சனி, 3 ஜூலை, 2010

எப்படி ஏமாற்றலாம் என்பது சம்பந்தருக்கு கைவந்த கலை. தான் என்ன நினைக்கின்றாரோ

சம்பந்தரின் மற்றுமொரு அரசியல் நாடகம்!
தமிழ் மக்களை மாத்திரமல்ல, தனது கட்சியிலுள்ளவர்களையே எப்படி ஏமாற்றலாம் என்பது சம்பந்தருக்கு கைவந்த கலை. தான் என்ன நினைக்கின்றாரோ அதனை கனகச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய வல்லமையும் சாதுரியமும் அவரிடம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம்.அதாவது கட்சியிலுள்ள மற்றயவர்களின் விருப்பம். அது சம்பந்தருக்கு உடன்பாடானதல்ல.தனது தலைமையிலான தமிழரசுக்கட்சியிலேயே தமிழ்க் கூட்டமைப்பு தங்கியிருக்கவேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால் அதற்கு மாறாக சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் வேறு வழியிருக்கவில்லை சம்பந்தருக்கு.  அதனால் தமிழ்க் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு விண்ணப்பித்து விட்டார். தமிழக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு என்றே அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவர் அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கு விண்ணப்பம் மட்டுமே செய்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தேர்தல் ஆணையாளரின் முடிவைப் பொறுத்தது. நான் அறிந்த வரையில், ஒரு கட்சியின் செயலாளராக இருப்பவர் இன்னுமொரு கட்சியின் செயலாளராக இருக்கமுடியாது. ஏற்கனவே ஈபிஆர்எல்எவ் என்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் மாவை சேனாதிராஜா. ஆனால் இவர்கள் இருவரும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்கள். இதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. சட்டத்தில் பல தசாப்த அனுபவஸ்தரான சம்பந்தர் இதனை தெரியாமல் செய்திருப்பார் என்று நம்பமுடியவில்லை. அவர் வழக்கம்போல தன் சகாக்களையே ஏமாற்றியிருப்பதாகவே தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை: