செவ்வாய், 7 செப்டம்பர், 2010

டியூஷன் வியாபாரிகள்,சோழியன் குடும்பி சும்மா ஆடாது’

இவ்வருடத்திற்கான தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுற்றுவிட்டது. மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட கையுடன் பரீட்சை மண்டப வாயிலிலே துண்டுப் பிரசுரத்தை பலரும் பகிர்ந்தளித்தனர். என்னவென்று பார்த்தபோது அங்கே காணப்பட்ட வாசகங்கள் மாணவர்களின் பெற்றோர்களை மயக்கும் சொல்லழகில் எழுதப்பட்டிருந்தது.
அதாவது “எதிர்வரும் திங்கள் முதல் பின்வரும் வகுப்புக்கள் நடாத்தப்படுகிறது. விசேடமாக இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மாத்திரம் இவ்வகுப்புக்கள் நடைபெறவிருப்பதால் தங்களது பிள்ளைகளை எமது நிலையத்தில் சேர்த்து அறிவுடமையான இவர்களின் அறிவுப்பசிக்கு தீனியாக நாம் வழங்கும் பாடங்கள் ஊடாக வெற்றிவாகைசூட இன்றே நாடுங்கள்” என்றவாறு எழுதப்பட்டிருந்தன.
‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’ என்பார்கள். எல்லாவற்றுக்கும் பணத்தை அறவிடும் வழிவகைகளை நன்றாக அறிந்திருந்த டியூட்டரிகளின் செயற்பாடுகள் இவை. ஒருமாணவனுக்கு அனுமதிக் கட்டணமாக ரூ 500 உம், பாடக்கட்டணமாக ரூ. 200உம் அறிவிடப்படுகிறது. ஆங்கிலப் பேச்சு, சிங்களம், கணனி ஆகிய பாடங்களே நடாத்தப்படுவதற்குரியதான கட்டணங்கள் இவை.
கடந்த ஒரு வருடமாய் எவ்வித விளையாட்டுக்களோ, வேறு பிராக்குகளோ இன்றி இரவுபகல் பாராது குடும்பத்தவரது சுகதுக்கங்கள் எதிலும் பங்குபற்றாது மிகவும் கண்ணும் கருத்துமாக படித்துவிட்டு ஒருவருடத்திற்கு மேல் அடக்கிய மூச்சை விட்ட பிள்ளைக்கு அடுத்தநாளிலிருந்து இவ்வாறான படிப்புக்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை போட்டிபோட்டு சேவை என்ற பெயரில் பணத்தை கொள்ளையடிக்கும் இவ்வாறான நிலையங்கள் மாணவர்களின் உளரீதியாக தாக்கத்தை அளவிட்டார்களா? அல்லது பிள்ளைகளின் இயல்புகள், பிள்ளைகள் மீதான மனோரீதியான தாக்கங்கள் போன்றவற்றை அறியாதபடியினால் போனால் போகட்டும் என்று விட்டுவிடத்தான் முடியுமா?
பிள்ளைகளின் இயல்புகள்
பிள்ளை என்று கூறுகின்றபோது ஓர் இளம் மனிதனாவான். இப்பிள்ளையை வாழுவதற்குத் தயார் படுத்தும் நிலையே கல்வியாகும். இவ்வாறு கற்கின்றபோது பிள்ளைகள் தமது தனித்துவத்துக்கும், அவர்களது கலாசார பின்னணி நிலைக்கும் ஏற்ப தம்முடைய அனுபவங்களிலிருந்து பெற்றுக் கொள்கிறது. முழுமையான ஒரு விடயத்திலிருந்தே அதன் பகுதிகளைக்கற்றுக் கொள்கிறது. அத்துடன் செவிமடுப்பதன் மூலம் செவிமடுக்கவும், பேசுவதன் மூலம் பேசவும், பார்ப்பதன் மூலம் பார்க்கவும் பிள்ளைகள் விளங்கிக் கொள்கின்றதையும் அறிஞர்கள் புலப்படுத்தியுள்ளனர்.
பிள்ளை தனது அறிவை பெறுவதற்கு தனது பார்வை. ஒலி, தொட்டுணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அசைவுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிடைக்கிறது. அவனது சுற்றாடலில் நடைபெறுகின்ற சம்பவங்கள், அவனது அனுபவங்கள் போன்றன அவனது கற்றலை வளர்ச்சியடையவும், உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணரவும் வைத்து சிறந்த முறையில் வாழ வழிகாட்டுவதே சிறந்த கல்வியாகும். அந்தவகையில் ஆசிரியரிடமிருந்து பெறுகின்ற விடயங்களை உள்வாங்கி அவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதல்ல இன்றைய கற்றல். இது பாரம்பரியமான முறையிலான கற்றலாகும்.
உண்மையில் இன்றைய உலமயமாக்கல் நிலையிலுள்ள அறிவார்ந்த உலகில் இப்படியான நெட்டுருக் கல்வியைத்தான் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு பிள்ளை அனைத்தையும் இழந்துவிடுகின்றான். இது ஏற்புடையதான நிகழ்வாக கொள்ள முடியாது.
சொல்வதைக் கேட்டு மெளனியாகவும், அசைவற்றவனாகவும், கட்டுப்பட்டவனாகவும், இருப்பானாகில் அவனது எதிர்கால வாழ்வும் நிர்மூலமாக்கப்படுகிறது. என்பதுதான் அர்த்தமாகும். எனவேதான் ஏனையோருக்கும் பங்கம் விளைவிக்காமலும், தொல்லைகொடுக்காமலும், மிகவும் மரியாதையுடனும், சுதந்திரமாகவும் அறிவுபூர்வமாகவும் வகுப்பறையில் நடமாடுகின்றபோதுதான் அவன் கட்டுப்பாடுடையவனாக விளங்குவான்.
பிள்ளையின் இடதுபுற மூளையோ பகுப்பாய்வுத்தன்மைக்கும், தொடர்புபடுத்தவும், கருத்தாக்கத்திற்கு அமைந்து உள்ளவற்றை உள்ளவாறே கொள்ளும் தன்மையுடையது. அதேவேளை வலதுபுற மூளையோ உணர்வுகளை உருவாக்கவும், அகவயத்தன்மை கொண்டவற்றை உள்வாங்கவும், முழுமையைக் காணும் இயல்புள்ளது. எனவேதான் பிள்ளையின் இரு மூளைப்பகுதிகளும் ஒன்றாக ஒருங்கிணைந்து சிறந்த முறையில் சிறப்பாக இயங்குகின்றபோது அவன் நல்முறையில் கற்றுக் கொள்ள வழிகிடைக்கிறது. இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு தம்மிடம் வருகின்ற பிள்ளையை அறிந்து கற்றலுக்கான வழிவகைகளை ஏற்படுத்துதல் அவசியமாகும்.
கல்வியும் பெற்றோரும்
தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெருங்கனவுகளில் மூழ்கியுள்ளனர். பெற்றோர்கள். தமது குழந்தைகள் மூலம் தன்னால் அடைய முடியாததை அடைவதற்காக அல்லும் பகலும் தனது குழந்தைகளின் தலைமீது சுமைகளை ஏற்றுவதற்கு இதுபோன்ற பாடசாலையின் ஆசிரியரையும், வெளியாரையும், பல்வேறு நூல்களையும், வினாப்பத்திரங்களையும் வாங்கிவாங்கி மேலும் சுமையத்தான் கூட்டுகின்றார்களே தவிர பிள்ளையின் சுகநல, உளநல, உடல்நலம் போன்றவற்றில் எவ்விதமான அக்கறையும் கொள்வதாக தெரியவில்லை.
இதனைக் கருத்திற்கொண்டே குறிப்பாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக தயார் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு பிள்ளை தள்ளப்படுகிறது. பெற்றோரின் அளவுக்கதிகமான ஆசையின் காரணமாக பிள்ளையின் கற்றல் முதிர்ச்சிக்கு முன்னராகவே அளவுக்கதிகமான கற்றல் பாரத்தை உள்வாங்குகின்ற போது நாளடைவில் அக்குழந்தை கல்வியில் நாட்டம் அற்றவனாக மாறி காலப்போக்கில் உயர் கல்வியில் அவர்களால் சிறப்பான பெறுபேற்றினை பெறமுடியாது போவார்கள். பிரபல பிள்ளை கல்விச் சிந்தினையாளரும், முன்பள்ளிக் கல்வியை அறிமுகப்படுத்தியவருமான மொன்டிசூரி அம்மையார் அவர்கள் “அடையமுடியாத ஒன்றுக்காகப் பிள்ளைகளைத் துன்புறுத்த வேண்டாம்” என்று கூறுகின்றார்.
எது எப்படியிருப்பினும் பெற்றோரின் கவலை பிள்ளையின் உளரீதியான தாக்கத்திற்கும் அப்பால் பிள்ளையின் கல்வி பூரணத்துவம் அடைய வேண்டும் என்றால் வெளியாரின் டியூசன் கல்வியே கதி என்று நினைக்கும் அளவுக்கு இன்றைய பாடசாலைக் கல்வியானது மதிப்பிளந்து காணப்படுகின்ற ஒரு போக்கும் சில பெற்றோர்களிடம் காணப்படுகிறது.
தாயும் தந்தையும் மாறி மாறி புலமைப்பரீட்சைக்கு ஆயத்தம் செய்கின்ற ஒரு நிலைமையை கருத்திற் கொண்டுதான் என்னவோ பரீட்சை எழுதிய கையோடு இவ்வளவு தொகைகளை அறவீடு செய்கின்ற ஒரு நிலைமை இன்று கிராமப்புறங்களில் காணப்படுகின்றன. இந்தக் கவலையை போக்கிட இப்பரீட்சைக்கு விரைவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்வியமைச்சரின் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. அதன்படி இம்முறை பரீட்சை எடுத்த மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகளின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்பதாக கல்வியமைச்சர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆர்.டி. லொயிட் (1978) எனும் கல்வியலாளரின் ஓர் அறிக்கையின்படி “ஐக்கிய இராச்சியத்தில் பிறக்கின்ற ஒரு குழந்தை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுவதிலும் பார்க்க பத்துமடங்கு கூடுதலான வாய்ப்பு மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறது” என்கிறது அவரது அறிக்கை.
இதன் பிரகாரம் பார்க்கின்றபோது கடந்த காலங்களிலிருந்தே நமது நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருந்த வண்ணமே உள்ளன. இவ்வாறான நிலையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அற்றவர்களாகவே தொடர்ந்தும் இருக்கப் போகின்ற ஒரு நிலைமைக்கு பரீட்சையின் முடிவுகளும் இம்மாணவர்கள் பலருக்கு அமையப் போகின்றன என்பது மட்டும் உண்மையாகும்.
டியூஷன் நிலையங்களின் இன்றைய நிலை
உண்மையில் பாடசாலையில் அரசு பல்வேறு வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுத்தும் மாணவர்களுக்கு அவ்வசதிகள் போதாது என்கிற பிரச்சினைகள் வேறு. ஆனால் நமது குழந்தைகள் மாலைவகுப்புக்குச் செல்கின்ற பிள்ளையின் சுத்தம், சுகாதாரம், இருக்கை, சுற்றாடல் போன்றவற்றை கவனிக்காது விடுகின்றோம்.
இவ்வாறான நிலையங்கள் மீது கண்காணிப்பை மேற்கொள்வது இன்றைய சூழலில் பொருத்தமானது என்பதை சுகாதார பரிசோதகர்களும், பிரதேச சபாக்களும் பார்வையிடல் வேண்டும். அத்துடன் இவ்வாறான பணம் உழைக்கும் நிலையங்கள் மீது பதிவுகளை மேற்கொள்வதன் ஊடாக அவர்களது பராமரிப்புக்கள், ஒழுங்கு முறைகள், பண அறவீடுகள் போன்றன வெளிச்சத்திற்கு வரும்.
பரீட்சை முடிந்த கையுடன் டியூசன் கல்வியை ஆரம்பிக்கிறார்கள் என்றால் இம்மாணவர்களின் பெற்றோர் மத்தியில் மீண்டும் தமது பிள்ளையின் படிப்புக்காக எதை விற்றாகினும் அனுப்புவதற்கே தயாராவார்கள். இவ்வாறான பெற்றோர்கள் இருக்கும்வரை டியூஷசன் நடத்துபவர்களும் நடாத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.
உண்மையில் மாணவர்களின் வசதிகளையோ, அறிவை வழங்குதலிலோ அதீத நம்பிக்கை காட்டுவது போல காட்டுகின்ற இவ்வாசாமிகளின் கெடுபிடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதை தடுத்து நிறுத்தி, இவ்வாறு எதுவுமில்லாது அமைக்கப்பட்டுள்ள நிலையங்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதுதான் ஒழுங்குமுறையான நிலையங்கள் அமைப்பதற்கும், சுற்றாடல் சுத்தமான ஒழுங்குமுறையில் காணப்படுவதற்கும் ஏதுவாக அமையும்.
கடந்த காலங்களில் இதைப்பற்றி பெரிதாக யாரும் கவனிப்பதில்லை. இன்று டெங்கு போன்ற சமுதாயத்தை தாக்குகின்ற நோய்கள் உலாவருகின்ற காலம். மாணவர்கள் ஒன்று சேரும் இடங்கள் பாடசாலை அதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களது கடமையாகும். வைத்திருக்காதபோது அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை அண்மைய செய்திகளாகும்.
ஆனால் இன்று டியூட்டரிகள் இயங்குவதைப் பார்க்கின்றபோது. அதனைச் சுற்றிவர குப்பை கூழங்களும், மழை பெய்தால் ஒழுகின்ற கூரைகளும், சுற்றிவர வேலியோ இன்றி மாணவர்கள் மணல் தரையில் பலகை வாங்கில் இருந்து கொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து கற்பிக்கப்படுகின்ற ஒரு இடமாகத்தான் இந்த டியூட்டரிகள் காணப்படுகின்றன.
எனவே, மாணவர்களினது இளமைத்துடிப்பை தடைசெய்யக் கூடியவாறான விடயங்களுக்கு பெற்றோர் ஈடுபடாது. பிள்ளையின் உளநலத்தில் அக்கறை செலுத்துவதுடன், அவர்களது படிப்பிலும் அதிகூடிய கவனம் செலுத்துவதில் மாத்திரமன்றி வேண்டுமென்றே டியூசன் கல்வியில் தங்களது காலத்தை கடத்தும் டியூட்டறிகள், அவர்கள் அறவிடும் பணம் போன்றவற்றிலும் பிள்ளையின் நலன், அவர்களது அனைத்துவிடயங்களும் பாதிப்பு ஏற்படாதவாறு அமைந்திட பாதுகாவலானாய் இருந்திட பெற்றோர் முன்வரல்வேண்டும்.

கருத்துகள் இல்லை: