சிறுபராயத்தில் வைராக்கியத்தை ஊட்டிவிட்டு பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
பிள்ளைகளின் மனதிற்கு பாதுகாப்பளிக்கவேண்டியது பெற்றோர், வயதுவந்தோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும். பிள்ளைகள் விடயத்தில் பிரபல்யம் மற்றும் இலாபத்தை விடவும் பிள்ளைகளின் பிள்ளை பருவம் முக்கியமானதாகும் என்றும் அவர் சொன்னார்.கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் நற்பிரஜையாக இருக்கின்ற நபர்களிடத்தில் அச்சம்,பயம் பொறுமை மற்றும் நற்பழக்கவழக்கங்களை பாடசாலைகளே ஊட்டுகின்றன. எதிர்கால பிரஜைகளிடத்திலும் பாடசாலைகளே இவற்றை ஊட்டுக்கின்றன. எனினும், தற்காலத்தில் வளர்ச்சியடைந்த கணினி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக ஒருவருக்கு தனியாகவேனும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்ற கருத்துக்களை அந்த தொழில்நுட்பத்திலிருந்து பெற்றுக்கொள்ள இயலாது மனிதர்களிடத்தில் தொடர்புகளை ஏற்படுத்தும் கலையையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.
மனிதத்தன்மையின் பெறுமதிக்கு ஆரம்பத்தில் இடம் கிடைப்பது பாடசாலையில் தான் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். தனியாக பாடத்தை கற்பித்து பரீட்சையில் சித்தியெய்தினால் வாழ்க்கை நன்மையானது என்று பலரும் நினைக்கின்றார்கள் எனினும் அதன் ஊடாக நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ இன்றேல் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்விதமான பிரயோசனமும் இல்லை.
அவர்கள் தொடர்பில் எவ்விதமான பொறுப்புணர்வும் ஏற்படாது. சிங்கள,தமிழ்,முஸ்லிம் என பாடசாலைகளை வேறுபடுத்தி பிள்ளைகளிடத்தில் சிறுகாலத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி அவர்கள் வயதானதன் பின்னர் பிரிவினை இருக்ககூடாது என்று கூறுகின்ற சமுக முறைமையானது தவறானதாகும். சிறுபராயத்திலேயே வைராக்கியத்தை ஊட்டியதன் பின்னர் ஐக்கியப்படுத்த முயல்வது வேடிக்கையான காரியமாகும் அதில் எவ்விதமான பிரயோசனமும் இருக்காது.
இலத்திரனியல் ஊடகங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கையில் பிள்ளைகளை சுதந்திரமாக பயன்படுத்துவதுடன் பெற்றோர்கள் அதற்கு உடந்தையாக செயற்படுகின்றனர். ஊடகங்கள் இந்தநாட்டு பிள்ளைகளின் திறமை மற்றும் முயற்சியை கட்டியெழுப்புவதற்கு விசாலமான சேவையை செய்யவேண்டும். பிள்ளைகள் விடயத்தில் பிரபல்யம் மற்றும் இலாபத்தை விடவும் பிள்ளைகளின் பிள்ளை பருவம் முக்கியமானதாகும். பிள்ளைகளின் மனதிற்கு பாதுகாப்பளிக்கவேண்டியது பெற்றோர், வயதுவந்தோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக