![]() |
ராதா மனோகர் : கலைஞர் எத்தனையோ இமாலய வெற்றிகளை குவித்திருந்தாலும் அவற்றை எல்லாம் மறக்கடிக்கின்ற அளவுக்கு படு மோசமான தோல்விகளையும் கண்டிருக்கிறார்.
தொடர்ந்து ஒரு மணிக்கூறுதானும் அவர் நிம்மதியாக இருந்திருக்கவில்லை என்றுதான் என் உள்ளுணர்வு எப்போதும் கூறுகிறது!
அந்த அளவுக்கு அளவு கடந்த சுமை அவர் தலைமேல் எப்போதும் இருந்திருக்கிறது.
எந்த மனிதனாலும் சுமக்க முடியாத சுமை!
எப்போதும் ஒரே நேரத்தில் பல எதிரிகளோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதிக்கொண்டே அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட முடியுமா என்று தருணம் பார்த்து காய்களை நகர்த்திய ராஜதந்திரி!
இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரி கலைஞர்தான்!
இளமையிலேயே திரைத்துறையில் யாரும் சாதிக்காத அளவு பிரமாண்டமான வெற்றிகளை தொடர்ந்து குவித்தவர் !
அந்த வெற்றிகளை ரசித்து கொண்டே இனிமையாக அவர் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவரால் அப்படி வாழமுடியவில்லை .
அவர் அதற்காக பிறக்கவியில்லையே!
திராவிட மக்களின் இழிநிலை கண்டு வெகுண்டு எழுந்த பெரியாரின் பிள்ளையாயிற்றே,
பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை தன் கனவுகளாகவே கொண்டு களப்பணியாற்றிய கல்லக்குடி வீரனாயிர்றே!
கலைஞரின் ஒவ்வொரு வசனத்திற்கும் தங்கமாக அள்ளிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் காத்திருந்த போதும் அவர் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு பற்றி அல்லவா கவலைப்பட்டார்
அது பற்றி பராசக்தியில் பேசியவர் அல்லவா!
அன்று பராசக்தியின் பேசியதை பின்பு ஆட்சிக்கு வந்ததும் செய்து காட்டியவர் அல்லவா?
தென்மூலையில் கலைஞர் திருவள்ளுவரை நிறுத்தாது விட்டிருந்தால் இன்று அங்கு ஆரிய சவர்கார்கள் அல்லவா முளைத்திருப்பார்கள்?
ஓலைக்குடிசைகளுக்குள் உலக கனவை விதைக்க வேண்டும் என்று அந்த கனவு பெட்டியை ( டிவி) கொண்டு போய் வைத்தவரல்லவா கலைஞர்?
உலகில் எந்த கொம்பனுக்கு இந்த கனவு வந்தது?
கலைஞர் செய்த ஒவ்வொரு நலத்திட்டங்களையும் அந்தந்த காலக்கட்டங்களின் உண்மை நிலவரங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
கலைஞர் பற்றி பொறுமையாக எழுதினால் பல டாக்டர் பட்டங்களை இலகுவாக பெற்றுவிடலாம்.
கலைஞரின் ஆட்சிக்கு நிகராக துணைக்கண்டத்தில் எவரின் ஆட்சியும் மக்கள் நலன் சார்ந்ததாக இருந்ததில்லை!
அந்த மானமுள்ள சுயமரியாதைகாரனின் வாழ்க்கையை பற்றி ஆழமாக சிந்தித்தால் எழுதவே முடியாத அளவு கண்ணீர் வந்து கண்களை மறைத்து விடும்!
12 செப்டம்பர் 2018- மீள் பதிவு : கலைஞரின் நினைவுகளை யார் யாரோ எல்லாம் பேசுகிறார்கள் .. இனியும் பேசுவார்கள்.
நான் கொஞ்சம் உற்று கவனித்தது ஈ வி கே எஸ் இளங்கோவனின் பேச்சுதான்.
அண்ணாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தவர் இளங்கோவனின் தந்தை ஈ வி கே சம்பத் . இவர் தந்தை பெரியாரின் சகோதரர் முறையானவர்.
ஈ வி கே சம்பத் கலைஞர் அண்ணாவோடு முரண்ட்பட்டோ அல்லது என்ன காரணத்திற்காகவோ திமுகவை விட்டு விலகி கண்ணதாசனையும் சேர்த்து கொண்டு தமிழ் தேசிய கழகத்தை ஆரம்பித்தார். .. அது அவருக்கு வெற்றி அளிக்கவில்லை .
பின்பு அவர் காங்கிரசில் ஐக்கியமானார் . அவரின் காலத்திற்கு பின் மனைவி சுலோச்சனா சம்பத் அதிமுகவில் சேர்ந்து நீண்ட காலமாக எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தார்.
எப்படி பார்த்தாலும் சம்பத்தின் குடும்பம் கலைஞர் மீது வன்மத்தோடு இருப்பதாகத்தான் கருதப்பட்டது.
போதாதற்கு ஈ வி கே எஸ் இளங்கோவன் வேறு கலைஞரை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சொற்களால் கற்களை வீசுவது போல வீசுவார்.
அதிலும் ஒருதடவை கொஞ்சம் ஜாதி ரீதியான விமர்சனத்தை ...நா தடுமாறியோ என்னவோ கூறிவிட்டார் .
கலைஞர் நல்லா ஒத்து ஊதுவார் ....
" அவர்தான் நல்லா ஊதுவாரே? என்று இளங்கோவன் கிண்டலடித்தது கலைஞரின் நாதஸ்வர பாரம்பரியத்தை.
இது எல்லா ஊடகங்களும் பலரின் வாயிலும் காரசாரமாக அரை பட்டுகொண்டிருந்தது . திருமதி சோனியா காந்தியின் காதுக்கும் சென்றுவிட்டது.
அவர்கள் . உடனே கலைஞரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்ள உத்தரவிட்டார்.
அதற்கு முன்பே கலைஞர் கூறிவிட்டார் : இளங்கோவன் என் மடியில் தவழ்ந்த குழந்தை. அவனுக்காக கடும் வெய்யிலிலும் கோபி செட்டி பாளையத்தில் வாக்கு சேகரித்தேன் . அவன் நன்றாக பேசட்டும் .. இளங்கோவன் பேசியதில் தவறு இல்லையே . நான் இசைவேளாளர் சமுகத்தை சேர்ந்தவன்தானே? அதை நான் என்றும் மறைத்ததில்லையே?
கலைஞர் இப்படி கூறியது இளங்கோவனின் மனதில் தீராத வலியை உண்டாக்கி விட்டதாக இளங்கோவன் பேசியுள்ளார். .
கலைஞர் இப்படி கூறியிருப்பதற்கு பதிலாக தனக்கு அடித்திருக்கலாமே? அது எனக்கு வலித்திருக்காது.
இன்றுவரை என்மனதில் அவரின் குழந்தை என்ற வார்த்தைகள் எனக்கு வலியை தருகின்றது என்றார் .இளங்கோவனின் பேச்சில் பொய் இல்லை. அவரின் பேச்சுக்கள் எப்பொழுதும் உணர்ச்சி குழம்பாகத்தான் வெளிவரும்!
ஒரு பரம்பரை எதிரி என்று கருதப்பட்டவருக்கு இதை விட வேறு ஒரு காம்பிளிமென்ட் எவராலும் கொடுத்து விடமுடியாது . இளங்கோவனின் மென்மையான உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக