ஆண்களின் சொற்களுக்கு பெண்கள் மறுபேச்சு பேசக்கூடாது என்பதுதான் நம்மவர்களில் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆங்காங்கே பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆண்கள் சிலர் இருந்தாலும், விகிதாசாரத்தில் பெண்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் அதிகாரத்தில் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே பல ஆண்களின் விருப்பமாக இருந்து வருகின்றது. |
உலகில் பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு பெருகி வருகின்றது. விண்ணைத் தொட்ட விஞ்ஞானிகளுள் பெண்களும் அடங்குவார்கள். விடுதலைப் போராட்டங்களின் ஈடுபட்ட போராளிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதங்களை ஏந்தி அராஜகத்திற்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக போராடினார்கள். போராடியும் வருகின்றார்கள். குறிப்பாக நமது ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்களில் அதிகம் பெண் போராளிகளை கொண்டிருந்ததும் எண்ணிக்கையில் அதிகமான பெண்போராளிகளை களத்தில் பலி கொடுத்ததும் விடுதலைப் புலிகள் இயக்கமே. ஆனாலும் முதலில் போராட்டத்தில் குதித்து நின்ற ஈபிஆர்எல்எவ், ரெலோ, மற்றும் புளட் போன்ற இயக்கங்களிலும் அதிகளவு பெண் போராளிகள் அங்கம் வகித்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. முக்கியமாக தற்போதைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராளியாக அங்கம் வகித்த ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் பெண் போராளிகள் பிரிவு பலமிக்க ஒன்றாக இருந்தது என்பதை நமது தமிழ் மக்கள் அறிவார்கள். இவ்வாறாக பெண் குலத்தின் பங்களிப்பு என்பது நமது தமிழர் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்று தலைமை தாங்கும் தகைமையைக் கொண்டிருந்தது என்று கூட கூறலாம். இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான் யாழ் மாவட்டத்தின் பல அரசாங்க உயர் நிர்வாகப் பதவிகளில் நமது தமிழ் பேசும் பெண்மணிகள் அமர்ந்துள்ளார்கள் என்ற செய்தியும் காதுக்கு இதமான செய்தியாகவே நம்மவர்களில் பலருக்கு உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி உயர் நிர்வாகப் பதவியாக விளங்கும் அரசாங்க அதிபர் பதவியை நேற்று காலை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட திருமதி எமெல்டா தனது பதவியை ஏற்பதில் சில அரசியல் தலையீடுகள் தடையாக அமைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும், இதையிட்டு பெண்குலம் மனம் தளர்ந்து விடக்கூடாது. இது ஒரு தற்காலிகத் தடையே. எவ்வாறு விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தங்கள் தாக்குதல் இலக்குகளை நோக்கி நகரும்போது ஒரு ஆண் போராளிக்குரிய அத்தனை மனத்துணிச்சலோடு சென்று வெற்றி வாகை சூடினார்களோ அதைப் போலவே வேறு பல துறைகளிலும் நமது பெண்கள் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவர்களாகவே விளங்குகின்றார்கள். நமது தமிழர் சமூகத்தில் உலகெங்கும் எத்தனை ஆயிரம் பொறியியலாளர்கள்? எத்தனை ஆயிரம் வைத்தியர்கள்? தங்கள் கடமைகளில் இவர்கள் முன்னணி வகிக்கின்றார்கள். இவர்கள் வழியொத்து நமது யாழ் மாவட்ட பெண்மணிகளும் தங்கள் ஆற்றலால் முன்னேறியுள்ளார்கள். இன்னும் எத்தனையோ பெண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள். உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதற்காக.. இதை ஆண்கள் சமூகம் தங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று பார்க்காமல் ஆற்றலுக்கு பால் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண அரசாங்க அதிபராக அந்த எமெல்டா தற்போது ஆசனத்தில் அமராமல் இருந்தாலும் அருகிருக்கும் மாவட்டம் ஒன்றில்தான் அவர் தற்போது பதவி வகிக்கின்றார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அங்கு உயர் நிர்வாகப் பதவிகளில் பிரகாசிக்கும் பெண் குலத்தின் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை செவ்வனே செய்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று உதயன் வேண்டுகின்றான். கனடா உதயன்: ஆசிரியர் தலையங்கம் |
வெள்ளி, 2 ஜூலை, 2010
அரசாங்க அதிபர் பதவியை பதவியை ஏற்பதில் சில அரசியல் தலையீடுகள் தடையாக அமைந்து விட்டதாக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக