ஞாயிறு, 1 ஜூன், 2025

ஜனவரி முதல் டிரம்ப் விதித்திருந்த அனைத்து சுங்க வரிகளும் செல்லாது என்று - நீதிமன்றம்

 ஸ்ரீதர் சுப்பிரமணியம்  ஜனவரியில் பதவியேற்றது முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது தன்னிச்சையாக கடுமையான சுங்க வரிகளை விதித்து வந்தார். 
தனது ஐந்து வயது மூளைக்குத் தோன்றிய வரிகளைப் போட்டு 'உனக்கு 100%, அவனுக்கு 150%, இவனுக்கு 175%' என்று விளையாடி வந்தார். அந்த விளையாட்டுகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் உற்பத்தியை பாதித்தன. இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளை சரிய வைத்தன. 
அவரின் விளையாட்டு முடிவுக்கு வரும் போலத் தெரிகிறது. 
அந்த சுங்க வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பதியப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளில் இரண்டில் தீர்ப்பு வந்திருக்கிறது. 
ஜனவரி முதல் டிரம்ப் விதித்திருந்த அனைத்து சுங்க வரிகளும் செல்லாது என்று பன்னாட்டு வர்த்தகத்துக்கான அமெரிக்க ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 


தற்போது அமலில் இருக்கும் சுங்க வரிகள் அனைத்தையும் இன்னும் 10 நாட்களில் அமெரிக்க அரசு திரும்பப் பெற வேண்டும், என்றும் கெடு விதித்திருக்கிறது. 

காரணம், இப்படி மனம் போனபடி சுங்க வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை; பன்னாட்டு அவசரகால பொருளாதார அதிகார சட்டம் 1977 (IEEPA) அந்த அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என்று அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. 

இது டிரம்ப்பின் கொள்கை முழக்கத்துக்குக் கிடைத்திருக்கும் பெரும் பின்னடைவு. 
எதிர்பார்த்தபடியே வெள்ளை மாளிகை இந்தத் தீர்ப்பை கண்டித்திருக்கிறது. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது?' என்று கோபக்கணை எழுப்பி இருக்கிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சட்ட வடிவங்களை வைத்துதான் அரசின் முடிவுகளை நீதிமன்றம் ஆராய்கிறது. 
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கொண்டு வந்த சட்டத்திலேயே ஆட்சியாளர்களுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதைத்தான் நீதிமன்றம் புரிந்து கொண்டு இந்தத் தீர்ப்பை சொல்லி இருக்கிறது என்று யாராவது அந்த ஐந்து வயது சிறுவருக்கு சொல்ல வேண்டும். சொன்னாலும் அந்த மூளைக்கு அதெல்லாம் புரியுமா என்று தெரியவில்லை. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யலாம்; கண்டிப்பாக செய்யும். எனினும், சுங்க வரிகளால் பாதிப்புற்ற நாடுகளுக்கு இப்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அந்த வரிகளைக் குறைக்க பல நாடுகள் அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அந்தப் பேச்சு வார்த்தைகளில் சுணக்கம் ஏற்படும். நடத்தும் பேரங்களில் அந்த நாடுகள் கொஞ்சம் முரண்டு பிடிக்க முயலலாம். அது டிரம்ப் குழுவை மேலும் பலவீனப்படுத்தலாம். 
அதாவது 'டிரம்ப்புக்குப் பெரும் தலைவலி' எனும் முதற்பக்க செய்தியுடன் இந்த நாள் ஸ்ரீதருக்கு இனிதாகத் துவங்கி இருக்கிறது.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்

கருத்துகள் இல்லை: