீர் செய்யவும் பயன்படுத்தப்படும்.மேலும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு அந்த நிலங்களில் விவசாயிகள் என்ன பயிர் செய்யலாம் என்பதற்கான அறிவுரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முக்கிய அம்சங்கள்...* திருப்பூர் அருள்புரத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பம் அல்லது குஜராத்தில் உள்ள தொழில்நுட்பத்தை பின்பற்றுவதா என 2 மாதங்களில் முடிவு.* சாயப் பட்டறை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய குழு குஜராத் பயணம்.* சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ.200 கோடி வட்டியில்லாத கடன்.* சாய நீரால் பாதிக்கப்பட்ட நிலங்களில் பயிர் செய்வது குறித்து ஆய்வு.* பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு.

கருத்துகள் இல்லை: