வெள்ளி, 29 ஜூலை, 2011

லாட்டரி அதிபர் மார்ட்டின் கோர்ட்டில் சரண் இளைஞன் படதயாரிப்பாளர்


திருப்பூர் மாவட்டம், பல்லடம் பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ்வர்(வயது 42). இவரும் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும்(41) சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தியிடம் செய்து வந்த கூட்டு தொழிலில் இருந்து கடந்த சில ஆண்டுக்கு முன் கணேஷ்வர் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கணேஷ்வர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி புகார் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில், `கிருஷ்ணமூர்த்தி தனது உறவினர்களான நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பழனிசாமி, அவருடைய மனைவி சவுந்தரம் மற்றும் சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ரூ.31/2 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை மோசடி செய்து விட்டதாக' கூறியிருந்தார்.
மேலும் ரூ.3 கோடிக்கான வரைவோலை கொடுத்து தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாக கிருஷ்ணமூர்த்தி மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக பிரபல லாட்டரி அதிபரான கோவையை சேர்ந்த மார்ட்டின் மீதும் கணேஷ்வர் புகார் கூறியிருந்தார்.

அதன் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சவுந்தரம், சரவணன், மார்ட்டின் ஆகிய 5 பேர் மீது மோசடி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதில் கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, சவுந்தரம், சரவணன் ஆகிய 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, மார்ட்டினும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, திருப்பூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெறுமாறு மார்ட்டினுக்கு உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் நேற்று காலை 11 மணிக்கு மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் முன் மார்ட்டின் சரண் அடைந்தார்.மாலையில் மார்ட்டினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் நாளை(இன்று) முதல் 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி மார்ட்டின் கையெழுத்து போட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மார்ட்டின் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

கருத்துகள் இல்லை: